Home>>அரசியல்>>திருத்துறைப்பூண்டி தொகுதிக்கான கோரிக்கைகள்
அரசியல்தமிழ்நாடுதேர்தல்

திருத்துறைப்பூண்டி தொகுதிக்கான கோரிக்கைகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி விவசாய மக்கள் வாழும் தொகுதி இந்த தொகுதிக்கு என்ன தேவை வேண்டும் என்று வேட்பாளர்கள் புரிந்து கொள்ள இந்த பதிவு;

திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பேருந்து வந்து செல்ல மட்டுமே இருக்கிறது. பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க அமர இடம் கூட இல்லை. மற்ற மாவட்ட மக்கள் வந்தால் எங்கே பேருந்து நிலையம் என்று கேட்கும் அளவிலே உள்ளது. தரமான பேருந்து நிலையம் வேண்டும்.

நகரத்தின் வீதிகளில் சாக்கடை முறையாக செல்லவில்லை, முறையான சாக்கடை பாதைகளை அமைத்து நகரை காப்பாற்ற வேண்டும்

குறுகலான நகர்ப்புற சாலைகளால் போக்குவரத்து நெரிசல் நிறைந்தே காணப்படுகிறது. நெரிசலை குறைக்கும் வகையில் அரசு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

சிறு மழைக்கே நகரம் மிதக்கிறது முறையான வடிகால்களை அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள பல கிராமங்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும்.

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையும் தரம் உயர்த்தப்படுவதன் மூலம் சுற்றியுள்ள மக்கள் மருத்துவ தேவை எளிதாகும்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பல சாலைகள் 10 வருடங்களாக பள்ளங்களாக உள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும்.

தரமற்ற சாலைகளால் அவசர மருத்துவ உதவிக்கு கூட விரைந்து வர முடியாத நிலை.

பல கிராமங்களில் முறையான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் பஞ்சம் இல்லை முறையான திட்டம் இல்லாததால் குடிநீர் பல இடங்களுக்கு சென்றடைவதில்லை. இதற்கு அரசு முறையான திட்டத்தை வகுக்க வேண்டும்.

விவசாயத்தை நம்பி தினசரி சம்பத்திற்கு வேலை செய்யும் மக்கள், அந்த தினசரி சம்பளத்தைக்கூட அரசுக்கே திருப்பி செலுத்தும் வகையில் திரும்பும் திசையெல்லாம் மதுக்கடைகள் தான்.

இளைஞர்கள் பலரின் வாழ்க்கையை அழித்துவரும் இடங்களாகவே செயல்படும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் தொகுதியை விட்ட விரட்டும் வகையில் அரசு நடவடிக்கை வேண்டும்.

கடற்கரையோர மக்களின் மற்றுமொரு வாழ்வதாரமான இருக்கும் மீனவர்களுக்கு முத்துப்பேட்டை பகுதியில் மீன்பிடித்தளம் அமைக்க வேண்டும்.

புயல் மழையால் பாதிக்கப்படும் வீடுகள் இன்னும் 70% மேலாகவே உள்ளன. அரசு முறையான நிதி செலுத்தி சரி செய்ய வேண்டும்.

கர்நாடகவில் இருந்து வரும் காவிரி நீர் காணாமல் போய்விடுகிறது கடைமடை பகுதிகளில் முறையாக தூர்வார வேண்டும். பல வருடங்களில் மக்களே நிதி திரட்டி தூர்வாரும் நிலை தான்.

உலக புகழ்பெற்ற மாங்குரோவ் காடுகள் இந்த தொகுதியில் தான் உள்ளது. உலகில் எங்கும் இல்லாத இந்த இயற்கை பொக்கிஷத்தை எந்த அரசு அமைந்தாலும் காக்கவேண்டும். காடுகள் பெருகவும் உரிய நடவடிக்கை வேண்டும்.


கட்டுரை உதவி:
ஆனந்த்,
கற்பகநாதர்குளம்.

Leave a Reply