Home>>அரசியல்>>நம் வாக்கு நம்முடையதா??

#BanEVMsavedemocracy

அதிமுக + பா.ச.க கூட்டணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையிலே இவர்கள் இருவர் கூட்டணி என்பது பொதுமக்கள் விரும்பா கூட்டணிதான். அதனால் வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு செல்ல வலுவான வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த கணிப்பு எல்லாம் வாக்கு சீட்டு முறையில் சரி. ஆனால் தற்போது பா.ச.க அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உண்மையிலேயே அவர்கள் கூட்டணி வைக்கப்போவது வாக்கு இயந்திரத்தோடுதான்.

எனவே இது அதிமுக + பா.ச.க + வாக்கு இயந்திரம் (EVM) கூட்டணியே. அதனால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக விரும்பாத ஒரு கட்சியோடு அதிமுக மட்டும் கூட்டணி வைக்க விரும்புமா என்ன??

அதன் பிண்ணனியில் இருப்பது வாக்கு இயந்திர முறைகேடாக கூட இருக்கலாம். அதிமுக மற்றும் பா.ச.க இரு கட்சிகளுக்கும் வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது இல்லை என்று அவர்களுக்கு நன்கு தெரிந்த காரணத்தால்தான் வாக்கு இயந்திரத்தை நம்பியே களம் இறங்குகிறார்கள்.

பா.ச.க க்கு தேவையெல்லாம் தாங்கள் பெறப்போகும் வெற்றிக்கு ஒரு நல்ல தர்க்கம்  உருவாக்க வேண்டியதுதான்.

அதிமுகவின் தேவையோ உறுதியான தலைமை, மக்களிடம் நற்பெயர் இவ்விரண்டையும் இழந்த பின்னரும் ஒரு தேர்தல் வெற்றி. அது எப்படி வந்தாலும் சரி. அவர்களுக்கு மகிழ்ச்சியே. 2021ன் தோல்வி அவர்கள் கட்சி எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

இப்படிப்பட்ட மனநிலையில் தான் இரு கட்சிகளும் கூட்டணியில் இறங்க துடிக்கிறார்கள்.

இதுல நாம அவர்களுக்கு அறிவுரை வழங்கியோ, எச்சரித்தோ அல்லது மிரட்டல் விடுத்தோ ஒன்றும் ஆவப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் வெற்றி நம் கையில் இல்ல.

இதுல என்ன கொடுமைனா, ஒருவேளை அதிமுக + பா.ச.க கூட்டணி வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றால், அதை எதிர்கட்சியான திமுகவால் கூட கடுமையாக எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதற்காகத்தான் அவர்களுக்கு அவர்களே நம்ப முடியாத அளவிற்கு 2019 பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை பரிசாக கொடுத்துள்ளனர். ஒருவேளை அவர்கள் வாக்கு இயந்திரம் (EVM) பற்றி மூச்சு விட்டால் 2019ல் அவர்கள் பெற்ற வெற்றி கேள்விக்குறியாகும்.

பிரதான எதிர்க்கட்சி வாக்கு இயந்திரம் (EVM) விடயத்தில் அமைதியாகி விட்டால் ஏனைய கட்சிகள் கூப்பாடு போட்டு ஒரு புண்ணியமும் இல்ல.அவர்களால் ஒன்று இரண்டு தொகுதியை கைப்பற்றுவதே அதிகம்.

