Home>>அரசியல்>>திசை மாறும் அம்புகள்
அரசியல்கட்டுரைகள்

திசை மாறும் அம்புகள்

இன்றைய தினம் அதிக பிரச்சனைகள் யாருக்கு உள்ளது என்று யோசித்தால் அனைவரும் முதலில் எண்ணுவது அவர்களுடைய பிரச்சனைகளை தான்.

எனக்கே ஆயிரம் பிரச்சனை, இதில் நான் எப்படி சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்று எண்ணி விலகி நிற்பவர்கள் மத்தியில், எண்ண முடியாத அளவிற்குப் பிரச்சனைகளை எதிர்கொண்டு சமூக சிந்தனையுடன் பயணிக்கும் தோழமைகளுக்கான கட்டுரை இது.

ஊடகம், சமூக ஊடகம் என்று அனைத்து தளங்களில் பல கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதிலாகவும், கேள்விகளுக்கு எதிர் கேள்விகளாகவும் பெற்றுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவெல்லாம் தீர்வை தருகிறதா என்றுப் பார்த்தால் பெருமளவில் இல்லையென்றே கூறலாம்.

ஏன் என்று பார்க்கலாம் இதோ.

இணையம், கைப்பேசி வசதி இல்லாத காலத்தில், நாளேடுகளைப் படித்துவிட்டு தேநீர் நிலையங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இன்று சமூக ஊடகங்களில் கேட்கப்படுகிறது என்பது உண்மை.

அன்று கேட்கப்பட்ட கேள்விகள், தேநீர் நிலையம் சென்று வந்த சிலரை சென்று அடைந்தது. அதன் மூலம் மேலும் சிலரை சென்று அடைந்தது, அதற்கு மேல் கொண்டு செல்ல வழிகளோ, பணம் இல்லை எளியவர்களிடம்.

இன்று அப்படி இல்லை, நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம்முடைய கேள்விகளை, எண்ண ஓட்டத்தை பலரின் மூளைக்கு இருந்த இடத்தில் இருந்தே எடுத்துச் செல்லலாம்.

இதை பலரும் செய்யவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இவைகளை எப்படி ஒழுங்குபடுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது தான் சவாலாக உள்ளது நம்மில் பலருக்கு. காரணம் எண்ண சிதறல்கள், கண் முன் அன்றாடம் தோன்றும் பிரச்சனைகள் நம்மை திசை திருப்புகிறது.

உதாரணத்திற்கு காவிரி மேலாண்மை பிரச்சனை பற்றி கருத்துகளை முன் வைத்தால், சிலை உடைப்பு, தேனீ காட்டு தீ பிரச்சனை என்று வருகிறது. மறுமுனையில் மருத்துவ மேற்படிப்பில் இருந்து எளியவர்கள் நெருங்க முடியாதபடி கல்வியில் கட்டுப்பாட்டை மாற்றுகிறார்கள்.

இது தான் இன்றைய நிலை. நாம் ஒன்றிற்கு குரல் கொடுத்து கொண்டுள்ள பொழுதே அரசு நம்மை மறுமுனையில் ஒடுக்குகிறது. இதற்கென்னதான் வழி, வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? என்று பலரும் சமூக பணியில் இருந்து தொய்வடைந்து விலகி செல்கிறார்கள்.

இது நம்மை ஒடுக்குபவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. சில நாட்கள் போராடுவார்கள், பின் தானாகவே விலகி சென்று விடுவார்கள் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள். இதனால் தான் தொடர்ந்து பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

நாம் அனைவரும் ஒன்றிணைவதை விட, நாம் சிந்தனைகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

முதலில் கேள்விகளை திசை திருப்பாமல் சரியான இடத்தை நோக்கி கேட்க வேண்டும். உதாரணத்திற்கு திரைத்துறை நபர்களை நோக்கி கேட்கும் கேள்விகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்வதுப் போல் தான் அவர்கள் திரைக்கு செல்கிறார்கள், அங்கு பணிபுரிகிறார்கள்.

திரைத்துறை நபர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால், அரசில் பங்கு வகித்தால் மட்டும் அவர்களிடம் நாம் நம்முடைய கேள்விகளை முன் வைத்து விவாதிக்கலாம்.

