அடிக்கடி பேரழிவைத் தரும் புயல்கள் உருவாகக் காரணம் என்ன??
முன்பு எல்லாம் புயல் என்பது மிக அரிதாகவே நம்மைத்தாக்கும். இரு புயல்களுக்கான இடைவெளி என்பது மிக அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கடந்த 9 ஆண்டுகளில் தானே, வர்தா, ஒக்கி, கஜா, நிவர் என 5 புயல்கள் தமிழகத்தைத்தாக்கி உள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 5 வருடங்களில் மட்டும் 4 புயல்கள்.
இதற்கெல்லாம் காரணம் என்ன??
காற்றழுத்தத்தாழ்வு நிலையின் அதிகபட்ச வேறுபாடுகள் காரணமாகவே புயல்கள் அடிக்கடி தோன்றுகின்றன. அதற்குமுன் மழை எப்படி பெய்கிறது, காற்றழத்தத்தாழ்வு மண்டலம் எப்படி உருவாகிறது என்பதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.
முதலில் “நிலை மாறும் படி நிலை “பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மூன்று விதமான படி நிலைகளுக்குள் அடங்கிவிடும். திட, திரவ, வாயு நிலைகள்.
எந்த ஒரு பொருளும் இந்த மூன்று நிலைகளுக்குள் அடங்கும். அதே நேரத்தில் ஒரு நிலையை விட்டு அடுத்த நிலைக்கு மாறும் திறனும் உண்டு.
உதாரணமாக,
திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் நிலைக்கு “உருகுதல்(melting) “என்று பெயர்.இதற்கு மெழுகு,பனிக்கட்டி ஆகியவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
திரவ நிலையில் இருந்து வாயு நிலை “ஆவியாதல்” (vaporization (நீர்) ).
அதே போல் வாயு நிலையில் இருந்து திரவ நிலை “நீர்மமாதல்” (condensation), திரவ நிலை யில் இருந்து திட நிலைக்கு மாறுதல் “உறைதல்” (freezing) என்று சொல்லலாம்.
இதில் ஆவியாதல் ,நீர்ம மாதல் இந்த இரண்டு முறைகள் மூலம் மழை பெய்கிறது.
தமிழ் நாட்டில் மழைப் பொழிவு என்பது மூன்று வகைகளில் நமக்கு கிடைக்கிறது.
1.வெப்பச்சலனம்
2.தென் மேற்கு பருவ மழை
3.வட கிழக்கு பருவ மழை
1.வெப்பச்சலன மழை.
அதிக வெப்பம் காரணமாக பூமியில் உள்ள நீர் “ஆவியாதல்” மூலம் வளிமண்டலம் சென்று அங்கே மேகத்தை குளிர வைக்கிறது வெப்பகடத்தல் மூலம் (heat transfer). இதனால் மேகத்தின் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டு அதாவது ஈரப்பதம் அதிகமாகி வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறி நீர்மமாதல் முறைப்படி மழையை பொழிய வைக்கிறது .
இதனால் தான் வெப்பச்சலன மழை கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும். அந்த அந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். குறைந்த காலமே கிடைக்கும். ஏன் எனில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மேகம் மட்டுமே குளிர்ந்து மழையை கொடுப்பதால். மேலும் ஒவ்வொரு பகுதியின் வெப்ப நிலை மற்றும் நீர் நிலைகளை பொறுத்து மழை அளவு மாறு படும்.
2.காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக உருவாகும் பருவ மழை.
தென்மேற்கு பருவமழை.
பூமியில் பல்வேறு இடங்களுக்கு இடையே உள்ள வெப்பநிலை மாறுதல் காரணமாக, வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தி மாறுபடும். அதிக வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் மூலம் ஒருபுறம் காற்றின் ஈரப்பதம் அதிகமாக அடர்த்தி கூடும்.இது காற்று அழுத்தத்தை அதிகரிக்கும்.ஒருபுறம் சூடான அடர்த்தி குறைந்த காற்று இருக்கும்.அதன் அழுத்தம் குறைவாக இருக்கும். எனவே அடர்த்தி அதிகம் உள்ள காற்று அடர்த்தி குறைவாக இருக்கும் காற்றின் திசையை நோக்கி பயணிக்கும். எளியவரை வலியவர் ஆட்கொள்வதை போல.
இந்தியாவின் தென் மேற்கு திசையில் அரபிக்கடலில் இருந்து அதிக ஈரப்பதம் உள்ள காற்று, வட கிழக்கு பகுதிகளில் உள்ள சூடான அடர்த்தி குறைந்த காற்று திசையை நோக்கி பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது மேற்கு தொடர்ச்சி மலைகளால் அந்த குளிர்ந்த மேகம் தடுக்க படுகிறது இதனால் வெப்ப மாற்றம் சிறப்பாக நடைபெற்று “நீர்மமாதல்” நிலை உருவாகிறது. இதனால் அந்த திசை முழுதும் நல்ல மழை பொழிகிறது.இதில் மேற்கு திசையில் உள்ள கேரளா, கர்நாடகா, மகாராட்டிரா நல்ல மழையைப் பெறுகிறது.தமிழகம் கிழக்கு திசையில் இருப்பதால் அதிக மழைப்பொழிவை இந்த பருவ மழையால் பெற இயலாது. பின் அந்த தென் மேற்கு குளிர்ந்த மேகங்கள் வட கிழக்கு திசையை நோக்கி பயணித்து அங்கே உள்ள சூடான அடர்த்தி குறைந்த காற்றோடு கலந்து விடுகிறது.
