Home>>கட்டுரைகள்>>சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள் 
கட்டுரைகள்வரலாறு

சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள் 

ஒவ்வொரு சொற்களுக்கு பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்று மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வார். ஆனால் சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள் ஒளிந்திருக்கிறது. மனிதன் என்றால் கோபம் வருவது இயல்பு. கோபத்தின் போது ஆத்திரத்துடன் வசைபாடுவதும் மனித இயல்பு. ஆனால் நாம் வசைபாட  பயன்படுத்தும் வசைச்சொற்களின் அர்த்தம் என்னவென்று பெரும்பாலும் நமக்கு தெரிவதே இல்லை. அதற்க்கு அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது.

 

நமக்கு ஒருவர் மீது ஆத்திரம் வரும்போது “நாதாரி நாயே!” “நாதாரிப் பயலே!” என்றெல்லாம் திட்டுவோம். ஆனால் நமக்கு நாதாரி என்றால் என்னவென்று தெரியாது. நாதாரி என்பது மதுரை பகுதிகளில் பன்றி மேய்க்கும் போயர் இன மக்களை குறிக்கும் சொல். அவர்களை அவமானப்படுத்த சாதிய வன்மத்தோடு அச்சொல் வசைச்சொல் ஆக்கப்பட்டது. ஆனால் நாம் “நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்” என்று நகைப்புகாக சொல்கிறோம். நாதாரித்தனம் என்பது பன்றி மேய்ப்பது தான். அது இழிவல்ல. மதிப்புமிக்க தற்சார்பு பொருளாதாரம்.

 

“கேப்மாரி” என்றும் “கேப்மாரித்தனம்” என்றும் நாம் வசைபாடும் சொல்  செங்கல்பட்டு பகுதியில் வாழும் குறிப்பிட்ட இனமக்களை குறிக்கும் சொல்.  வீரம் செறிந்த குறவர் இன பழங்குடி மக்களின் குலப்பெயர் ஆகும். யானைப் படைகளை எதிர்த்து நின்று போரிடும் காலாட்படைக்கு தான் கேப்மாரி என்று பெயர். ஆதியில் இவர்கள் வனங்களை காவல் காக்கும் காப்பு தொழிலை பகலிலும் இரவிலுமாக மாறி மாறி செய்து வந்ததால் காப்புமாரி என்று அழைக்கப்பட்டார்கள். அதுவே மருவி கேப்மாரி என்றானது. 

 

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது தன்னை எதிர்ப்பவர்களை சில குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரை என்று சொல்லி கட்டம் கட்டி வந்தது நமக்கு தெரியும். ஆனால் அதே போல் தங்களை எதிர்க்கும் சில சாதியினரை, சில நபர்களை known depredators (KD) என்று கட்டம் கட்டி வைத்திருந்தார்கள். அது தான் நாம் பயன்படுத்தும் கேடி என்னும் வார்த்தை. கேடி என்ற சொல் திருட்டுத்தனத்தை குறிக்கும் சொல் அல்ல, அந்நிய எதிர்ப்பை குறிக்கும் சொல்லாக தான் நாம் கருத வேண்டும். “சரியான கேடிடா இவன்” என்று சொல்வோம் அல்லவா! அது ஆங்கிலேயன் இன்னும் விரட்டப்படவில்லை என்பதை உறக்க சொல்வது போல் ஆகிறது.

 

அமெரிக்காவின் 39 வது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றில் ஜிம்மி கார்ட்டர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அவருடைய எதிரிகளான குடியரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் அவரை இழிவுபடுத்த ஒரு காரியத்தை செய்தார்கள். தங்கள் வீட்டு நாய்களுக்கு “ஜிம்மி” என்று பெயர் வைத்தார்கள். நாடு முழுக்க நாய்களுக்கு ஜிம்மி என்று பெயர் வைக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள். தற்போது உலகம் முழுக்க “ஜிம்மி” என்பது நாய் பெயராக மாறி இருக்கிறது. இந்தியாவிலும் நாய்களுக்கு ஜிம்மி என்று பெயர் வைக்கிறோம். அமெரிக்கர்களின் வன்மம் எத்தகையது என்பதை இச்செய்தியே நமக்கு உணர்த்துகிறது. 

 

“தேவடியா” என்ற சொல்லின் வரலாறு சில வருடங்களுக்கு முன்பு நமக்கெல்லாம் தெரியாது. ஆனால் இப்போது தெரியாதவர் யாரும் இல்லை. தேவடியா என்றால் கடவுளின் பக்தைகள் என்பதை தற்போது அறிந்துகொண்டோம். ஆனால் இப்போது தான் இச்சொல் மிக கேலியாக ஆக பெரும் மோசமான வசைச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. 

 

காரல் மார்க்ஸ் சொன்னது போல் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் ஒரு வர்க்கம் இருக்கிறதோ இல்லையோ, வரலாறு இருக்கிறது. சில சொற்களின் வரலாற்றில் வன்மம் படிந்திருக்கிறது. வன்மத்துடன் நாம் வசைபாட பயன்படுத்தும் சொற்களின் வரலாற்றில் ஒரு தனி வன்மம் ஒளிந்திருக்கிறது.

 

நிரஞ்சன், மன்னார்குடி

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply