Home>>அரசியல்>>மேதகு திறனாய்வு

மேதகு – 1995ல் தமிழர்நாட்டில் மதுரையில் தெரு கூத்து மூலமாக மேதகு வரலாறு பேசப்படுவதாக படம் தொடங்குகிறது. அதாவது கலை வடிவில் எத்தனை காலமென்றாலும் தமிழர் வரலாற்றை கடத்துவோம் அதன் அவசியமே மேதகு படைப்பு என்பதை சிலேடையாக கூறுகிறார் இயக்குநர் கிட்டு.

இதுமட்டுமல்ல பல சிறு காணொலிகளை இயக்கி இருந்தாலும், இதுவே கிட்டு அவர்களின் முதல் முழு நீள படைப்பு இந்த முதல் படைப்பு. தேர்ந்த இயக்குநருக்கு உண்டான அனைத்து வடிவங்களையும் படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வரலாற்று படத்தை இதற்கு முன்பு இவ்வளவு ஜனரஞ்சகமான சாமானிய மக்கள் விரும்பும் படி எடுத்திருக்கிறார்களா என்றால் ஐயமே. காரணம் அனைவரும் உரிய நேரத்தில் அதிகப்படியான தகவலை கொடுக்கவே விரும்புவார்கள். அதனால் அக்கதை களத்திற்கு தொடர்புடையவர்கள் மட்டுமே அதிகம் கவனிப்பார்கள். ஆனால் மேதகுவில் இயக்குநர் அந்த வரையறையை உடைத்துள்ளார். பலரும் அறிந்த குறைவான தகவல்களை கொடுத்தாலும், இக்கதை களம் அறியாதவர் கூட இரசித்து ஆராயத்தூண்டும் அளவிற்கு காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் கதாப்பாத்திரங்கள் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, கத்தரிப்பு பணி என்று அனைத்திலும் இயக்குநரின் தாக்கம் இருப்பதால் முதலில் இவர்களை பற்றி பார்த்துவிட்டு இறுதியில் இயக்குநரிடம் வருவோம்.

முதலில் மேதகுவா வாழ்ந்த குட்டிமணி, இவர் தலைவரை அவராகவே வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய இளைஞர்களை பொறுத்தவரை பிரபாகரன் பாகுபலி பிரபாசு போன்று ஐநூறு பேரை ஒரே நேரத்தில் அடிப்பார், அட்டைகத்தி கதாநாயகர்கள் போல நான்கு பக்க வசனங்களையும் மூச்சு விடாமல் பேசுவார், அவரை பார்த்தாலே அனைவரும் நடுங்குவர் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அமைதியான ஆளுமை எங்கள் கரிகாலன், ஆளுமையான அவதாரம் எங்கள் மேதகு என்பதை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி உள்ளார்.

அடுத்து இசையமைப்பாளர் பிரவீன் குமார் எவ்வளவு நேர்த்தியான இசை. மூத்த இசையமைப்பாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இசை புதுவை இரத்தினதுரை மற்றும் பாவேந்தரின் வரிகளுக்கு அழகான இசையை வெளிப்படுத்தியுள்ளார். அதைவிட பின்னணி இசை அபாரம் எந்த இடத்திலும் வசனங்களை இசை மறிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மேதகுவை அவர் தந்தை குழந்தையாக கையிலேந்தும் இடம், கடற்கரையில் சிறுபிள்ளையான பிரபாகரன் குறிபார்த்து அடிக்கும் இடம், நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்கும் இடம், இடைவெளை பேருந்து எரிப்பு, துரையப்பா கொலை என்று பல இடங்களில் இசையால் ஆட்சி செய்துள்ளார்.

அடுத்து ஒளிப்பதிவு ஒரு திரைப்படத்தின் காட்சிகள் எவ்வளவு நேர்த்தியாக படமாக்கினாலும் அதை கண்கள் வழியாக மக்கள் மனதில் நிறுத்துவது ஒளிப்பதிவு இப்பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார் ரியாஸ். எந்த இடத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்க வேண்டும் எந்த இடத்தில் எவ்வளவு இருள் இருக்க வேண்டும் காட்சி நடைபெறும் காலத்திற்கு ஏற்றார்போல ஒளி என்று அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு காட்சிக்கு எந்தெந்த திசையில் காட்சி படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதற்கு ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் அந்த அர்ப்பணிப்போடு பணியாற்றி உள்ளார்.

அடுத்து கத்தரிப்பு பணி முழுமையாக இயக்குநரின் வெளிப்பாடு என்றாலும் அவர் எதிர்பார்ப்பதை செய்து கொடுப்பதற்கு தனித்திறமை வேண்டும் அதனை இளங்கோவன் பிசிறுத்தட்டாமல் செய்து கொடுத்துள்ளார்.

மேதகுவை கடத்தி செல்லும் கதைச்சொல்லியாக கூத்து இசை கலைஞர்களான ராஜவேல் மற்றும் பெருமாள் இருவரும் சிறப்பாக தங்கள் பணியை செய்துள்ளனர்.

மொத்தத்தில் இவர்கள் அனைவரையும் இயக்குநர் தெளிவாக வேலை வாங்கியுள்ளார் என்பதோடு இதன் முழுத் திட்டமிடலையும் அவர் மனதில் விதைத்து அழகாக அறுவடை செய்துள்ளார் என்றே கூற வேண்டும். ஒரு இயக்குனர் கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, கலை, கத்தரிப்பு பணி மற்றும் காதாப்பாத்திர தேர்வு என்று அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் மாற்றுக்கருத்தில்லை.

