Home>>இலக்கியம்>>தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்
இலக்கியம்உலகம்கட்டுரைகள்செய்திகள்நூல்கள்

தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்

தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87.

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். பிரெஞ்சுமொழி அறிஞர் பிரான்சுவா குரோ அவர்கள் தமிழ்மொழிக்குக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினை வழங்கியுள்ளார். தமிழ் இலக்கியங்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர். பிரெஞ்சு மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்தவர். பலரைத் தமிழ் அறிந்த அறிஞர்களாக மாற்றியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்பாளராக விளங்கியவர். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களால் போற்றப்படுபவராக விளங்குபவர் அறிஞர் குரோ.

அறிஞர் குரோ அவர்கள் பிரான்சு நாட்டில் இலியோன் நகரில் 17.12.1933 இல் பிறந்தவர். பட்டப் படிப்பில் செவ்வியல் கல்வி, தத்துவம், வரலாறு, மானுடவியல் பயின்றார். ஒப்பியல் இலக்கியம் என்ற வகையில் கிரேக்கம், இலத்தீன், சமற்கிருத இலக்கியங்களைப் பயின்றவர். அவ்வகையில் தமிழ் இலக்கியங்களும் இவருக்கு அறிமுகம் ஆயின. பாரிசில் உள்ள இனால்கோ (Inalco) நிறுவனத்தில் தமிழ் கற்றார்.

1963 இல் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மாணவராக இணைந்தார். வி.மு.சுப்பிரமணிய ஐயர், முனிசாமி நாயுடு உள்ளிட்டவர்களிடம் தமிழ் கற்றார். நீ. கந்தசாமி பிள்ளை, தி.வே. கோபாலையர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் பழகும் பேறுபெற்றவர். தமிழ் இலக்கண, இலக்கியங்கள், வரலாறு உள்ளிட்ட இலக்கியப் புலங்களில் பரந்துபட்ட அறிவுடைய குரோ அவர்கள் தம் தகுதியை உயர்த்திக்கொண்டு பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். (இந்நிறுவனத்தின் அலுவலகம் புனா, பாங்காக், புதுவை, கோலாலம்பூர், டோக்கியோ… உள்ளிட்ட இடங்களில் உள்ளது).

 சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடைய குரோ அவர்கள் தமிழ் அறிஞர்களால் பெரும்பாலும் நுழைவதற்கு அருமைப்பாடுடையதாக இருந்த பரிபாடல் நூலினைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துப் பிரெஞ்சுமொழி அறிந்த மக்கள் படித்துப் பயன்பெறும்வண்ணம் செய்தார். இந்த நூலினைப் பல வகையில் கற்ற குரோ அவர்கள் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் உள்ளிட்ட அறிஞர்களைப் பாடச்செய்து அந்த நூலில் பொதிந்துள்ள இசையுண்மைகளை அறிந்ததாக அறியமுடிகின்றது. இந்த நூல் 1968 இல் வெளிவந்தது.

முன்னுரை பிரெஞ்சுமொழியில் உள்ளது. ஒரு பக்கம் பிரெஞ்சுமொழியிலும் மறுபக்கம் மூலவடிவம் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. பிரெஞ்சுமொழி மட்டும் அறிந்தவர்கள் தமிழ் இலக்கியத்தை அறிய இது பொன்னான வாய்ப்பாக அமைந்த நூலாகும்.

 திருக்குறள் காமத்துப்பால் பகுதியைக் குரோ அவர்கள் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்(1993). இந்நூல் என் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

பக்தி இலக்கியம் என்ற வகையில் இவர் காரைக்காலம்மையார் இயற்றிய இலக்கியங்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார் (1982). இந்த நூலில் காரைக்காலம்மையார் பற்றிய தெளிவான வரலாறு பிரெஞ்சுமொழியில் உள்ளது. அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவாலங்காட்டுத் திருப்பதிகம், சேக்கிழார் பாடிய காரைக்காலம்மையார் புராணம் (66 பாடல்கள்) பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையாரை நன்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார் குரோ.

 தமிழ் மக்களின் நம்பிக்கை, பண்பாடு, பழக்கவழக்கம் பற்றி நன்கு அறிந்து, குரோ அவர்கள் அவை தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டவர்.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த இவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கிய பிரான்சுவா குரோ, 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்த பிரான்சுவா குரோ, பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லியோன் நகரில் வசித்து வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்சிலேயே தங்கிவிட்ட பிரான்சுவா குரோ, தன்னிடமிருந்த ஏறத்தாழ 10,000 அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்.

பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரைக்கால் ஊர் பற்றியும் அதன் சிறப்புகள் குறித்தும் பிரெஞ்சுமொழியில் குரோ அவர்கள் எழுதியுள்ளார். அதுபோல் குடவோலை முறை பற்றிய விரிவான செய்திகளைத் தரும் உத்திரமேரூர் பற்றிய வரலாற்றை மிகச்சிறப்பாக குரோ அவர்கள் பிரஞ்சுமொழியில் எழுதியுள்ளார்(1970).