அரசியல்வாதிகள் எதிர்கொள்ள வேண்டிய கேள்விகள், திசை மாறி திரைத்துறைக்கு செல்கிறது என்பதால் அவைகளை கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளார்கள். இதனால் நம்முடைய நேரமும் விரயமாகிறது, அரசில் அங்கம் வகிப்பவர்களும் அவர்களின் பணிகளை செய்யாமல் தப்பித்து வருகிறார்கள்.

அடுத்து எதிர்க்கட்சியை நோக்கி கேட்கும் கேள்விகளை விட, அதிகம் கேள்வி கேட்க வேண்டியது ஆளும் கட்சியினரிடம் தான். காரணம் அவர்கள் சரியில்லை என்று தான் புதியவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். அதை மனதில் கொண்டு கையாள வேண்டும்.

மக்கள் எதிர்கட்சிகளை கேள்வி கேட்பதால், ஆளும் கட்சி அவர்கள் மேல் பழியைப் போட்டுத் தன்னுடைய பணியை செய்யாமல் விலகி நிற்கிறது. ஆளும் கட்சியில் உள்ளவர்கள் முன்பு இருந்தவர்களின், திறமையற்றவர்களின் செயல்பட்டால்தான் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்பதை உணர வேண்டும். அதற்கேற்றாற்போல் தீர்வுகளை தர ஆளும் கட்சியை நோக்கி கேள்விகளைக் கேட்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசி, அவர்களின் ஆட்சியின் செயல்பாடுகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

அரசியல்வாதிகள் புகைபிடிக்கிறார்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமை, நேரத்திற்கு வீட்டிற்கு செல்லமாட்டார், ஒன்றிற்கு பல திருமணம் செய்துள்ளார் என்று நாம் பலவற்றை விவாதிக்கிறோம். இதனால் எந்த பலனும் ஏற்பட போவது இல்லை.

இனி அது வேண்டாம். ஒவ்வொருவர் வீட்டிலும் பல பிரச்சனைகள் உள்ளது. அது போல் தான் அரசியல்வாதிகளின் குடும்பத்திலும். ஆக அதை தவிர்த்து அவர்களின் அரசியல் செயல்பாடுகள், திறம்பட ஆட்சி செய்கிறார்களா என்பதை கவனித்து அதற்கேற்றாற் போல் களத்தை வலுப்படுத்துவோம்.

இது வரை முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தவர்கள் அனைவரும் முறையாக உழைத்தே சம்பாதித்தார்கள் என்று நிலை நிறுத்திக்கொள்வோம். நாம் அதை பற்றி மீண்டும் மீண்டும் கூறுவதால் அனைத்தையும் அரசின் கருவூலத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள் என்று எண்ண வேண்டாம். அது ஒரு நாளும் நடைபெற போவது இல்லை. நமக்கும்  வேறு வழியில்லை.

நம்முடைய கேள்விகள் அனைத்தும் மத்திய அரசிற்கு தமிழகத்தில் இருந்து ஆண்டிற்கு எவ்வளவு தொகை வரியாக செலுத்தப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணம் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்படுகிறது என்பதாக இருக்க வேண்டும்.

மற்றும் தமிழகத்தில் அரசிற்கு வரியாக எவ்வளவு பணம் ஆண்டிற்கு வசூலிக்கப்படுகிறது? அதில் அந்த ஆண்டு மக்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? போன்ற கேள்விகள் கேட்க வேண்டும்.

சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்கள் முதல் ஒவ்வொரு நகராட்சிக்கும் அரசினால் ஒதுக்கப்படும் பணம் மற்றும் வரி பணம் பற்றியும் நம்முடைய கேள்விகள் இருக்க வேண்டும்.

நம்முடைய கேள்விகள் அனைத்தும் அம்பைப் போன்றது. அதை சரியான திசையை நோக்கி செலுத்தாவிட்டால் ஒரு நாளும் இலக்கை அடைய முடியாது.

சிறந்த கேள்விகளே, சிறந்த பதில்களை பெற்று தரும்.

போராட்டத்தில் பங்களிப்பு என்பது மருந்தை போன்றது, தேவைப்படும் பொழுது தான் தர வேண்டும். என்னுடைய வேலைகளை, பிரச்சனைகளை முடித்துவிட்டு தருகிறேன் என்றால் இறுதியில் பிணத்திற்கு தான் கொடுக்க வேண்டும்.

 

மன்னை மதி, மன்னார்குடி.

(2050 தை மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply