மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் மீண்டும் தமிழகத்தில் கைட்ரோகார்பன் திட்டம் வருவதை எதிர்த்து தன்னுடைய கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.
அவசரம்! தமிழக அரசே! இந்திய அரசு வஞ்சகம் செய்கிறது!
காவிரிப் படுகையை மரணபூமியாக்க மீண்டும் கைட்ரோகார்பன் திட்டம்!
கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள் (DSF) மூன்றாம் கட்ட ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்ட வடதெரு கிராமப் பகுதி ஏலம்! கண்டறியப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் (DSF) ஏல அறிவிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதி (463.2சகிமீ).
இந்திய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் நெறியற்ற இச்செயலை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது!
தமிழக அரசு காவிரிப்படுகையில் கைட்ரோகார்பன் ஏலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்!
எண்ணெய் – எரிவாயு, கைட்ரோகார்பன் எடுக்க Discovered Small Fields எனப்படும் அடையாளங் காணப்பட்ட சிறுவயல்கள் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பை கைட்ரோகார்பன் இயக்குனரகம் (பெட்ரோலியத்துறை அமைச்சகம்) வெளியிட்டுள்ளது. காவிரிப் படுகையின் புதுக்கோட்டை மாவட்டம் வடதெருவும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஓஎன்ஜிசி, ஓ.ஐ.எல் போன்ற நிறுவனங்கள் முன்னமே ஆய்வு செய்து அடையாளம் கண்ட பல இடங்களை இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஏலத்தில் ஒப்படைக்கிறது. இந்த ஏலம் முழுவதுமே தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கானது.
2017 ஆம் ஆண்டு DSFமுதல் ஏலமும், 2018ஆம் ஆண்டு இரண்டாம் ஏலமும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட ஏலம் பற்றிய அறிவிப்பு கடந்த 10ஆம் தேதி வெளியானது. 32 ஒப்பந்த பகுதிகள் மூலம் 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலியத்துறை ஏலம் விடுகிறது. காவிரிப்படுகை புதுக்கோட்டை மாவட்டம் வட தெரு கிராமப் பகுதியில் 463.2 சதுர கிலோமீட்டர் பகுதி ஏலம் விடப்படுகிறது. ஜூன் 30 ஆம் தேதி ஏலம் பற்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இணையவழி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
2020 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே காவிரிப்படுகையில் எண்ணெய் – எரிவாயு, கைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏல அறிவிப்பை இந்திய ஒன்றிய அரசு வெளியிடுவது கண்டனத்திற்குரியது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டப்படி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஏலத்தில் கொண்டுவரப்படும் வடதெரு பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தது ஆகும்.
இப்பகுதியில் எண்ணெய் – எரிவாயு கிணறுகள் அமைக்க பெட்ரோலியம் சுரங்க குத்தகை மூலம் 2027 வரை ஓஎன்சிசி அனுமதி பெற்றுள்ளது என ஏல அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு மரபுசார்ந்த மற்றும் மரபுசாரா கைட்ரோகார்பன்கள் எடுக்க அனுமதிக்க படுவதாகவும் அது கூறுகிறது. மரபுசாரா கைட்ரோகார்பன்களை “கைட்ராலிக் பிராக்சரிங்” எனப்படும் அபாயகர “நீரியல் விரிசல், முறையின் மூலம் தான் எடுக்க முடியும். தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட காவிரிப்படுகைப் பகுதியில் கைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிடுவது என்பது தமிழ்நாட்டையும், தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தையும் அவமதிப்பதாகும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெட்ரோலியத்துறை அமைச்சகம் காவிரிப்படுகைப் பகுதியை ஏலப் பட்டியலிலிருந்து நீக்கச் செய்ய வேண்டுகிறோம். காவிரிப்படுகையைப் பாதுகாக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்!
எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எண்ணெய் – எரிவாயு, கைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கத் தடை செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தை விரிவுபடுத்த வேண்டுகிறோம்.
—
செய்தி சேகரிப்பு:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.
சமூக ஊடக பதிவின் முகவரி: https://www.facebook.com/photo?fbid=339375224209572&set=a.103045444509219