திமுகக்கு போன தேர்தல் போலவே 90 இடங்களில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி விட்டால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள். பின் அடுத்த ஐந்தாண்டுகள் இப்போது எப்படி கழித்தார்களோ அதே போல அமைதியாகவும், மேம்போக்காகவும் அரசியல் செய்து அதிமுக அரசு அடுத்த 5 வருடம் அவர்கள் விருப்பம் போல ஆட்சி செய்ய விடுவார்கள். வழக்கம் போல பா.ச.க நமக்கு எதிராக இன்னும் உக்கிரமா பல விடயங்களை அதிமுகவை வைத்து நிறைவேற்றும். யார் கண்டார்? நீட் இட ஒதுக்கீடு கூட நீக்கப்படலாம். மீத்தேன் திட்டம், சாகர்மாலா, சேலம் 8 வழிச் சாலை திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படலாம். இந்தி, சமசுகிருத மொழிகள் கட்டாயப் பாடம் ஆக்கப்படலாம். வழக்கம் போல எதிர்க்கட்சி சும்மா பேருக்கு எதிர்த்து கொண்டு காலத்தை கடத்தும். மக்கள் பாடு பெரும் திண்டாட்டம், போராட்டம் தான்.

அதிமுக, திமுக தயவில்லாமல் பா.ச.க வால் வாக்கு இயந்திர முறைகேடுகளை செய்து வெற்றி பெற முடியாது. வாக்கு வங்கிகளை கணக்கெடுக்கும் போது தர்க்க அடிப்படையில் பகிரங்கமாக மாட்டிக்கொள்வார்கள். தவிர இரு பெரும் கட்சிகள் சேர்ந்து எதிர்க்கும் போது அவர்கள் பெற்ற வெற்றி கேள்விக்குறியாகிவிடும்.

எனவே தான் மிக மிக புத்திசாலித்தனமாக காய் நகர்த்துகிறார்கள்.

ஒன்று இந்த இரு பெரும் கட்சிகள் பா.ச.க வை ஒருங்கே கழற்றி விடவேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள். இந்த கட்சி கைவிட்டால், அந்த கட்சி கை கொடுக்கும் எப்படி சாதிக்கட்சிகளை வளர்த்து விட்டார்களோ அப்படி.

இரண்டாவது வழி, வளர்ந்த நாடுகளை போல பாரம்பரிய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். நாம் வாழும் வாழ்க்கை, உண்ணும் உணவு என எல்லாமே இப்போது பாரம்பரியத்தை நோக்கியே செல்கின்றன.

அதேபோல நாட்டுக்கு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் தேர்தலை கூட பாரம்பரிய முறைப்படி வாக்குச்சீட்டு முறையில்தான் நடத்த வேண்டும்.

அனைத்து தொழில்நுட்பங்களிலும் சிறந்து விளங்கும் வளர்ந்த நாடுகள் கூட தேர்தல் என்று வந்தால் வாக்குச்சீட்டு முறையை தான் தேர்வு செய்கிறார்கள். யாவற்றிலும் தானியங்கி சென்சார்களை பயன்படுத்தி முழுக்க முழுக்க மின்னிலக்க முறை (Digital)  மயமாக இருக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் அனைவருக்குமான அடிப்படை வசதிகளில் கூட மிகவும் பின்தங்கிய இந்தியா, தேர்தலின் போது மட்டும் வாக்கு இயந்திரத்தை வெகுவாக நம்புகிறது. அதற்கு சொல்லப்படும் காரணம் மக்கள் தொகை.

அப்படி என்றால் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமாவது வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தலாமே.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை அமெரிக்க மக்கள் தொகையை விட 4 மடங்கு குறைவுதானே. மலேசியாவை விட 1 மடங்கு தானே அதிகம்.அங்கெல்லாம் வாக்குச்சீட்டு முறை அமலில் இருக்கும்போது இங்கே என்ன பிரச்சினை??

நம் குழந்தை நமக்கு பிறந்த குழந்தையாக இருப்பது எப்படி ஒரு மனைவியின் கற்பில் உள்ளதோ அதே போல நம் வாக்கு நம்முடைய வாக்காக இருப்பது வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மையில் உள்ளது. அந்த நம்பகத்தன்மை பலமுறை கேள்விக்குறியான பின் இனியும் அதை அனுமதிக்கலாமா??

#banevmchallenge
#banevm


கட்டுரை:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply