ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் இதுபோன்ற ஒரு தினத்தை கொண்டாட இந்த உலகம் வெட்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மனித உரிமைக்கும் எதிரான அநீதிகளின் அதிகரிப்புதான் இந்த நாளை கொண்டாடுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இந்த நாளை கொண்டாடுகின்ற இனமாக தமிழினம் ஆகிவிட்டதை எண்ணி மிகவும் துன்புற வேண்டி இருக்கின்றது. ஈழத் நிலம் என்பது உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைகின்ற அன்னையர் நிலம்தான்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்த்திருக்கிறீர்களா? காலத்துயரம் நிரம்பிய அக் கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை பூகம்பம் உலுப்புகின்ற செயல்.
இலங்கையில் 1980-ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசே காரணம் என காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிவருகின்றனர்.
உலக அளவில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பாக சர்வதேச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை அரசு நடத்திய இன அழிப்பு போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே உலகில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு என்ற துயர பெருமையும் இலங்கைக்கு உண்டு.
1996-ம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980- 96 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513 பேர் இலங்கையிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும்;1996-ம் ஆண்டு ‘ஆசிய மனித உரிமை ஆணையத்தின்’ அறிக்கைப்படி, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத வழக்குகள் 16,742 இருந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.2006 முதல் 2008 காலகட்டத்தில் காணாமல்போன பல நூறு தமிழ் மக்களுக்கு, இலங்கை ராணுவமும் அதன் துணைக் குழுக்களுமே காரணம் என்று ‘மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு பின்விளைவற்ற ஒரு வசதியான வழியாக பயன்படுத்தப்படுகின்றது. உலகில் ஜனநாயக ரீதியில் உரிமைகளை கோருகிறவர்களை காணாமல் ஆக்குவது என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற கருத்து உண்டு. உண்மையில் அதை கனகச்சிதாக இலங்கைக்குப் பொருந்துகின்றது. உரிமை கோரி போராடிய ஈழத் தமிழ் மக்களை காணாமல் ஆக்குவதை ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகின்றது.
குறிப்பாக 2009 இறுதி யுத்தத்தின் போது 30,000க்கும் அதிகமானோர் இலங்கை ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பலரின் கதி இன்னமும் என்னவென்று தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், ஈரோஸ் பாலகுமாரன், கவிஞர் புதுவை ரத்தினதுரை உள்ளிட்டோர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
போர் முடிந்து கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் பலன் ஏதும் தராமலேயே போராடியவர்களே கூட மரணித்தும் போய்விட்டனர். ஆனாலும் ஈழத் தமிழர்களின் துயரத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு பேரணிகள் நடைபெற உள்ளன. வவுனியாவில் இன்று காலை ஓமந்தை ராணுவ சாவடி வரை ஒரு பேரணியும் கிழக்கில் கல்முனையில் மற்றொரு பேரணியும் நடைபெற உள்ளது. இதேபோல் புலம் பெயர் நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். உலகிலேயே இத்தீராகொடுமை அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.
உலகெமெங்கும் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு புலம்பெயர் மக்களால் பல்வேறு வகைகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புலம்பெயர் மக்களின் தாயகமான கனடாவிலும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் பயணம் ஒன்றை கனேடியத் தமிழர்கள் தொடங்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்நிலையில், குறித்த நெடும் பயணத்தில் பொது மக்கள், கலைஞர்கள் அனைவரையும்,பெருமளவில் பங்குபற்றி வெற்றி பெறச்செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம் இது.அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று, பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி, இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் பயணம் ஒன்றை கனேடியத் தமிழர்கள் தொடங்கவுள்ளனர்.கனடா வாழ் ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுச் சங்கங்கள், தமிழ் முதியோர் மன்றங்கள், கனடா வாழ் தமிழர்கள் அனைவரும் நீதிகேட்கும் இந்நெடும் பயணத்தில் தங்களால் இயன்றவாறு தோள் கொடுத்து உதவுமாறும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள், கலைஞர்கள் அனைவரையும், பெருமளவில் பங்குபற்றி வெற்றி பெறச்செய்யுமாறும், அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.நீதி கேட்கும் நடைபயணம் ஆரம்பிக்கும் நிகழ்விலும், நிறைவு நிகழ்விலும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, மாநகர உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.இவ்விடங்களில் பெருந்திரளான மக்களை அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கின்றோம். பாதுகாப்பு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இணையுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்”.
இந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக பரவிவாழ்கின்ற புலம்பெயந்த நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம் பெறுகின்றது.
-இளவரசி இளங்கோவன் ,கனடா