என் தாய் அவள் வயிற்றில்
தொட்டில் கட்ட பத்து மாதம்
இருந்தவள் தான் நானும்…!!
இன்று என் வயிற்றில் தொட்டில்
கட்ட பாடுபடுபவள்தான் நானும்…!!
ஆராரோ சத்தம்
ஆங்காங்கே கேட்க
அடிவயிற்றை
தடவி பார்க்கிறேன்
தினம் தினம்…!!
அக்கம் பக்கம் ஆயிரம்
சொல்ல பாலும் கிணற்றை
எட்டி பார்க்கிறேன் அதே கணம்….!!!
கட்டியவன் கரம் கொடுத்தாலும்
கட்டில் கை கொடுக்க மறுக்கிறது
அனுதினம்
அலுத்து போக நானும் ஆயுள்
முடியாத என்று முத்தி போகிறது
மனம் அதே கணம்
அத்தையவள் செத்தையென
ஏச தினம் தினம் செத்து
பிழைக்கிறேன்
மனம் வாழ வாழ்த்திய
மகராசர்கள் வாக்கு எல்லாம்
வெளிச்சம் ஆகாதா என்று
எண்ணி பார்க்கிறேன்
தினம் தினம்…
வெட்ட வெளியில்
வெறும் வயிற்று சிறுக்கி என்று
ஒளிந்து மறைந்து
வாழ்கிறேன்
கணம் கணம்
என் கட்டிய சேலை
காத்து வாங்க
கரம் பிடித்தவன்
கை ஓங்குகிறது
தொட்டில் எங்கேயென
கேட்டு தினம் தினம்
என்ன சொல்வேன் எப்படி
சொல்வேன் எனக்கும்
தொட்டில் கட்ட
ஆசை தான் என்று
மலடி என்ற
பெயரடுத்த பின்பும்
இங்கு நான் ?
— ஆரூர் கவிஞன் தீன், பொதக்குடி
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)