Home>>இலக்கியம்>>ஊரடங்கு தேசத்தின் ஓயாத கால்கள்
இலக்கியம்கவிதை

ஊரடங்கு தேசத்தின் ஓயாத கால்கள்

உயிர்கொய்யும் இராட்சச மிருகமென்றறிந்தும்
கடமை சிறகுகளின் ஸ்பரிசங்களால்
உலக குஞ்சுகளை காத்திடும்
இப்பறவைகளின் கால்கள்…

உடல் முழுவதும் பிடரி முளைத்த
உலக வனத்தின் கோரவரக்கனை
எதிர்த்து நிற்கும் வெள்ளை முயல்களின்
பிஞ்சுப்பாதங்கள்…

அருவத்தின் அருவமாய்
நீளவிருக்கும் விடநாவுகளை
வெட்டியெறியும் விக்கிரமாதித்தன்கள்
வீதிதோறும்  காத்திருக்கும்
காக்கியுடையில் அவர் கால்சுவடுகள் …

குரூரத்தில் குளித்திருக்குமதன்
உடலை வாஞ்சையின் கரங்களால்
வழித்தெடுக்கும் புறத்தழுக்கு நிரம்பிய
புண்ணியவான்களின் பொற்பாதங்கள்…

சேவை நாமமெடுத்து
தியாக சிலுவை சுமந்து
மானுடத்திற்காக மண்டியிட்டுதொழுமிந்த
மாசில்லா தெய்வங்களின் கால்கள்…

உலகத்தின் உய்வுக்காக
உழைத்திருக்கும் கரங்களோடு
ஊரடங்கு தேசத்தில் ஓயாது
இந்த கால்கள்…


(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

உடுமலை
நேசமுடன் ஈசு
9080628870
eswaramesh22@gmail.com

படஉதவி: https://unsplash.com/@svignesh20

Leave a Reply