Home>>அரசியல்>>திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு
அரசியல்இந்தியாஈழம்செய்திகள்தமிழ்நாடு

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு

சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப் பிறந்த “குற்றத்திற்காக”!

ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக (அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள்.

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம்.

ஒருவர் இறந்துவிட்டார்.

மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடுகிறார்கள்

அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply