ஏழு தமிழர் விடுதலை குறித்து உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் “அமெரிக்க ஈகைத் தமிழ் சமூகம்” (https://www.amchats.org/) எழுவர் விடுதலை தொடர்பாக கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
பெறுதல்:
மாண்புமிகு எடப்பாடி க. பழனிசாமி அவர்கள்,
முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை, தமிழ்நாடு
பொருள்: எழுவர் விடுதலை தொடர்பாக வேண்டுகோள் கடிதம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,
அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம், அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வளர்ப்பதும் தமிழர்களிடையே இணைப்பு பாலமாகச் செயல்படுவதுமாகும். இந்த நிறுவனம் பல்வேறு மக்கள் பணிகளையும் சேவைகளையும் வட அமெரிக்கப் புலம் பெயர் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் செய்து வருகின்றது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி பல உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு உதவுதல், தமிழ் நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குதல் என, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கும் சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துச் செயல்படுத்திவரும் தங்களது அரசுக்கு வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
ஆயுள் தண்டனை பெற்று அத்தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடி வரும் எழுவர் சம்பந்தமாகத் தமிழக அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்து மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில் எழுவர் விடுதலையில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது தமிழர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எழுவர் விடுதலை தொடர்பாக உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் பணிகளை நிறைவேற்றி வரும் தாங்கள் இந்த ஒட்டுமொத்த தமிழினத்தின் வேண்டுகோளாகிய எழுவர் விடுதலையை நிறைவேற்றித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மிக்க நன்றி.