Home>>கட்டுரைகள்>>நான் யார்? 
கட்டுரைகள்

நான் யார்? 

அரக்க பறக்க கிளம்பி, ஏன் சாப்பிடுகிறோம், எதுக்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிட்டு, புடிக்குதோ பிடிக்கலையோ வேலைக்கு போயிட்டு, அங்க இன்னிக்கி வேலை முடிஞ்சா போதும்டானு வேலைய முடிச்சு, மறுபடியும் வீட்டுக்கு வரும்பொழுது ஒரு போருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கும், அந்த நேரம் என்ன வாழ்க்கைடா இது என்று தோன்றும்,

அலுவலகம் சென்று வேலை செய்பவர்கள் முக்கால்பங்கு மனிதர்கள் அனுபவிக்கும் பத்தில் ஒரு பங்கு செயல் தான் இவை,

நாம் யார்? இவையெல்லாம் ஏன் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு நிமிடம் யோசிக்க அநேக நேரம் முயற்சி செய்து இருப்போம்! ஆனால் அந்நேரம் அக்கணமே நினைவுக்கு வருவது பெற்றோருடைய மருத்துவ செலவு, தங்கச்சி கல்யாணம்,  தம்பி, தங்கை படிப்பு, வருங்காலத்திற்கான செலவு, சேமிப்பு, இன்னும் ஏராளம். 

ஆம் நான் இதையெல்லாம்  செய்துதான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு இதுபோல் தினந்தோறும் விருப்பு வெறுப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நீங்கள் ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருப்பதாக எடுத்துக்கொள்வோம், உங்கள் அருகில் ஒருவர் உங்களைப் பார்த்து புன்னகையுடன் சிரித்தாலோ அல்லது அவர் மனதார சந்தோசமாக இருப்பதை நீங்கள் பார்த்தால் உங்கள் மனதுக்கு தோன்றுவது ஒரு சிறு நிம்மதி, அதே அவர் அந்த கணத்தில் உங்களை வேண்டா வெறுப்பாக பார்த்தால், நீங்கள் கடினமாக உணர்வீர்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் பாசிட்டிவ் வைப்ரேஷன், நெகடிவ் வைப்ரேசன் என்று அழைப்பார்கள். நீங்கள் எப்பொழுதும் பிறர் மீது அல்லது பிறரை பார்க்கும் பொழுதும் பேசும்பொழுதும் உங்கள் வார்த்தைகளோடும் உங்கள் பார்வைகளோடும் ஒரு தேக்கரண்டி அன்பைச் சேர்த்தால் உங்களைச்சுற்றி பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்துக் கொண்டே இருக்கும். இந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மையை உண்டாக்கும். 

இது சக மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் நீங்கள் காலையில் பல் துலக்கும் முன்பு, பல் துலக்கியைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு அல்லது வணக்கம் சொல்லுங்கள், நீங்கள் சாப்பிடும் இட்லிக்கு உங்களுடைய காதலைத்  தெரிவியுங்கள்,  நீங்கள் செல்லும் வாகனத்துடன் மகிழ்ச்சியோடு உரையாடுங்கள், சக மனிதர்களுக்கு உங்களுடைய அழகான சிரிப்பைக் காட்டுங்கள்,  உங்களை நீங்களாகவே பாராட்டிக் கொள்ளுங்கள், உங்களுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் நன்றி தெரிவியுங்கள், இவ்வாறு செய்தால் நீங்கள் செய்கின்ற வேலை உங்களுக்குப்  பிடிக்கும், நீங்கள் வீடு  திரும்பும் பொழுது போருக்குச்  சென்று வந்தார் போல் தோன்றாது.

இவையெல்லாம் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஆனந்தத்தில் திளைத்து ஒரு நல்ல ஆன்மாவாக வாழ்கிறோம் என்ற உணர்வு உங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யும். நான் யார் என்ற கேள்விக்கு நீங்கள் யோசிக்க துவங்கினால் அதற்கான விடை இந்த செயல்களில் தான் ஒளிந்திருக்கிறது.

   

பாசிட்டிவ் வைப்ரேஷன் என்கின்ற பேரலை, நம்மை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் என் பதிவை முடிக்கிறேன்.

 

நான் யார் 

பிரகதீஸ்வரன். பா, 

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply