Home>>இந்தியா>>சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதிவேளாண்மை

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது.

டெல்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18ம் நாளை பெண் உழவர்கள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவலின்படி இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று (18.01.2021) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை 11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராசிவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

திட்டமிட்டபடி காலை11.30 மணிக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை சின்னமலையில் ராசிவ் காந்தி சிலை அருகில் கூட முற்படும்போதே, ஆண் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர்.

ஆனால் அவர்களை நெருங்கவிடாமல், உழவர்களுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி பெண்கள் முன்னேறினர். பெண்களை தடுத்து நிறுத்திய ஆண் காவலர்களுக்கு எதிராகவும் பெண்கள் முழக்கமிட்டவுடன், பெண் காவலர்கள் பாய்ந்து வந்து கயிறுகளை கொண்டு வளைத்துப் பிடித்து கைது செய்ய முற்பட்டனர்.

ஆனாலும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவலர்கள் பெண்களை கைது செய்து வேளச்சேரியில் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆங்காங்கே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்களை போராட்டத்திற்குள் வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டது. தோழர்கள் காவல்துறை அராஜகத்தைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடும் உழவர்களுக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவிக்கும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள்.


செய்தி உதவி:
பேரளம் பிரகாஷ்

Leave a Reply