தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
“தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடுக்கிடச் செய்தது.
அண்மைக்காலமாக தமிழ் மொழி – இனம் – தாயகம் ஆகியவற்றின் உரிமைகளுக்காக அறிவுத் துறையிலும், போராட்டக் களத்திலும் களமாடி வந்த ஆளுமைகள் அடுத்தடுத்துக் காலமாவது பெரும் துயரமளிக்கிறது.
கோ. இளவழகன் அவர்கள், மாணவப் பருவத்திலேயே இன உணர்ச்சியும் மொழி உணர்ச்சியும் கொண்டு, 1965 – இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டவர். தமிழ் மொழி – இனம் ஆகியவற்றை சீரழித்த ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் எதிர்க்கும் உணர்வினை இளமையிலேயே பெற்றவர்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி” அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் “உலகத் தமிழ்க் கழகத்தை” நிறுவியவர்களில் முகாமையானவர் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணர் மன்றம் தொடங்கிச் செயல்பட்டார். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதை தமது பண்பாகக் கொண்டிருந்தார்.
அவர் நிறுவி நடத்திவந்த “தமிழ்மண்” பதிப்பகம், பழந்தமிழ் நூல்களையும், சமகாலத் தமிழறிஞர்களின் நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை “சங்க இலக்கியக் களஞ்சியம்” (22 தொகுப்புகள்), பாவவேந்தர் படைப்புத் தொகுப்புகள் (25 தொகுப்புகள்), நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் (32 நூல்கள்), பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (53 நூல்கள்), நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (10 நூல்கள்), தொல்காப்பிய பழைய உரைகள் (19 நூல்கள் – பதிப்பாசிரியர் : “இலக்கணக்கடல்” கோபாலய்யர்), அண்ணாவின் படைப்புத் தொகுப்புகள்… இவை போல் இன்னும் பல அரிய நூல்களுக்கு மறு உருவாக்கம் தந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேருதவியாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவர். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் ஊக்கமளித்தவர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டி, சென்னை புத்தகக்காட்சியில் “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” விற்பனை அரங்கம் முதன்முதலாகக் கிடைக்கத் துணை நின்றார். “தமிழ்த்தேசியம் – அரசியல், அறம், அமைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.
தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் (பபாசி – BAPASI) பொறுப்பு வகித்து, அதன் வளர்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றார். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சர்களுடன் பேசி பணியாற்றினார்.
இளமை முதல் இறுதிவரை தமிழ்மொழிக்கும், தமிழினத்திற்கும் உழைத்த இளவழகனார் மறைவு, பெரும் துயரம் அளிக்கிறது! தமிழ் இன உணர்வுப் போராளி இளவழகனார்க்கு வீரவணக்கம்! அவருடைய இல்லத்தார்க்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்