Home>>கதை>>சிறிய பையில், பெரிய பயணம்
கதை

சிறிய பையில், பெரிய பயணம்

சுள்ளென்று வெயில் அடிக்க, திருநெல்வேலியில் இருந்து மன்னார்குடி செல்ல ராசபாளையம் வழி பேருந்தில் சென்று அமர்ந்தேன். இந்த பேருந்து தான் குறைந்த நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தும் மற்றும் நேரத்திற்கு வந்தடையும் என்று என் தோழர் கூறியதால் நம்பி இருக்கையில் அமர்ந்தேன். என்னுடன் சேர்த்தே மூன்று பேர் தான் பேருந்தில் இருந்தோம்.

எப்பொழுது பேருந்தை எடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே வெளியில் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தம்பி இந்த பேருந்தை எப்ப எடுப்பாங்க என்றார் ஒரு முதியவர் என்னைப் பார்த்து.

சிகப்பு, மஞ்சள் நிறம் கலந்த பையொன்றைக் கையில் வைத்துக் கொண்டு வெள்ளை வேட்டியுடன், சுமார் 55 வயது மதிக்கத்தக்க வகையில் தலை முடியெல்லாம் வெட்டி முதுமையிலும் அழகாக இருந்தார். 

சீக்கிரம் எடுத்துடுவாங்க ஐயா என்றேன் அவரிடம்.

சரியான வெயிலு இவனுங்க வேற எப்ப எடுப்பாங்கனு தெரியல என்று தன்னுள் புலம்பிக் கொண்டு இருந்தார்.

எந்த ஊர் போகணும் ஐயா என்றேன்.

கம்பம் போகனும், பையன் இருக்கான். ஒரு நாள் தங்கிட்டு, அங்க இருந்து கோயம்புத்தூர் வரைக்கும் தங்கச்சி வீட்டுக்குப் போகணும் என்றார்.

நீதிமன்றத்தில் நீங்களும் வாதாடலாம் என்ற தலைப்பில் ஒரு நூலை முன் பேருந்தில் விற்றவரிடம் வாங்கி இருந்தேன், பயணத்தின் பொழுது படிக்கலாம் என்று.

பேருந்து ஒரு வழியாக கிளம்ப, நூலை எடுத்து வாசிக்க தொடங்கினேன். எளிய மனிதர்களுக்குப் புரியும் வகையில் அதன் ஆசிரியர், நீதிமன்றம் மற்றும் காவல் துறை பற்றியும் எழுதி இருந்தார். ஒரு வழக்கு தொடர வெறும் இரண்டு ரூபாய் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளதைப் படித்ததும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் விதைத்தது.

தொடர்ந்து படிக்கும் பொழுது…

அந்த முதியவர் என் இருக்கைக்கு அருகில் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து பேச தொடங்கினார்.

நான் எங்கே செல்கிறேன் என்பது பற்றி பேசினார். பதில் அளித்த பின் மீண்டும் அந்த நூல் என்னை அழைத்துக் கொண்டதுப் படிக்கச் சொல்லி.

அதை, விட மனமில்லாமல் தொடர்ந்தேன்.

முதியவர் மீண்டும் தன்னுடைய இருக்கைக்குச் சென்று எதிரில் இருந்த ஒருவரிடம் தன்னை பற்றி பேச கொஞ்ச நேரத்தில் அவருடன் பேசிக் கொண்டு இருந்தவர் அவரின் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்று விட்டார். என்னால் அவரின் சூழ்நிலையை உணர முடிந்தது.

கையில் இருக்கும் நூலைப் பின்பு படிக்கலாம், இருக்கையில் இருக்கும் நூலை இப்பொழுது படித்தால் தான் உண்டு என முடிவெடுத்து கையில் இருந்த நூலை பையில் வைத்துவிட்டு அவரிடம் பேச தொடங்கினேன்.

உங்க சொந்த ஊர் திருநெல்வேலியா என்று கேட்டேன் முதியவரை நோக்கி.

இல்ல தம்பி. நான் கம்பம் தான், இங்க பேத்தி வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்.

சரி பேத்தின்னு சொல்றாரே குழந்தைகளை பார்த்துவிட்டு செல்கிறார்கள் என்று நினைத்தேன்.

கொஞ்சம் பேத்தி கூட பிரச்சனை, அதான் இப்ப எங்க போறதுன்னு தெரியாம அப்படியே போறேன் என்றார்.

உங்க பையன் வீட்டுக்கு போறது தானே என்றேன் நான்.

அங்க போன என் மருமகளுக்கு பிடிக்காது, அதான் தங்கச்சி வீட்டுக்கு போகலாம்னு நினைக்கிறேன். ஆனா கோயம்புத்தூர் பக்கம் போகணும், ஆனா முகவரி இல்ல இப்ப என்றார்.

குழப்பத்துடன் இருக்கிறார் என்பதை மேலும் உணர்ந்தேன்.

பேத்தி கூட பிரச்சனையா? சின்ன பசங்க தானே ஐயா புரிந்து கொள்வார்கள் என்றேன்.

இல்ல தம்பி அவளுக்கு 30 வயசுக்கு மேல ஆயிட்டு. பேத்தி நல்லாத்தான் பார்த்து கிட்டா. ஆனா என்ன நமக்கு தான் எதுவும் ஒத்துவர மாட்டேங்குது என்றார்.

பேத்திக்கு 30 வயது என்றவுடன், முதியவரின் வயதை கேட்டேன் நான்.

அதற்கு, எனக்கு 74 வயசுப்பா. 8 வருசத்துக்கு முன்னாடியே மனைவி தவறிட்டாங்க.

அவ போய்ட்ட அப்புறம், நான் இப்படி ஒவ்வொரு ஊரா போயிட்டு இருக்கேன் என்றார்.

