“அந்த அபாயம் வந்தே விட்டது!” என்பதை மையமாக கொண்டு தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் மற்றும் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
வருகிற சூன் மாதம் கல்விப் பருவத்திலிருந்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை – 2020, குறைந்தபட்சம் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலாவது நடைமுறைப்படுத்தப்படும்; சூன் மாதம் முதல் இது இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும். புதிய கல்விக் கொள்கையின் கீழ் நடைமுறைப்படுத்த 181 செயற்திட்டங்கள் உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படும்” என்று கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் multi-disciplinary படிப்பு என்பதன்மூலம், சமசுகிருதம், வேத- இதிகாச, கிந்துத்துவக் கருத்துகள் அனைத்து மண்டைகளுக்குள்ளும் திணிக்கப்படும். “மாநில அளவில் நடைமுறை தாமதமானாலும், மத்திய பல்கலைக்கழகங்களில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று மத்திய அரசு அறிவிக்கிறது. சென்ற ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஏற்பளிப்பு தந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு கூறியது.
இது சுதந்திர இந்தியாவின் மூன்றாவது கல்விக்கொள்கை. இதுவரை கல்விக் கொள்கைகள் சமயச்சார்பற்று இருந்தன.
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அறிக்கையின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறது: “21ஆம் நூற்றாண்டின் தேவைகளையும், உலகளாவிய கல்வி இலக்குகளையும் கருத்தில் கொள்கிற அதே சமயம், இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமாக மரபுகளையும், விழுமியங்களையும் ஒருசேர கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இது உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறது… இந்திய மரபில் கல்வி என்பது அறிவைப் பெறுவது அல்ல, சுயத்தை அறிதல்… ஆசிரியர்களுக்கான தகுதி புதிய வரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்”. (இந்து தமிழ் திசை, 3 ஆகஸ்ட் 2020)
இவர்கள் பேசும் பிரத்தியேக மரபுகள் மற்றும் விழுமியங்கள் என்பவை கிந்துத்துவ கருத்தியல்கள்தாம். இவர்கள் பேசும் “சுயம்” என்பது ஆரியமும், வர்ணதர்மத்தின் அடிப்படையிலான கருத்தியலும்தான். சுயம் என்றால் எவருடைய சுயம்?
கிந்துத்துவ இந்தியாவை படைப்பதற்காகவே. உரிய வகையில் பள்ளி-கல்லூரி மாணவர்களை மூளைசலவை செய்வதற்காகவே உருவாக்கப்படக்கூடிய புதிய கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள். காசு உள்ளவர்கள் படிக்கப்போ!, மற்றவர்கள் உடலுழைப்பு வேலைக்கு போ! என்பதுதான் இக்கல்வி கொள்கையுடைய சாரம்.
ஆரிய, பார்ப்பனிய, சமஸ்கிருத, வருணாசிரம சமூகத்தை நிரந்தரப் படுத்துவதற்காக, எதிர்காலத் தலைமுறைகளை கிந்துத்துவ அச்சில் வார்த்தெடுக்க, இப்புதியக் கல்வித்திட்டத்தை கிந்துத்துவவாதிகள் வகுத்தார்கள். இது அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடியே புதிய கல்விக் கொள்கை அல்ல; இது “தேசியக் கல்விக் கொள்கை”. இவர்கள் விரும்பும் அந்த கிந்து ராஷ்டிரத்தை படிப்பதற்காகவே, இத்திட்டத்தை வகுத்து உள்ளதால், இது தேசிய கல்விக் கொள்கை என்று அழைக்கிறார்கள்.
இதை இந்தியா முழுவதும் மாணவர்களும், பல்வேறு சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்த்தார்கள். ஆனாலும் மோடி அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. மாணவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டு, நாடு கொரோனா முடக்கத்தில் போராட முடியாத நிலையில் கிடக்கும்போது, இந்த பார்ப்பனீய கல்விக் கொள்கை நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இக்கல்வி கொள்கை சாமானிய மக்களின் கல்வி வாய்ப்புகளையும், சமூகநீதியையும், மாநிலங்களின் கல்வி குறித்த அதிகாரங்களையும் பறித்துவிடும். பள்ளிக்கல்வியில் 3, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “உரிய பள்ளி அதிகார அமைப்பு” மூலம் தேர்வு நடத்தப்படும்; அதாவது பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பதன் மூலமாக நாட்டின் பன்மைத்தன்மையை ஒழித்துக்கட்ட இருக்கிறார்கள். கல்லூரி- பல்கலைக்கழகங்களில், சாதாரண கலை மற்றும் அறிவியல் வகுப்புகளுக்கும் அகில இந்திய பொதுதேர்வு நடத்தப்பட இருக்கிறது. எந்த எளிய வகுப்பினருக்கும் கல்வி கிடைத்துவிடக்கூடாது என்பதில் ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் மோடி அரசு குறியாக இருக்கிறது. கல்வித் துறையை முழுமையாக மாநிலங்களிடம் இருந்து பறித்தெடுத்து அதை ஆர்.எஸ்.எஸ் சிந்தனைவாதிகளிடம் ஒப்படைக்கும் வேலையை இந்திய அரசு நடைமுறையில் செய்கிறது.
மும்மொழித் திட்டப்படி, கிந்தியும் சமசுகிருதமும் இந்தியா முழுவதும் திணிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தின் மூலம் ஒற்றை ஆரிய இனப்பெருமிதம், ஒற்றை சமஸ்கிருத மொழி மேலாண்மை, ஒற்றை இந்தி மொழிப் பயன்பாடு, வர்ணாசிரம – சாதிய பண்பாட்டை நிலைநிறுத்தல் ஆகியவை நிரந்தரப்படுத்தப்படும். ஒரு மதம், ஒரு மொழி, ஒரு சாதியின் மேலாண்மையை நாடுமுழுவதும், அனைத்து சமூகங்களின் மீதும் நிறுவுதல், ஆரியம், பார்ப்பனியம், வேதம், புராணம், இதிகாசம் ஆகிவற்றை முழுமையாக மக்கள் மயமாக்குவதன் மூலம், எதிர்கால கிந்து ராஷ்டிரத்தைப் படைப்பதற்கான வேலைத்திட்டத்தை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வழங்குகிறார்கள். முன்னமே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆகிவிட்ட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கிந்து ராஷ்டிரா திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர, அனைத்து மாணவர்களையும் மூளைச்சலவை செய்யும் வேலையைச் செய்ய இருக்கிறார்கள். இதற்காகவே ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் எல்லாம் தனியார்மயம் ஆக இருக்கின்றன. பன்னாட்டு பல்கலைக்கழகங்களோடு, இந்தியப் பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படும். பல்கலைக்கழகக் கல்வி தனியார்மயம் ஆவதோடு, கல்விக்கு எளியவர்கள் தரமுடியாத விலை நிர்ணயம் செய்யப்படும். வரைவு அறிக்கையை தயாரித்த குழு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் தோய்ந்தது. முன்னமே அரசு இயந்திரம் ஆர்.எஸ்.எஸ் மயமாகி இருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் பார்ப்பன சட்டகத்துக்குள் அடக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துகிறார்கள்.
சமசுகிருதம் மூன்றாவது மொழி, ஒவ்வொரு பள்ளிக்கும் சமஸ்கிருத ஆசிரியர் என்று இத்திட்டம் அறிவிக்கிறது. ஒடுக்கப்பட்ட, சூத்திர சாதிகளைக் குறிவைத்து உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முன்பு சென்னை மாகாணத்தில் இராஜகோபாலாச்சாரியார் காலத்தில் அறிவிக்கப்பட்டு எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்ட குலக்கல்வி முறை இப்போது இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கை கல்வியில் தேர்ச்சி அடையாத மாணவர்களை உடலுழைப்புத் தொழில்களுக்கு விரட்டியடிக்கும் திட்டத்தை இது உள்ளடக்கியிருக்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் இணைந்து கல்வி வணிகம் செய்ய இருக்கின்றன. இனி கல்வியின் விலை கூடும். சாமானியர்கள் கல்வி பெற முடியாது. சமூகநீதியின் அடிப்படையில் பின்தங்கியுள்ள விளிம்புநிலை மக்கள் முற்றிலுமாகக் கல்வியிலிருந்து நீக்கப்பட்டு, முழுமையாக உடல் உழைப்புக்கானவர்களாக ஆக்கப்படுவார்கள்.
இசுரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தேசிய கல்வி கொள்கை வரைவு 2019- ஐ வழங்கியது. 2020 மே 31 இல் வழங்கப்பட்ட இந்த கல்விக் கொள்கை குறித்து சூன் 30 வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்தது. அனைத்து சமூக சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்; வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அவர்களுடைய வேண்டுகோள்கள் அனைத்தையும் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்த மோடி அரசு இக்கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவெடுத்தது. நாடாளுமன்றத்தில்கூட இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.
2025ல் கிந்து ராஷ்டிரத்தைப் படைத்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் மோடி அரசு, திட்டமிட்டபடியே இப்போது வருகிற சூன் மாதம் இதை நடைமுறைப்படுத்துகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகளை பல்வேறு மாநில அரசுகளும், சமூக சிந்தனையாளர்களும், அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஆலோசிக்க வேண்டும். இது உடனடி தேவையாகும்!
—
கட்டுரை:
பேராசிரியர் த.செயராமன்
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,
26.05.2021
சமூக ஊடக பதிவு முகவரி: https://www.facebook.com/permalink.php?story_fbid=328173051996456&id=100044112903885