Home>>இலக்கியம்>>“மன்னன் மகள்” புதினம் வாசிப்பு அனுபவம்.
இலக்கியம்நூல்கள்

“மன்னன் மகள்” புதினம் வாசிப்பு அனுபவம்.

ஐயா தமிழ்திரு. சாண்டில்யன் அவர்களின் “மன்னன் மகள்” புதினம் வாசிப்பு அனுபவம்.

கதை களம் சோழர்கள் பற்றிய உண்மை வரலாற்றில் கற்பனை கலந்த புனைவு.

கதை காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி அதாவது கி.பி 1012-1044 வரை ஆண்ட மாமன்னர் இராசேந்திர சோழதேவரின் ஆட்சிக்காலம்.

இராசேந்திர சோழதேவரின் மருமகன் இராசநரேந்திரன், இவர் யார் எனில் மாமன்னர் இராசராச சோழரின் மகள் குந்தவையை அவர் காலத்தே வேங்கி நாட்டை ஆண்ட விமலாதித்த சாளுக்கியருக்கு இரண்டாவது மனைவியாக மணம் முடித்து வைக்கிறார். குந்தவைக்கும் விமலாதித்தனுக்கும் பிறக்கும் மகன் தான் இந்த இராசநரேந்திரன். இவர் தான் பின் இராசேந்திர சோழ தேவரின் மகள் அம்மங்கை யை வதுவை செய்துக்கொள்கிறார். இந்த இருவருக்கும் பிறக்கும் மகன் தான் இராசேந்திரன் என்ற முதலாம் குலோத்துங்கச்சோழன்.

(மாமன்னர் இராசேந்திர சோழதேவரின் மூன்று மகன்களும் இடை இடையே போர்களத்திலே வீரமரணம் அடைகிறார்கள். அதில் இராசேந்திர சோழத் தேவரின் மூன்றாவதுமகனான வீரராசேந்திர சோழரின் மகன் ஆதிராசேந்திர சோழன் நோய்வாய்பட்டோ, அல்லது மருமமான முறையில் இறப்பதாகவும், அப்போது சோழதேசத்தில் கலவரம் நடந்ததாக சில கல்வெட்டு ஆதரங்கள் கூறுகிறது. அத்துடன் சோழர்களின் நேரடி வாரிசுகள் ஆட்சி முடிவடைகிறது. அதன் பின் தாய்வழி வாரிசான இராசநரேந்திரன் அம்மங்கையின் மகன் இராசேந்திரனே!

முதலாம் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழதேசத்தை அடுத்த 50 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்கிறார் அதை தொடர்ந்து அவர் மகன் விக்கிரமச்சோழர் ஆட்சி செய்கிறார். இந்த தகவல் இந்த புதினத்தில் விரிவாக இல்லை. இது நான் படித்துத்தெரிந்துக்கொண்ட சோழவரலாற்று கல்வெட்டு ஆதரங்களை கொண்டு சொல்கிறேன். எதும் தவறு இருந்தால் தயங்கமல் கூறுங்கள் ஆதரத்தோடு சரியானதாக இருந்தால் நானும் ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.)

இந்த மேலை கீழைச் சாளுக்கிய அரசியல் ஆட்சிச்சூழலை தந்திரமாக சரி செய்வதன் மூலமே இராசேந்திர் சோழதேவரின் கங்கை படையடுப்பு சாத்தியமாகிறது என்ற ஒரு மாபெரும் வரலாற்றை தொடங்கும் இடத்தில் தான் இந்த புதினம் புனையப்பட்டுள்ளது.

சூடாமணி புத்தவிகாரில் வளரந்து வரும் கரிகாலன் தன் பிறப்பு ரகசியத்தை அறிந்துக்கொள்ள, மேலைச் சாளுக்கியத்தின் மீது படை எடுக்க அதன் எல்லைபகுதியில் படைத்திரட்டி சந்தர்பத்துக்காக காத்திருக்கும் இராசேந்திரனின் படை தலைவன் அரையன் இராசராசனை காண புறப்படுகிறான். ஆனால் அவன் செல்லும் வழியில் நடக்கும் சில எதிர்பாரத நிகழ்வும், சந்திப்புகளும், சந்தர்பங்களும், மேலைச்சாளுக்கியம் போகவேண்டியவன் கீழைச்சாளுக்கியம் வேங்கி நாட்டை அடைகிறான்.

அங்கு எதிர்பாரத விதமாக மன்னன் மகள் நிரஞ்சனாதேவியை (இப்புதினத்தின் கதாநாயகி!, என்னை ஆட்கொண்ட கர்பனை காதலி) சந்திக்கிறான். (இவள்தான் விமலாதித்தன் முதல் மனைவிக்கு பிறந்த பெண்குழந்தை) அவளை சந்தித்த நொடியிலே அவள் அழகில் மயங்கும் கரிகாலன் (நானும் தான்). அதன் பின் அவள் சிக்கியிக்கும் பிரச்சனையில் இருந்து மீட்டு அவளை எப்படித்திருமணம் செய்கிறான். அவள் உயிராக நினைக்கும் வேங்கி நாட்டைக் காத்து, அவள் தம்பி இராசநரேந்திரனுக்கு நிலையான ஆட்சியை வேங்கி நாட்டில் நிலைநிறுத்த கரிகாலன் செய்யும் ராசதந்திரமே கதை.

இதற்கிடையில் இயற்கை, நட்பு, காதல், காமம், அழகு, அன்பு, பாசம், தந்திரம், வீரம், தத்துவம், என ஐயா சாண்டில்யன் அவர்களின் ஒட்டுமொத்த கற்பனையையும் கண்ணுக்கு காட்சியாக வரும்படி மனுசன் பிச்சிப் பெடல் எடுத்துருக்கான். அழகை இந்த மனுசனமாதிரிலா வர்ணிக்கமுடியுமா?? என்ற அளவுக்கு இயற்கை எழில், பெண், ஆண் என அனைத்தும் தரம். குறிப்பாக கரிகாலன் முதல் முதலில் வேங்கி நாட்டு அரண்மையின் பின் பக்கமாக இரகசிய வழியே நந்தவனத்துக்குள் நுழையும் போது! அவர் அந்த நந்தவனத்தையும் அங்கு நின்றுக்கொண்டு இருக்கு மன்னன் மகளையும் வர்ணிப்பார் பாருங்க சொல்லித்தீராது. நான் வாசித்த நாட்களில் சொக்கி அங்கயே லாயித்துக்கிடந்தேன் என்பது உண்மை, வாசியுங்கள் கண்டிப்பாக உணரலாம்.

கதை மாந்தர்களாக வரும் கரிகாலன், அரையான் இரசாரான், அவன் மகள் செங்கமலச்செல்வி, மன்னன் மகள் நிரஞ்சனா, அவள் தம்பிகள் இரசாநரேந்திரன், விசையாதித்தன், மேலைச்சாலுக்கிய மாமான்னன் சோழர்களால் பாரட்டப் பட்ட மாவீரன் செயசிம்ம சாளுக்கின், பிரம்ம மாராயர், சேர ஒற்றன் செய்வர்மன், கரிகாலன் மணிமேகலை, சக்கிரக் கோட்டை தலைவர் பிரதாபருத்திரன், ரகசிய ஒற்றன் அறிஞ்சேயன், முத்துத்தேன், புத்தத்துரவிகள், மாமன்னர் இராசேந்திர சோழத்தேவரின் இறுதி வருகை என அனைவருமே காட்சிக்கும் கதைக்கு மேலும் வழு.

மனித சித்தம் இந்த இயற்கை நிலையையும் பல சமயங்களில் மாற்றி விடுகிறது. சிந்தனையில் சுழலும் எண்ணங்களுக்குத் தக்கப்படி நேரம் வேகமாக ஓடுவது போலவும், ஆமை வேகத்தில் நகருவது போலவும் பிரமை மனிதனுக்கு உண்டாகிறது. சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி, வேதனை, கவலை ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி காலமும் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நகருவதாக நினைக்கிறோம். வெறும் பிரமை தான்! இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து தப்பியவர் யாருமே இல்லை என்பது உண்மைதான். என்பது அவர் இந்த புதினத்தில் ஒருபகுதியில் அவர் கூறிய தத்துவ வரிகள். இதை சொல்லி என் வாசிப்பு அனுபவத்தை முடிக்கிறேன். நன்றி

வாய்ப்பு அமையுமாயின் கண்டிப்பாக வாசியுங்கள், 11ஆம் நூற்றாண்டில் சோழதேச பணம் நிச்சயம், திறந்தால் மூடிவைக்க முடியாது சுவாரசியம் மிகுந்த ஆகசிறந்த அனுபவமாக அமையும். நான் வாசித்ததே தாமதம்தான்.


பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
புள்ளவராயன்குடிக்காடு, மன்னார்குடி,
25/09/2020.

Leave a Reply