Home>>அரசியல்>>கல்வித் துறையும் தனித்த அதிகாரம் உள்ள அமைப்பாக வேண்டும்
அரசியல்கல்வி

கல்வித் துறையும் தனித்த அதிகாரம் உள்ள அமைப்பாக வேண்டும்

– ஆசிரியர் ச.அன்பரசு, மன்னார்குடி
(2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


தேர்தல் ஆணையம் போல கல்வித் துறையும் தனித்த அதிகாரம் உள்ள அமைப்பாக உருவாக வேண்டும்.

உடையையும், உணவையும் தேர்வு செய்யும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமை போல கல்வி முறையையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இன்று கேள்விக்கு குறியாகி உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு நம் நாடு அடிமை இல்லை. ஆனால் அவர்களின் மொழிக்கும், உடைக்கும், உணவிற்கும், கல்வி முறைக்கும் நாம் அடிமை.

ஒற்றை வரியில் சொல்லப்போனால் மெக்காலே வகுத்த கல்வி முறையிது. தாகூரும், காந்தியும் வகுத்த கல்வி முறையும் ராணுவப் பள்ளி நவோதயாப் பள்ளி, மத்தியப் பள்ளி, சர்வதேசப் பள்ளி, மாநிலக் கேள்வி முறை, திறந்தவெளிப் பள்ளி என பலவகை கல்வி முறை பின்பற்றப்படும் தேசத்தில் பொது நுழைவுத் தேர்வு மட்டும் சாத்தியாமாகப் போகிறது.

கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து சிறுக சிறுக மத்தியப் பட்டியலுக்கு சென்று கொண்டிருக்கிறது. இது நன்மையா, தீமையா என எனக்கு தெரியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவனுக்கு வங்கியின் பணம் செலுத்தும் படிவத்தை சரியாக நிரப்ப தெரியவில்லை. காணாமல் போன மிதிவண்டி பற்றி யாரிடம் புகை கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. ஏன்? கல்லூரியில் சேர விண்ணப்பத்தை கூட சரியாக நிரப்ப தெரியவில்லை இதுதான் இன்றைய கல்வி முறை.

அரசியல்வாதிகள் மற்ற துறைகளில் செயல்படுவது போல இன்றைய பொழுது நல்லா போனா போதும் என்ற எண்ணம் கல்வித் துறைக்கு உதவாது. அடுத்த பத்தாண்டுகளில், இருப்பது ஆண்டுகளில் என இலக்கு நிர்ணயித்து பயணிக்க வேண்டும். இஸ்ரோ போல, தேர்தல் ஆணையம் போல கல்வித் துறையும் தனித்த அதிகாரம் உள்ள அமைப்பாக அரசியல்வாதிகளின் கையிலிருந்து விடுபட வேண்டும்.

தமிழக கல்வி துறையில் 12 ஆண்டுகள் கழித்து இப்போது தான் பாடத்திட்ட மாற்றம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் புதிய பாடத்திட்டம் மாறி இருக்க வேண்டும். பரவாயில்லை. இப்போது வரும் தேர்வு முறை மாற்றம். தர வரிசை முறை ரத்து என்பன போன்றவை காதிற்கு தேன் தான்.

மாற்றங்கள் வருகின்றன அவை செயல்படுத்தப்படும் விதத்தில் பல்வேறு விதமான கோளாறுகள்.

உதாரணத்திற்கு மேல்நிலை வகுப்புகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த செய்முறை தேர்வுகள் தான் கல்லூரி படிப்பிற்கு அடித்தளம். ஆனால் நூறுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவன் தொடங்கி 10 மதிப்பெண் மட்டும் வாங்கி தோல்வி அடையும் மாணவன் வரை ஏன் செய்முறை தேர்வுக்கு வரவில்லை என்றாலும், வீட்டிற்கு சென்று அழைத்து வந்து கெஞ்சி தேர்வெழுத வைத்து செய்முறைத் தேர்வில் குழு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்கிற நிலை தான் இப்போது.

என்று மன்னார்குடியின் அடையாளமாய் திகழும் தேசிய மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ச.அன்பரசு அவர்களின் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply