தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் வி.குமார் மற்றும் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டிய கடிதம் எழுதியுள்ளனர். அதை தங்கள் பார்வைக்கு இங்கு பகிர்ந்துள்ளோம்.
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
ஜெயின்சார்ஜ் கோட்டை,
சென்னை.
பொருள்:
அன்புடையீர்! வணக்கம்.
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க
1 நடைமுறை சாத்தியமற்ற இ-பதிவு முறையை முழுமையாக தமிழகம் முழுவதும் ரத்து செய்திடவும்
2 ஆட்டோ நலவாரியத்தில் உள்ள பணத்தை விடுவித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைத்து ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் தொழிலாளர்களுக்கும் கொரானா நிவாரண நிதியாக ரூபாய் 7,500 வழங்கிட கோருதல் சம்பந்தமாக…
புதிய அரசாங்கம் கொரானா இரண்டாவது அலையெனும் நெருக்கடி மிகுந்த நேரத்தில் பொறுப்பேற்று, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக செயல்படுகிறது. அரசின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம் என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் இழந்து, நெருக்கடியை சந்திப்பதால், எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படும் தமிழக அரசானது, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.
1 கொரனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மே 10 லிருந்து இன்று வரை முழு ஊரடங்கு என்பது அறிவிக்கப்பட்டு, ஆட்டோக்கள் இயக்கவும் தடை விதிக்கப் பட்டு இருந்தது. 05.06.2021 அன்றும், 11.06.2021 அன்றும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இரண்டு பேர்களுடன் ஆட்டோக்கள் இயக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரானா காலம் என்பதால் ஓட்டுநருடன் இரண்டு பேர் என்பதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வரவேற்கிறது.
அதே நேரத்தில் நடைமுறை சாத்தியமற்ற இ- பதிவு செய்துதான் ஆட்டோவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பானது ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் கடுமையான நெருக்கடியை தந்துள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
கடைகளுக்கோ, அரசு அலுவலகங்களுக்கோ ஆட்டோவை பயன்படுத்தும் மக்களுக்கு
இ-பதிவு முறையானது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் இ-பதிமுறையை முற்றாக ரத்து செய்யவேண்டும் என மின்னஞ்சல் மூலமாகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அவர்களிடம் நேரடியாகவும் மனுக்கொடுத்து பேசினோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று 4 மாவட்டங்களில் மட்டும் இ-பதிவு முறையை ரத்து செய்து 20.06.2021 அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். நான்கு மாவட்டத்திற்கு மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் என்கிற அறிவிப்புதான் ஆட்டோ தொழிலாளர்களுக்கும், இதர பகுதி மோட்டார் தொழிலாளர்களுக்கும் உதவும் என்பதால் பயணிக்கும் எண்ணிக்கையை தாங்கள் அறிவித்தது போல் நிர்ணயம் செய்து இ-பதிவு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.
2 மேலும் முற்றாக வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் இருக்கும் பணத்தை விடுவித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைவருக்கும் மாதம் ரூபாய் 7.500 வீதம், கொரானாவால் ஆட்டோ தொழில் பாதிக்கின்ற காலத்திற்கு நிவாரண நிதியாக வழங்கிட வேண்டுகிறோம்.
மேலே கண்ட கோரிக்கைகயை நிறைவேற்றி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
வி.குமார் (தலைவர்),
எம்.சிவாஜி (பொதுச்செயலாளர்),
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)
நாள்: 20.06.2021
இந்த மனு இன்று 20.06.2021 பிறபகல் 2.44 மணிக்கு முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.சிவாஜி,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு).
—
செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.