அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் செயல்பட்டு வரும் “CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு” பற்றி அதை திறம்பட நடத்தி வருபவர்களில் ஒருவரான சகோதரர் சிலம்பரசன் அவர்கள் நமக்கு பகிர்ந்ததை சிறு கட்டுரை தங்கள் பார்வைக்கு பகிர்கிறோம் …
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் சோழவள நாட்டின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் போற்றக்கூடிய திருவையாற்றின் வடக்கே அமைந்துள்ள கொள்ளிட நதியில் இணைந்த பின்னே பாயும் மருதையாற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்த சோழபுரம் (எ) ‘செட்டித்திருக்கோணம்’ என்கிற எங்கள் அழகிய கிராமம்.
பெரியதிருக்கோணம் பஞ்சாயத்திற்கு (ஊராட்சி ஒன்றியம்) உட்பட்ட எங்கள் கிராமத்தில் சுமார் 500 வீடுகளுடன் 1500 பேர் மக்கள் தொகையுடன் வசிக்கும் எங்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரமாக இருந்தாலும், ஊரில் உள்ள பல இளைஞர்கள் வாழ்வியல் நெருக்கடிகளை தீர்த்துக்கொள்வதற்காக தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும், சொந்த உறவுகளையும் பிரிந்து பொருளாதாரத்தை தேடி பெருநகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் சென்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் மண்ணின் மைந்தர்களை கொண்டு உருவாக்கப்பட்ட CTK நண்பர்கள் சமூகநல அமைப்பானது ஒரு தன்னார்வ அமைப்பாகும். எங்கள் கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும், சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளில் பணிபுரியும் கிராம இளைஞர்களின் நிதியினையும் அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க எங்களது கிராமத்தின் வளர்சிக்காகவும், கல்வி மேம்பாடு மற்றும் மாணவர்களின் நலனுக்காகவும் செயல்பட்டு வருகிறது.
கிராமத்தின் அடிப்படைதேவைகள், பள்ளி, கல்வி ஊக்கத்தொகை, மாணவர்கள் நலன், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் பராமரிப்பு, மரம் நடுவது, மரக்கன்றுகள் பராமரிப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வு, கிராமசபை விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் போன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முன்னெடுத்து வருகிறது.
CTK நண்பர்கள் சமூகநல அமைப்பின் மூலம் இதுவரை செயல்படுத்திய திட்டங்கள்:
1) கிராம அரசு நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளிக்கு நூலகம், கணினி ஆய்வுகூடம் மற்றும் தொடுதிரை வகுப்பு (Smart Class) அமைத்துத் தரப்பட்டது.
2) கிராம மக்களுக்கு மாணவர்கள் மூலம் நெகிழி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது. துணிப்பைகள் வழங்கியது.
3) ஏரிகளில் இருந்த கருவேல மரங்களை JCB இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்து ஏரியை தூர் வாரி நீர் வரத்துகளை சரி செய்தது.
4) கிராமத்தின் அனைத்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் 2,000 பனை விதைகள் நடப்பட்டது.
5) பள்ளி, கோவில் மற்றும் ஏரி கரைகளில் மரக்கன்றுகள் நட்டு பரிமாரித்தல் மற்றும் கிராம பொது இடத்தில் குறுங்காடு அமைத்தது.
6) மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கியது. கல்வி சீர் மூலம் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான பொருட்களை வழங்கியது.
7) அருள்மிகு. மாரியம்மன் திருக்கோயில் முன்புறம் கலர் ரூஃபிங் ஷீட் நிழற்குடை அமைத்து கொடுத்தது.
8) கிராம அரசு பள்ளி கட்டத்தின் சுவர்கள், உட்புறம், சுற்று சுவர்கள் வர்ணம் பூசி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
“ஒரு தீக்குச்சி தான் அணைவதற்குள் தன்னால் ஆன சில விளக்குகளையேனும் ஏற்றிவிடத் துடிக்கும் அதே தவிப்புதான், CTK நண்பர்கள் சமூகநல அமைப்பின் நோக்கமாகும்”.
உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் இதயப்பூர்வமான அன்பின் நன்றிகளை தெரிவித்து கொள்வதில் CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு பெருமகிழ்ச்சியடைகிறது.
தொடர்புக்கு…
CTK-நண்பர்கள் சமூகநல அமைப்பு,
செட்டித்திருக்கோணம் கிராமம்,
அரியலூர் மாவட்டம்.
www.chettithirukkonam.com