Home>>அரசியல்>>மீளும்  தமிழகம்
அரசியல்

மீளும்  தமிழகம்

1991 ஆம் வருடம், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை மாற்ற முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல இடங்களில் பல மாற்றங்களை உருவாக்கி இருப்பினும், தமிழகத்தின் கலாச்சார பண்பாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன. அந்நாளின் நிதியமைச்சராக இருந்த டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட மூன்று எழுத்துக்கள்  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதியது.

LPG என்று ஆங்கிலத்தில் சுருக்கிக் கூறப்பட்ட “Liberalisation, Privatisation, Globalisation” என்ற வார்த்தைகள் தான் அவை. தாராளமையமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் என்ற கொள்கைகள் இந்திய நாட்டிற்கு கிடைத்த வரமென்பது ஒரு புறம் உண்மையாயினும், தமிழக கலாச்சார வாழ்விற்கு சுரண்டப்பட்ட குழியும்  அதுவே.

மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனத் தொழிற்சாலைகள் என வேலைவாய்ப்பை அள்ளித் தரும் பல நிறுவனங்கள் உள்ளே புகுந்தாலும், நம் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற நெடுநாட்களாக காத்துக் கொண்டிருந்த பல கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.

எனினும், பல நூறு ஆண்டுகளாக மக்கள் வாழ்வாதாரத்தின் ஆணி வேராகயிருந்து வரும் உணவு முறைகளை மாற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. பல முயற்சிகளில் தோல்வியை தழுவிய நிறுவனங்கள், இந்திய சந்தையில் காலெடுத்து வைக்க வெறி பிடித்து ஓடத் தொடங்கியது. அவ்வாறு ஓடத் தொடங்கிய நிறுவனங்கள் பல குறுக்கு வழிகளில் தன் இலக்கை அடைய விரும்பின. அவற்றில் சில பின்வருமாறு:

1.    மேகி: நன்கு வேகவைத்த இயற்கை உணவு பண்டங்களை உண்டு வந்த நம் நாட்டில் “2 மினிட்ஸ் நூடுல்ஸ்” என்ற வாக்கியத்தை வைத்து தம் உணவு பொருட்களை விற்க இயலாத நெஸ்ட்லே நிறுவனம், பல நாட்களாக பல லட்சம் செலவு செய்து வெற்றியின் சூத்திரத்தை அறிந்து கொண்டது. ஒரு நாள் பொழுது விடிந்து தங்கள் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்த பெண்கள், கண்களை கவரும் வண்ண பாலிதீன் கவர்கள் கிடப்பதை எடுத்து பார்த்தனர். (பக்கத்து வீட்டில் இருப்பவன் செய்வதை, உடனே செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இந்தியர்கள் என்பதை அறிந்த அந்நிறுவனம், இரவோடு இரவாக வெற்று பைகளை குப்பைத் தொட்டிகளில் கொட்டி நம் நாட்டில் கால் ஊன்ற தொடங்கிற்று).

2. கொக-கோலா: பழங்களின் சாறுகளை பெரும்பான்மையான மக்கள் அருந்தி வந்திருப்பினும், உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்காத கரியமூட்டப்பட்ட தண்ணீர் (Carbonated Water) என்று அழைக்கப்பட்ட சோடாக்கள் , உள்ளூர் மக்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. 777, சில்வர் கப், காளிமார்க் போன்ற குறு நிறுவனங்கள் தமக்கு போட்டியாக அமைவதை விரும்பாத கொக-கோலா நிறுவனம், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி சாலைகளில் அவற்றை உடைத்தும், சில மாதங்கள் தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்களை குறைந்த விலைக்கு விற்றும் சந்தையை கைப்பற்றியது.

3. கோல்கேட்: “உங்க டூத்பேஸ்ட்-ல உப்பு இருக்கா?” என கேட்கும் அதே நிறுவனம் தான், இந்திய சந்தையை கைப்பற்ற “இன்னுமா உப்பையும், கரியையும் வச்சி பல் துலக்குறீங்க?” – என்று 1990 களில் விளம்பரம் செய்ய தொடங்கியது. பற்பசையின் வெண்மை நிறத்திற்காக, மனிதர்களின் சிந்தனை ஆற்றலை சிதைக்கும் தன்மை கொண்ட ஃப்ளூரைட் எனப்படும் ரசாயனம் உபயோகிக்கப்படுகின்றது. இதனை வெளிப்படையாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த நிறுவனம், பற்களின் உறுதிக்கு உப்பு அவசியம் என்பதை உணர்ந்து “Active Salt” என்ற பற்பசையை தற்போது விளம்பரம் செய்தும் வருகின்றது.

கார்ப்ரேட் நிறுவனங்கள் பல சூழ்ச்சிகளை கையாண்டிருப்பினும், வெகு விரைவில் அவற்றின் முகத்திரையை கிழித்து, பாரம்பரியத்தை நோக்கி மீண்டும் படையெடுக்கும் மாநிலம் தமிழகம் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அடுப்பாங்கரை, விவசாயி போன்ற பெயர்களில் உணவகங்களும், இயற்கை அங்காடி, அஞ்சறைப் பெட்டி போன்ற பெயர்களில் மளிகை கடைகளும், மரச் செக்கு நிலையங்களும் உதயமாவதில் பேருவகை.

            இருப்பினும், நீங்கள் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளீர்கள் என்றோ பக்கத்து வீட்டில் பயன்படுத்துகின்றனர் என்றோ எவற்றையும் பின்பற்றாதீர்.  எல்லாவற்றையும் பற்றி அறிந்து தெளிவு பெற்று, அதனை உபயோகித்தல் நலம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் ஒரு முன்னோடியாக செயல்படுகிறது என்றால் அது மிகையாகாது. மீளும் தமிழகத்துடன் நாமும் விடியலை நோக்கி பயணிப்போம்!

G.S.விஜயவர்மன், மன்னார்குடி.

(2050 தை மாதம் திறவுகோல் மின்னிதழிலிருந்து …)

Leave a Reply