வட கிழக்கு பருவ மழை
இப்படியாக காற்றழுத்தம் அதிகம் உள்ள தென்மேற்கு பருவக்காற்று வட கிழக்கு திசையில் உள்ள காற்றோடு கலந்து அங்கு காற்றின் அடர்த்தியை அதிகரித்து, ஒரு வட கிழக்கு காற்று அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இந்த செயல் தொடர்ந்து நடைபெறும் போது, வட கிழக்கு பகுதியில் காற்று அழுத்தம் அதிகமாகிறது. இங்கே தெற்கு திசையில் இந்தியபெருங்கடலில் சூடான அடர்த்தி குறைந்த காற்று உருவாகிறது. (ஈரப்பதம் உள்ள காற்று தொடர்ச்சியாக வட கிழக்கு திசையை நோக்கி பயணித்தன் விளைவாக).
எனவே இப்போது ஏற்பட்டு இருக்கும் புதிய காற்றழுத்த வேறுபாட்டின் காரணமாக வடகிழக்கு திசையில் இருந்து காற்று தென் மேற்கு திசையை நோக்கி நகர்கிறது. அந்த காற்றானது கிழக்கு தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு ஒடிசா, ஆந்திரா, தமிழ் நாடு என கிழக்கு திசையில் உள்ள பகுதிகளுக்கு நல்ல மழைப் பொழிவை கொடுக்கிறது. பின் அது நகர்ந்து தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மீண்டும் தென் மேற்கு காற்றில் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. பின் மீண்டும் இந்த செயல் சுழற்சி முறையில் தொடர்கிறது.
இந்த காற்று சுழற்சி முறை தான் நமக்கு பருவ மழையை கொடுக்கிறது. எனவே பருவ மழை அதிகமாவதற்கு மலைகளின் பங்கும், அதில் மேல் உள்ள மரங்களின் பங்கும் அதிகம். பூமியில் நீரின் அளவு அதிகம் இருக்கும் போது தான் இந்த காற்று அழுத்த மாறுபாடு அதிகம் உண்டாகும்.
பருவ மழை பொய்த்து புயல் வருவதன் காரணம்??
பொதுவாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான காரணத்தால் புயல் சின்னம் உருவாகி உள்ளது என்று கூறுவார்கள்.இதற்கு காரணம் காற்றில் உள்ள அடர்த்தி மாறுபாடு தான். இந்த மாறுபாட்டின் விகிதம் மிக அதிகமாக இருக்கும் போது காற்றின் வேகம் அதிக மாகும். அடர்த்தி மிக அதிகம் உள்ள காற்று, அடர்த்தி மிகக் குறைந்த காற்றை நோக்கி மிக வேகமாக பயணிக்கும். அதுதான் புயல்.
காற்று, வெப்பம், மலை, மரங்கள்தான் இணைந்து நமக்கு மழையைத் தருகின்றன. ஆனால் மனிதனின் பேராசையால் காடுகள், மலைகள், மரங்கள் அழிக்கப்படல் இவற்றால் ஒரு பக்கம் குறித்த காலத்தில் பெய்யவேண்டிய மழை சரியாக பெய்யாமல் போக, அதே நேரத்தில் மோசமான நீர்சேமிப்பு மற்றும் மோசமான சுற்றுப்புற அழிவைத் தரும் ஆலைகள் பெருக்கம், வாகன பெருக்கம் இவற்றால் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்து புவி வெப்பமயமாதல் அதிகம் ஆகிறது. இதனால் ஒரு புறம் மழையை சரியாக பெய்யாமல் அடர்த்தி அதிகம் உள்ள காற்று மண்டலம், இன்னொரு பக்கம் அதீத புவிவெப்பத்தால் ஆவியாதல அதிகமாகி மிகவும் அடர்வு குறைந்த காற்று மண்டலம். இந்த அதீத அடர்வு வேறுபாட்டால் அடர்வு அதிகம் உள்ள காற்று மிகவும் அடர்வு குறைந்த காற்றை நோக்கி மிக அதிக வேகத்தில் நகர்கிறது. இதுவே மிக வலுவான புயலாக மாறக்காரணம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாழ்வார் அவர்கள் புவி வெப்பமயமாதல் காரணமாக பூமி சூடாகி இனி தமிழகத்தில் பருவ மழைக்கு வாய்ப்பு இல்லை, புயல் மழைதான் என்றார்.
தீர்க்கதரிசியான அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவ சொன்ன வாக்கு இன்றும் பலிக்கிறது.
இனியாவது அவர் காட்டிய வழிப்படி இயற்கையை காப்போம்.!!
நீர் மேலாண்மையை மேம்படுத்துவோம்..
—
கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி