உழுதுண்டு வாழ்பவரே வாழ்வர் மற்றவர் தொழுதுண்டு பின்செல்பவர்
என்று அழகாக அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றார் வள்ளுவர், ஆனால் இன்றைய விவசாயி ஆளும் அரசியல்வாதிகளால் படும் அல்லல்களும் அவஸ்தைகளும் ரத்தக்கண்ணீர் வரவழைக்கிறது. அரசு சில மானியங்கள் கொடுக்கலாம், சில கடன்கள் தள்ளுபடி (சில மாநிலங்களில்) ஆனால் அதில் பயனடைவோர் யாரெனப்பார்த்தால் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்போரும் சில வசதியானவர்களும்தான்.
கடைநிலையில் உள்ள விவசாயிக்கு எதுவும் சென்று சேர்வதில்லை,அவன் இதற்காக வேலையை போட்டுவிட்டு அலைபவனுமில்லை. தன்மானத்துடன் விவசாயத்தை நம்பி இருப்பவனுக்கு இயற்கை சீற்றத்தின் போதும் மற்றும் பருவமழை தவறும்போதும் ஆட்சியர்கள் மேற்பார்வையில் அவர்களுக்கு தேவையான உதவி செய்தால் விவசாயம் தழைக்கும், நாடு முன்னேறும்.
இதை விட்டு விவசாய நிலத்தில் மீத்தேன் எடுக்க, கார்பன் ஹைட்ரோ வாயு எடுக்க அரசு ஏலம் விடுவதும் உயர் அழுத்த மின்வழி அமைப்பதும் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவதும் அரசு மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா! இந்நிலை நீடித்தால் விவசாயம் என்னாகும் ? அந்நிய நாட்டிலிருந்து அரிசி வாங்கும் அவலநிலை வரும். ஏழ்மைநிலையில் உள்ளோர் பசி பட்டினிக்கு ஆளாவார்கள். சிந்திப்போம், செயல்படுவோம்.
— நெல்லை மு.தமிழ்த்தியாகன்
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)