74 வயது போல் அவர் தோற்றம் பிரதிபலிக்கவில்லை. இளமையாக, திடகாத்திரமாக இருக்கிறீர்கள் என்றேன்.

புகைபிடிக்க மாட்டேன், தண்ணி அடிக்க மாட்டேன், காலையிலேயே எழுந்துவிடுவேன். பின்பு குளித்துவிட்டு ஒரு சிறு நடைப்பயணம் செல்வேன். காளியம்மன் எனக்கு மிகவும் பிடித்த கடவுள், தொடர்ந்து வழிபடுவேன்.

ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தான் தம்பி தூக்கம். முன்னாடியெல்லாம் நாலு, அஞ்சி மணி நேரம் தூங்குவேன். அப்புறம் மூணு மணி நேரம். இப்ப என்னான்னா ஒரு மணி நேரம் தான் தூக்கம் என்றார் சிரிப்புடன்.

உங்க சொந்த ஊரிலேயே இருக்கலாமே, ஏன் இப்படி என்றேன் சொற்களை விழுங்கி கொண்டே, அவரை எந்த விதத்திலும் காயப்படுத்திவிட கூடாது என்று.

என் மகனுக்கு வீட்டை விற்றுப் பணம் கொடுத்துவிட்டேன். அதில் அவன் இப்ப கேரளாவில் வீடு வாங்கி விட்டான். எனக்குன்னு இப்ப தனியா வீடு கிடையாது. அதான் இப்படி எங்க போறதுன்னு தெரியாம போய்கிட்டு இருக்கேன் என்றார்.

அப்ப செலவுக்கெல்லாம் என்றேன்.

நான் மின்சார துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவன். அதனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது தம்பி. அதுல வர பணத்தை வச்சிக்கிட்டு ஒட்டிக்கிட்டு இருக்கேன். அப்பப்ப மகனுக்கு, இரண்டு பொண்ணுங்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பேன். என்னால முடிஞ்சது என்றார்.

இருக்க ஒரு இடம் கொடுக்காமல் அலையவிட்டாலும், பெற்ற பிள்ளைகளுக்கு 74 வயதிலும் ஒரு உதவுகிறார் எனும் பொழுது மகிழ்வதா இல்லை இப்படிப்பட்டவரை அலையவிடும் பிள்ளைகளை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை எனக்கு.

உங்க பொண்ணுங்க வீட்டுல போய் இருக்கலாமே ஐயா என்றேன்.

அதற்கு, அங்க போனா நல்லா இருக்காது தம்பி. அதுவும் இரண்டாவது மருமகனுக்கு என்ன பிடிக்காது. அவர் கொஞ்சம் வசதியானவர் கூட என்றார்.

தன்மானத்தை சுமந்து செல்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது அவர் பேசும் பொழுது தெரிந்தது. பிள்ளைகள், மருமகள், மருமகன் என்று யாரையும் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இவரை பிடிக்காது என்று மட்டும் முன் வைத்தார்.

30 ஆண்டுகள் பொள்ளாச்சில இருந்தேன் தம்பி. ஓய்வு பெற்றப்பின் கம்பம் வந்தேன். ஆனா இப்ப வீடுகூட இல்ல என்றார்.

நீ மட்டும் இருக்குற மாதிரி ஒரு வீடு வாடகைக்கு பாருங்க கம்பத்திலேயே என்றேன் நான்.

முன்னாடி குடும்பமா இருந்தோம். இப்ப நான் தனி ஆளுங்கிறதால யாரும் வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க. நானும் உள்ளூர்லேயே கேட்டேன் ஆனா எந்த பலனும் இல்லை என்றார்.

பேருந்தும் ராசபாளையத்தை நெருங்கியது….

சரி ஐயா. கைப்பேசியில் இருக்குற பசங்க, இல்லாட்டி வேண்டியவங்க இலக்கத்தை காகிதத்துல எழுதி வச்சிக்குங்க. கைப்பேசி வேலை செய்யலைன்னா அதில இருந்து எடுத்து பேசிக்கலாம் வேறு யார் மூலமாவது என்றேன்.

சரி தம்பி என்றார்.

அப்புறம், நீங்க எங்க போறதுன்னு தெரியாம போய்கிட்டு இருக்கேன்னு யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம். உங்க அனுபவத்தை சொல்லுங்க பரவாயில்லை பயண களைப்பு தெரியாம இருக்கும். உங்களுக்கு நான் ஏன் சொல்கிறேன் என்று புரியும் என்றேன்.

புரியுது தம்பி, நானும் இறங்கி அப்படியே சாப்பிட்டு கிளம்புறேன் பேருந்து நின்ற உடன் என்றார்.

பேருந்து, ராசபாளையம் பேருந்து நிலையம் நுழைவுப் பகுதியை எட்டியது.

பையை கையிலேயே வச்சுக்குங்க, நடத்துனரிடம் எவ்வளவு நேரம் நிறுத்தி இருப்பீங்க இங்க என்று நிறுத்தும் போதெல்லாம் கேட்டுவிட்டு, பேருந்தின் இலக்கத்தை குறித்து கொண்டு, அருகில் இருக்கும் கடைகளைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்றேன்.

வீடு இல்லை, உறவு இல்லை, வயதும் இல்லை ஆனாலும் பன்மடங்கு நம்பிக்கையுடன் பயணித்தார் யாரையும் குறைகூறாமல்.

சிறிய பையில் பெரிய பயணத்தை அடைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் கூறிய முதியவர் தன்னுடைய பெயரை மட்டும் என்னிடம் கூறாமல் சென்றார்.

மன்னை மதி, மன்னார்குடி

(2050 தை மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply