Home>>அரசியல்>>கோட்டூர் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆனந்தன் அவர்களுடன் உரையாடல்
அரசியல்கட்டுரைகள்தமிழ்நாடு

கோட்டூர் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆனந்தன் அவர்களுடன் உரையாடல்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, கோட்டூர் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆனந்தன் அவர்களுடன் உரையாடல்.

உங்கள் பதவி காலம் துவங்கிய நாள்?
06-02-2020


இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும் கட்சி பதவி பதவியில் இருந்துள்ளீர்களா?

திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக ஊராட்சி செயலாளர், ஒன்றிய துணை செயலாளர் ஆக இருந்துள்ளேன்.


தேர்தலில் வெல்ல நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

உள்ளாட்சி தேர்தலில் கட்சி சின்னம் கொடுக்கப்படமாட்டாது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனித்தனியாக சின்னமே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும்.

எனவே சுயேட்சையாக நின்று வெற்றிப்பெற்றேன்.


உங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் சவால்களாக நீங்கள் பார்க்கும் விசயங்கள்?

வாக்குறுதிகளாக தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி தருவேன் என கூறினேன்.

கிராமப்பகுதிகளில் பல நீர்நிலைகள், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவைகளை மீட்டெடுக்க வேண்டும்.


உங்கள் ஊராட்சி பற்றி கூறுங்கள்?

எங்கள் பஞ்சாயத்தில் மக்கள் தொகை 5052 என உள்ளது. எங்கள் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி இதுவே.

புறம்போக்கு இடங்கள் போன்று பஞ்சாயத்தில் உட்பட்ட பகுதியில் இல்லை.

இதனால் கழிவுகளை கையாள்வதில் பெரும் சவாலாக உள்ளது. தற்பொழுது கோவில் நிலத்திலேயே கழிவுகளை கையாள்கிறோம். இதற்கு அரசின் உதவி தேவைப்படுகிறது.

தீயணைப்பு நிலையம் கூட வாடகை கட்டிடத்தில் தான் உள்ளது.


உங்கள் பகுதியில் மருத்துவமனை ஏதேனும் உள்ளதா?

ஒரு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம் கூட இங்கு கிடையாது. அரசு அலோபதி மருத்துவர் கூட இங்கு இல்லை.

இதற்கென 6 கிலோ மீட்டருக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது, ஆதிச்சபுரம் வரை சென்று தான் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல்.

உங்கள் ஊராட்சி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?

பஞ்சாயத்திற்கு என்று போதிய அரசு நிலங்கள் இல்லை, பெரும்பாலும் இங்கு கோவில் நிலங்களே அதிகம் உள்ளது.

அதனால் எங்களுக்கு இடம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. எந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கு அரசு நிலம் தேவைப்படுகிறது.


உங்கள் ஊராட்சியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதா?

ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது.

20 ஆண்டுகளாக பெண்கள் உயர்நிலை பள்ளி கட்டிடம் கோவில் நிலத்தில் இருப்பதால், அதன் மீது ஒரு வழக்கும் உள்ளது. நீதிமன்றத்தில் ஒரு கோடிக்கு மேலாக வாடகை நிலுவை தொகையாக கட்ட சொல்லியுள்ளார்கள்.

ஊராட்சியில் உள்ள பலர் தினசரி சம்பளம் பெறுபவர்கள் என்பதால் இந்த தொகையை எங்களால் செலுத்த இயலாது. மற்றும் ஊராட்சிக்கு வருவாய் என்றும் பெரிதாக கிடையாது. ஆகவே அரசு தரப்பில் வாடகை நிலுவை தொகையை செலுத்தி உதவ வேண்டும். மற்றும் தொடர்ந்து வாடகையை கட்ட பள்ளியால் இயலாததால், அரசு இந்த நிலத்திற்குரிய தொகையை செலுத்தி அந்த நிலம் ஊராட்சி நிர்வாகத்திடம் இருக்குமாறு உதவ வேண்டும்.

பஞ்சாயத்து செலவிற்கு நிதி குறைவாகவே உள்ளது.
ஆகவே தமிழக அரசு போதிய நிதியை வழங்க வேண்டும்.


கிராம பொருளாதாரம் பற்றி கூறுங்கள்?

முன்னர் இரண்டு போகம் விளைந்த நிலத்தில் தற்பொழுது ஒரு போகம் மட்டுமே செய்ய முடிகிறது.

இதனால் பலர் வேலை தேடி திருப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்கிறார்கள்.

எம்மக்கள் இடம்பெறாமல் இருக்க சுற்றுசூழலை பாதிக்காத அளவிற்கு தொழிற்சாலைகளை அரசு தரப்பில் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்.

முன்னர் எங்கள் ஊராட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தி இருந்தது ஆனால் அதை தற்பொழுது தொடர இயலவில்லை. எங்கள் ஊராட்சியில் அரசு தரப்பில் இருந்து பால் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் ஊராட்சியில் வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும், மற்றும் பொருளாதாரமும் சிறிய அளவில் மேம்பட உதவும்.


மக்கள் கருத்துக்களை பெறுகிறீர்கள்?

தினமும் அலுவலகம் சென்று மக்கள் கருத்துகளை கேட்டு பெறுகிறோம். மற்றும் அலைப்பேசி வழியாகவும் மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பெறப்படும் கருத்துகளுக்கு ஏற்ப பணிகளை ஒருங்கிணைகிறோம்.


மக்களுடைய தேவைகளாக நீங்கள் பார்ப்பவைகள்?

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் சரிவர இல்லை மற்றும் இங்கு வீடில்லாமல் கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைப்பதில்லை, மழைக்காலத்தில் இந்த வீடுகள் கூட பாழடைந்து விடுகிறது.

புதியதாக வீடு கட்ட வேண்டும் என்று பிரதமர் வீடு கட்டும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டங்கள் பற்றி அறிந்து அவர்கள் ஆவணங்களை சமர்பித்தால் அவர்கள் இருப்பது கோவில் நிலங்கள் என்று சொல்லி அவர்களின் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களுக்குக்கான வீடுகளை கட்ட, அவர்கள் நிலங்களுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

ஊராட்சியில் பல நிலப்பகுதி கோவில் நிர்வாகத்திடமே உள்ளது.

இதற்கென்ன மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம், அதன் பின் அரசு தரப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை.


உங்களின் அன்றாட பணியாக நீங்கள் செய்பவைகள் பற்றி கூறுங்கள்?

இந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா பணியில் தான் உள்ளோம், வேறு பணியில் கவனம் செலுத்த இயலவில்லை. இனி தான் அவைகளை செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் முன்னர் நடைபெறாமல் இருந்ததால், இதுவரை அதனை கவனித்து வந்த அரசு பணியாளர்களை குறைச்சொல்ல இயலாது, எனவே ஊராட்சி பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வுகளை சரிசெய்து, தற்பொழுது மேம்படுத்தி வருகிறோம்.


நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சிக்கு உட்பட பகுதியில் சுமார் 150 வீடுகளை அங்குள்ள மக்களுக்கு முன்பு அதன் ஊராட்சி மன்ற தலைவர் கட்டிக்கொடுத்ததை பற்றிய தங்கள் கருத்து?

அந்த ஊராட்சிமன்ற தலைவர் முதலில் காற்றாலை அமைக்க மானியம் வாங்கினார், அதை தொடர்ந்து 2 காற்றாலை போட்டார்கள்.

அரசிற்கே மின்சாரம் தரும் அளவிற்கு உற்பத்தி செய்ய துவங்கினார்கள் என்பதே உண்மை. அப்படியான சூழலோ அல்லது தற்சார்புடன் இயங்கும் நிலையிலோ எங்கள் ஊராட்சி இல்லை என்பதே உண்மை.

ஆனால் எங்களின் அடுத்தடுத்த நகர்வுகள் நாங்கள் தற்சார்புடன் இயங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையொட்டி இருக்கும். குறிப்பாக வீடில்லாதவர்களுக்கு வீடுகளை கட்டி தருவதே முதன்மையாக இருக்கும்.

இதற்கென “கோவில் நிலத்தில் வசிப்பவர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி உள்ளேன். அதன் தலைவரும் நானே.


உங்கள் ஊராட்சியில் அரசு மதுபானக்கடையை (Tasmac) இந்த கொரோனா காலத்தில் மீண்டும் திறக்க சொல்லி பலகட்சிகள் இணைந்து போராட்டம் செய்தது பற்றி உங்கள் உங்கள் கருத்து?

எங்கள் நிலத்தில் உழவு சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளார்கள், பொதுமக்களின்றி, அவர்களில் பலர் மது உட்கொள்கிறார்கள். இதற்கு முன்னர் இங்கு அரசின் 2 மதுபான கடைகள் இருந்தது.

பின்னர் கல்வி கூடங்கள் அருகில் இருக்க கூடாது, என்று கூறியதால் வெளியில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மது அருந்தவென பலர் வெளியூர் சென்று வருகிறார்கள், காவல் தொந்தரவு, நிறைய விலை கொடுத்து வாங்குகிறார்கள், சாலை விபத்து எனவும் நிகழ்கிறது. மறுபுறம் கள்ள மது அதிகம் ஆகிவிட்டது.

இதனால் அரசு மதுக்கடை வருவதை பல கட்சியினர் சரி என்கிறார்கள்.


அரசு தரப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் வேறு உதவிகள்?

எங்கள் ஊராட்சியில் மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை நிறைய உள்ளது. இங்கு நெல் உற்பத்தி தான் அதிகம், நெல்லிற்கு அரசு தரும் கொள்முதல் விலை வெகு குறைவாக உள்ளது. இதை உயர்த்தி, உரிய தொகையை வழங்க வேண்டும்.

நம் ஊராட்சி பகுதிக்கு வேதாரண்யம் கூட்டு குடிநீர் மூலம் வழங்கப்படும் நீரை குறைவாகவே கொடுத்து வருகிறார்கள். இதை கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

கொடுக்கப்படும் நீர் மக்களுக்கு போதுமானதாக இல்லை, நிலத்தடி நீரும் உப்பாக உள்ளது.

ONGC இங்கு வந்த பின்னர் நிலத்தடி நீரும் குறைய தொடங்கிவிட்டது, மீத நீரும் கெட்டு வருகிறது. மக்கள் தூய்மையான குடிநீரை நிலத்தடி நீர் மூலம் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ONGC பணிகளை இந்த மண்ணில் தடைச்செய்து தூய குடிநீர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

எங்கள் ஊராட்சிக்கென்று புதிய கட்டமைப்புகளை உருவாக்க, அரசு தரப்பில் நிலங்கள் பெற்று தர வேண்டும்.

Leave a Reply