Home>>இந்தியா>>ஓய்வெடுங்கள் ஓவியஞானி இளையராஜாவே
இந்தியாகலைசெய்திகள்தமிழ்நாடு

ஓய்வெடுங்கள் ஓவியஞானி இளையராஜாவே

தமிழ் மொழிக்கு தொடர்ந்து பங்காற்றிவரும் சகோதரர் இங்கர்சால் அவர்கள் மறைந்த ஓவியர் இளையராஜா அவர்கள் பற்றி ஒரு சிறு கட்டுரையை எழுதி தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை தங்களுக்கு இங்கு பகிர்கிறோம்.


காலையில் விழித்து கைபேசியில் எடுத்தவுடன் கண்ணில் பட்டது அந்த முகம், ஏதோ பிறந்தநாள் வாழ்த்து என்று அடுத்த பதிவை நோக்கி நகர்ந்தேன், மேலும் இருமுறை அதே முகத்தை பார்த்தவுடன் மனம் பதற தொடங்கியது. ஓவியர் இளையராஜா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு ஒருநாளாகியும் சிறிதும் கனம் குறையாமல் நெஞ்சை பிசைகிறது.

வாழ்வில் நிறைய ஓவியங்களை கடந்து இருக்கிறேன், உலகில் சில பெரிய ஓவியர்கள் படங்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் கடந்து இருக்கிறேன், அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். ஆனால் எதுவுமே நெருக்கமாக இருக்காது. முதல் முறையாக அந்த நெருக்கத்தை ஓவியர் இளையராஜாவின் ஓவியத்தில் தான் உணர்ந்திருந்தேன்.

அவரின் ஓவியங்களை எடுத்துக்கொண்டு, வரைந்தவர் யார் என்று தேடித் திரிந்தேன். பெரும் தேடலுக்குப் பிறகு அவரின் பெயரை தெரிந்து கொண்டேன். கூகுள் தேடுபொறியில் அவரின் பெயரை போட்டு ஓவியம் என்று தேடினால் இசைஞானி இளையராஜாவின் ஓவியங்கள் மட்டுமே கிடைத்தது. திரை பிரபலங்கள் எப்போதும் பிறரை தங்களுக்கு தெரியாமலே மறைத்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் அனைவருக்கும் ஓவியம் என்று ரசித்து, பிறருக்கு பகிர்ந்து, முகப்பாக வைத்து, கவிதை எழுதி, தமிழர் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, என பல வழிகள் அவரது ஓவியத்தை பகிர்ந்து இருப்பார்கள். ஆனால் அதில் 90 சதவீதமான நபர்களுக்கு அவர் யார் என்று தெரியாது. இதனை வாசிக்கும் ஓவியர்களுக்கு இந்த கருத்தை ஏற்க கடினமாக இருக்கலாம் ஆனால் அதுவே உண்மை.

இந்த தமிழ் உலகம் திரைத்துறையில் இருப்பவர்களை தூக்கி கொண்டாடியதை போல, அரசியலில் இருப்பவர்கள் தூக்கி கொண்டாடியது போல, பிற தளத்தில் இருப்பவர்களை தூக்கி கொண்டாடியது இல்லை. அதிலும் இன்றளவும் முழு உயிர்ப்போடு வாழும் ஓவியக்கலை கலைஞர்களை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

யாரிடம் பேசாத ஒரு குழந்தை தனது ஓவியத் இடம் பேசியதாக அவர்கள் பெற்றோர் குரல் பதிவு ஒன்று பகிர்ந்து இருந்தார்கள் அதனைக் கேட்டு நான் அழுதேன் இதுவரை பெற்ற எந்த ஒரு விருதும் அதற்கு முன்பு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன் நான் இறந்தாலும் எனது உயிர் நான் வரைந்த ஓவியங்களில் இருக்குமென்று ஓவியர் இளையராஜா பேட்டி ஒன்றில் கோரியிருந்தார் அது நூறு சதவீத உண்மை அவரின் ஓவியம் அனைவரிடம் பேசுகிறது அனைவரிடமும் பேசுகிறது ஒரு சிலர் மட்டும்தான் அதற்கு பதில் பேசுகிறார்கள். அந்த சிறுவனை போல.

இளையராஜா குடும்பத்தினருக்கு சரியான பணம் கொடுத்து, இளையராஜாவின் ஓவியங்கள் அரசு வாங்கி, தமிழ்நாட்டு கலை அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த வேண்டும்.

எத்தனையோ ஓவிய ஜாம்பவான்கள் அவர்களின் வட்டத்திற்கு மட்டுமே தெரிந்து இந்த மண்ணைவிட்டு பிரிந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இளையராஜா விதிவிலக்கு. பலருக்கு அவரை தெரியும் இருந்தும். அவர் ஓவியம் தெரிந்த அளவுக்கு அவரை தெரியாது. அவர் ஓவியம் கொண்டாடப்பட்ட அளவுக்கு அவர் கொண்டாடப்படவில்லை.

இனிவரும் காலத்திலாவது தமிழ் சமுதாயம் ஓவியர்களை அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலட்சனைகள் என்று நான் தொடங்கியது திட்டத்திற்கு முதல் உந்துசக்தி இளையராஜா தான்.
ஓவியத்திற்கு உயிர் கொடுத்தார் உயிர் கொடுத்தது போல இருக்கிறது என்று ஓவியத்தின் உச்சத்தை புகழ்ந்து கூறுவார்கள் ஆம் இளையராஜா தனது உயிரை ஒவ்வொரு ஓவியத்திலும் பகிர்ந்து விட்டு பிரிந்து உள்ளார். போய் வாருங்கள் கலை போற்ற மறந்த ஓவியமே.

ஓவியஞானி இளையராஜாவை போல ஆயிரம் பிள்ளைகளை தமிழ்த்தாய் பெற்றெடுக்க வேண்டும்.

சமூக ஊடக பதிவின் முகவரி: https://www.facebook.com/ingersol.selvaraj/posts/4142015159169809


நன்றி,
இங்கர்சால்

Leave a Reply