கனடா நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.கனடா நாட்டின் அரசு, இது சார்ந்த கொண்டாட்டங்களுக்கு நிதி வழங்கியும் ஊக்குவித்து வருகிறது.
கனடாவில் உள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கும் டொரண்டோ பல்கலைக்கழகம் வருடா வருடம் தமிழ் மரபையும் பண்பாட்டையும் போற்றி விழா எடுக்கிறது.
இதைத் தொடர்ந்து, தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் டொரண்டோ பல்கலைக்கழகம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழின் மேன்மையைப் பரப்புவதில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஒருவருக்கு டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்று முடிவு செய்தது.இதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தாகியுள்ளது.
உலகளாவிய இந்த விருது டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ், விருது, பணமுடிப்பு ஆகியவற்றை அடங்கியது. இந்த விருதுக்கு நாவலர் நெடுஞ்செழியன் நினைவாக ‘தகைசால் தமிழ் இலக்கிய விருது’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உண்மையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்திய, இலங்கை, சிங்கை-மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் கனடாவும் ஒன்று.
அங்கே மிக உயரிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது அங்கே வாழும் 3 லட்சம் தமிழர்களுக்கு மட்டுமல்ல; கனடாவுக்கு வெளியே உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கும் தமிழைப் பரவச் செய்தற்கும் இது மிக உன்னதமான பணி.
கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிதி திரட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டு வருகிறது. இணைய வழியாக நிதி அளிக்கவும் தொழிற்நுட்ப வசதிகள் கனடிய தமிழ்ப் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இருக்கை நிதி நிலைமை பற்றி பேசிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இருக்கை அமைய 3 மில்லியன் டாலர்கள் தேவை என்றும், ஏற்கெனவே 1.4 மில்லியன் டாலர்கள் சேகரிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.
2021 பெப்ரவரி 23 அன்று தமிழக அரசு தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.இதற்காகத், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பண்டியராஜன் மற்றும் தமிழ் நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாடுபட்டவர்களுக்கு நன்றி இந்த நிதியுதவியைத் தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக, பேரவையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மொழியைப் பரவச் செய்வதில் இது முக்கியமானது. அதுமட்டுமல்ல; மேலைநாட்டாருடைய ஆய்வறிவுத் துறையும், எங்களுடைய இலக்கிய அறிவுச் செழுமையும் சங்கமிக்கக் கூடியதாக அமையவிருக்கும் தமிழ் இருக்கைகளை புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிறுவுவது என்பது மிக உன்னதமான சமுதாயப் பணியாகும்; சர்வதேச அளவிலான அறிவுப் பணியாகும்.
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் கனடா