தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
சென்ற ஆண்டு பெரிதும் பரவிய கோவிட் – 19ம், அதைவிட இந்த ஆண்டு இரண்டாவது அலை பெருந்தொற்றும் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் முகாமையான தேவையை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு ஓரளவு இதனை உணர்ந்திருந்தாலும் இத்திசையில் அதன் செயல்பாடு இன்னும் வேகம் பெற வேண்டிருக்கிறது.
குறிப்பாக ஆங்காங்கே தன்னார்வமாக சொந்த முயற்சியில் கோவிட் -19 நோய்த் தடுப்பிலும், சிகிச்சையிலும் பணியாற்றி வரும் சித்த மருத்துவர்களுக்கு போதிய ஊக்கம் தரப்படவில்லை. கோவிட் 19 மட்டுமின்றி பல்வேறு கொடிய நோய்களுக்கும் சித்த மருத்துவம் பயன்தருவதை மக்களின் பட்டறிவும் அறவியலாளர்களின் ஆய்வுகளும் உணர்த்திவருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கோவிட் 19 சிகிச்சைக்கும் தொடர்காலத்தில் அனைத்து வகை நோய் சிகிச்சைக்கும் சித்த மருத்துவத்தை இப்போது உள்ளதைவிட பல மடங்கு பயன்படுத்த முன்வர வேண்டும்.
மாவட்டம் தோறும் சித்த மருத்துவமனைகளை அரசு நிறுவ வேண்டும். இப்போது உடனடியாக அரசு மருத்துமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவை குறைந்தது 100 படுக்கை வசதி உள்ள பிரிவுகளாக வலுப்படுத்த வேண்டும். அரசு முதன்மை சுகாரதார மையங்களில் சித்த மருத்துவர்கள் அன்றாடம் வருகைப் புரிவதை உறுதி செய்யவேண்டும்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் குறைந்தது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு சித்த மருத்துவ கல்லூரி 100 மாணவர்கள் சேர்க்கைகான இடத்தோடு உருவாக்கப்பட வேண்டும்.
தனியே சித்த மருத்துவ பல்கலைகழகம் நிறுவப்பட வேண்டும்.
அரசு துறைகளின் வழியாகவும், தொண்டு அமைப்புகளின் துணைக் கொண்டும் வீடு தோறும் கபசுர குடிநீர் சூரணம், நிலவேம்பு பொடி, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட கோவிட் 19 க்கான மருந்துகளை விரிவான அளவில் வழங்குவதற்கு போர்க்கால முனைப்போடு பணிகள் முடிக்கிவிட படவேண்டும். அத்துடன் இதுகுறித்த விழிப்புணர்வு பரப்புரை விரிவான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு அளிக்கும். முக்கியத்துவத்தை சித்த மருந்துகளுக்கும் கொடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த முன்வருமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன்.
—
செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.