என்ன சொல்லியும் கேட்காம
என் மகளும்
எழவு எடுக்கும் நீட் தேர்வ
எழுதத்தான் ஆசைபட்டா . . .
கஞ்சிக்குடிக்க இல்ல . . .
கா காணி நிலமுமில்லை . . .
ஏழைக்கூலி நான்
காவிரி கைவிரிப்பால
கட்டட வேலை பாக்குறேன் . . .
வருகிற வருமானத்துல
எம்புள்ள குட்டிக
கால் வயிறு நனைக்குதுங்க . . .
எம்புள்ள தமிழ்க்கொடி
எங்க ஊரு அரசுப் பள்ளில
எல்லா பாடத்துலயும் முத மார்க்
வாங்குனதுங்க. . .
பாவி மகள
பத்தாம் வகுப்போட
நிறுத்தத் தான் சொன்னேங்க . . .
சிறுவாடு காசு வச்சுருக்கேன்
நோட்டு புக் வாங்கிகுறேன்னு
தானாப் பள்ளியில சேர்ந்ததுங்க . . .
சுகமில்லா அம்மாவ கவனிச்சுட்டு . . .
வீட்டு வேலையெல்லாம் முடிச்சு வச்சு . . .
மணி அடிக்கும் நேரத்துல ஓடுமுங்க . . .
விடியும் வரை புத்தகமும் கையுமா படிக்குமுங்க. . .
எம்புள்ள நல்லா படிக்குதுன்னு
எல்லா டீச்சரும் புகழுவாங்க . . .
எங்கம்மா மாறி சுகமில்லா
எல்லார் அம்மாவையும் காப்பாத்துவேன்
மருத்துவராகப் போறேன்னு . . .
எல்லா பிள்ளைகளிடமும் சொல்லி
மகிழுதுங்க . . .
என்ன சொல்லியும் கேட்காம
என் மகளும் நீட் தேர்வ
எழுதத்தான் ஆசப்பட்டா . . .
வருகி வருமானம் வயித்துக்கே பத்தலையேன்னு
வருத்தமுற்று நிக்கையில . . .
இரண்டாயிர மைலுக்கப்பால
இராசஸ்தான்ல போட்டுருகாங்கன்னு
சொன்னதுங்க . . .
எழவெடுத்த நீட் தேர்வ
எழுதித்தான் ஆகனுமான்னு கேட்டதுக்கு . . .
மூஞ்சத்தூக்கி வச்சுகிட்டு
தேம்பி தேம்பி அழுதுங்க . . .
இரயில்ல போன எத்தனை நாள் ஆகும்னு
எனக்கொன்னும் தெரியல . . .
பணத்துக்கு எங்கேப் போவதுன்னு
எனக் கொன்னும் புரியல . . .
என்னச் சொல்லியும்
கேட்காம என் மகளும்
மருத்துவராக ஆசைபட்டா
பாவி மக எனக்குப் புள்ளையா
பொறந்துத் தொலைச்சுட்டா .. .
அரியலூர் அனிதா புள்ள
கதையாயிடுமோன்னு . . .
என் ஈரக்குலையே நடுங்குதய்யா . . .
— முனைவர் சிவகுமார், மன்னார்குடி.
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)