 தி.வே.கோபாலையருடன் இணைந்து தேவாரம் (பண்முறையில் அமைந்த பதிப்பு) வெளியிட்டுள்ளார். இதில் அப்பர், சுந்தரர் பாடிய பாடல்கள் பண்முறையில் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. புறநானூறு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குரோ அவர்கள் பிரெஞ்சு, ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். தமிழ் ஆய்வுத்திட்டங்கள் பலவற்றிற்குத் தலைமையேற்று நடத்திவருகிறார். இவரிடம் பாரிசில் பல மாணவர்கள் தமிழ் கற்று வருகின்றனர். நார்வே உள்ளிட்ட பிறநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 1960 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் குரோ அவர்கள் பாரிசு பல்கலைக்கழகத்தின் உயர் ஆய்வு நிறுவனத்தில் (Ecole Pratique Des Hautes Etudes) தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான துறையில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். பிரெஞ்சு நிறுவனத்தில் ஆய்வு மாணவராக வந்த குரோ அவர்கள் 1977 முதல் 1989 வரை தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம்வரை நல்ல பயிற்சியுடைய குரோ அவர்கள் தலித் இலக்கியம் பற்றிய நல்ல புரிதல் உடையவர். தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து நாகலிங்கமரம் (L’Arbre Nagalinga) என்னும் பெயரில் கண்ணனுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இந்த நூலில் சூடாமணி, புதுமைப்பித்தன், மௌனி, சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. இரகுநாதன், இலா.சா. இராமாமிருதம், தி.சானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, நாகராசன், கு.அழகிரிசாமி, சம்பத், வண்ணநிலவன், பூமணி, தமிழ்ச்செல்வன், பிரமிள், நாஞ்சில்நாடன், கண்ணகி, கா.நா.சுப்பிரமணியன், வேல இராமமூர்த்தி ஆகியோரின் சிறந்த கதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 தமிழின் சமகாலப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், மௌனி, பிரபஞ்சன், இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த நல்ல மதிப்பீடுகளும் இவரிடம் உண்டு.

 உலகத் தமிழ்மாநாடு என்ற பெயரில் உலகத்து அறிஞர்கள் கலந்துகொள்ளும் தமிழுக்கு வளம் சேர்க்கும் உலகத்தமிழ் மாநாடுகள் அனைத்திலும் கலந்துகொண்டு கட்டுரை படித்தவர். தரமான பல கட்டுரைகளை எழுதி அறிஞர்கள் உள்ளத்தில் இடம்பிடித்தவர். கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை படிக்கும் இயல்புடைய இவர் தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுரைகளைப் பதிப்பித்த பெருமைக்கு உரியவர்.

 இவர் எழுதிய ‘மொழி இலக்கியம் குறித்த சிக்கல்கள் கொள்கைகள்’ என்ற கட்டுரையில் பிரெஞ்சு மொழியின் நிலை பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். வட்டார மொழியியல் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையாக இது உள்ளது. பிரெஞ்சுமொழி அகாதெமி பற்றியும், பிரெஞ்சு மொழியின் வரலாறு, பயன்பாடு பற்றியும் விளக்கியுள்ளார். பிரெஞ்சுமொழி ஒரு நாட்டின் தனிமொழியாக வளர்ந்த வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார். பிரான்சு தவிர்ந்த பிற நாடுகளில் பேசப்படும் பிரெஞ்சுமொழியின் நிலை பற்றியும் இக்கட்டுரை விளக்கியுள்ளது.

 பிரான்சு நாட்டின் இலியோன் நகரில் வசித்துவரும் இவர் ஆண்டின் சில மாதங்கள் புதுச்சேரிக்கு வந்து தமிழாய்வுகளில் ஈடுபடுவது வழக்கம். இவர்தம் பணிகள் ஆரவாரம் அற்ற அறிவுப்பணி. ஒற்றை வரியில் இவர் பணிகளை வரையறுக்க வேண்டுமெனில் தமிழ் இலக்கியங்கள் பிரஞ்சுமொழிக்கு அறிமுகம் ஆனமைக்கு அறிஞர் குரோ அவர்களே காரணம் எனலாம். இவர் முயற்சியால் புதுவையிலும் பாரிசிலும் தமிழாய்வுகள் வளம்பெற்று வருகின்றன எனில் மிகையன்று.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்

நனி நன்றி :
தமிழ் ஓசை நாளேடு,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர் தொடர் 11, சென்னை, 07.12.2008
முனைவர் பொற்கோ
கண்ணன்,எம்.
பிரெஞ்சு நிறுவன நூலகம்(IFP), புதுச்சேரி
பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்(EFEO), புதுச்சேரி

மூலம்: https://muelangovan.blogspot.com/2008/12/17121933.html

Leave a Reply