அதை எல்லாம் மீறி இயக்குநர் கிட்டு அவர்கள் கதாபாத்திரத்தின் முகபாவம், உடல்மொழி, அவர்களின் செயல்பாடுகள் அவர்களின் உளவியல் தாக்கம் என்று அனைத்தையும் ஆராய்ந்து நீண்ட குழப்பத்திற்கு பிறகே கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு வரலாற்று ஆவணத்திற்கு இவ்வளவு சிரத்தை எடுத்தது பெரிய விடயம்.

அதுவும் பண்டாரநாயகா, சிறிமாவோ பண்டாரநாயகா, ஆல்பர்ட் துரையப்பா, பொன்.சிவக்குமரன், தந்தை செல்வா மற்றும் பார்வதி அம்மா அனைவரும் நாம் வரலாற்று நூல்களில் பார்த்த முகங்களை காட்சியில் காட்டியுள்ளார். அவர்களின் உருவத்தோற்றம் உடல்மொழி என்று அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான விதத்தில் செதுக்கியுள்ளார்.

இவ்வளவு கவனித்தவர் பிரபாகரன் கதாப்பத்திரத்தை எப்படி எல்லாம் செதுக்கி இருப்பார் ஆமாம் அவர் தானே இவர்களை உள்ளிருந்து இயக்குகிறார் அந்த இயக்கம் தரமாக தான் வெளிப்படும். சிறு வயதில் நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்ற கேள்வி மேதகுவை அறிமுகப்படுத்தினாலும் கடற்கரையில் நான்கு இளைஞர்கள் விளையாடி கொண்டிருப்பார்கள் அவர்களிடம் பிரபாகரன் நானும் விளையாட வருகிறேன் என்பார்.

அவர்கள் நீ சிறுப்பிள்ளை அதனால் அங்கே ஊஞ்சல் கட்டி விளையாடு என்பார்கள் அதேநேரத்தில் அந்த மரபொம்மையை அவர்களால் குறிப்பார்த்து அடிக்க முடியாமலும் இருப்பார்கள் அப்போது பிரபாகரன் அவர்களை விட பத்து அடி பின்னால் சென்று அந்த மரபொம்மையை சரியாக குறி வைத்து அடிப்பார் அந்த இடத்தில் தம்பி சிறுவன் தான் ஆனால் அனைத்து பெரியவர்களையும் கடந்து செல்வான் என்பதை இயக்குநர் பதிவு செய்திருப்பார்.

அதுபோல இயக்க ஆலோசனை கூட்டம் அதன் பிறகு துப்பாக்கி பிரித்து பயிற்சி எடுப்பது அப்போது வேணுகோபால் மாசுடர் மாணவன் என்ற காட்சி படைப்பு என்று நேர்த்தியாக நகர்த்தி இருக்கிறார். அதுபோல தமிழர்கள் எவ்வளவு ஒடுக்குதலில் இருந்தாலும் தமிழ் வளர்ச்சிக்கு உரிய பணியை செய்தார்கள் என்பதை உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு வடிவிலும் அதில் தமிழர் பாரம்பரிய கலைகளான பறை இசை, சிலம்பம் மற்றும் வாள் சண்டை என்று அனைத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார்.

ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை பொன்.சிவக்குமரன் காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததையும் மேதகு துரையப்பாவை கொலை செய்ய முடிவு செய்ததையும் அடுத்தடுத்து வைத்து தமிழர் மனதில் விதைத்துள்ளார். ஆம் சிவகுமாரன் மற்றும் பிரபாகரன் இருவருமே எதிரியை விட துரோகி ஆபத்தானவன் அவனை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இதில் சிவகுமாரன் நேரடியாக தாக்குதல் செய்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயல்கிறார் ஆனால் தம்பியோ காவல்துறை அதிகாரி வெறும் அம்பு தான் அவனை ஏவிய துரையப்பா வை தான் கொல்ல வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுக்கிறார் இதுதான் தலைமைக்கான பண்பு அதை நீரோட்டமாக இயக்குநர் காட்சிப்படுத்தி உள்ளார்‌.

இறுதியில் துரையப்பா கொலை செய்யும் இடத்தில் பிரபாகரனும் அவருடைய நண்பரும் தேநீர் குடிப்பார்கள் அப்போது துரையப்பா நெருங்கிவிட்டார் என்ற தகவல் அவர்களுக்கு வரும் போது நண்பர் பதட்டமடைவார் அவரால் தேநீரை குடிக்கவே முடியாது. அதே நேரத்தில் நிதானமாக தேநீரை குடித்துவிட்டு பிரபாகரன் வெளியே வருவார், அங்கே மகிழுந்திலிருந்து துரையப்பா இறங்கிய பிறகு பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும் வணக்கம் சொல்வதாகவும் பதிலுக்கு துரையப்பா வணக்கம் கூறுவதற்குள் தம்பி சுடுவதாகவும் காட்சி அந்த இடத்திலும் நண்பர் பதட்டமாகவே இருப்பார் அப்போதும் பிரபாகரன் சிரித்துக்கொண்டே சுடுவார்.

இதுதான் மற்றவரிடத்திலிருந்து தலைமைகளை பிரித்து காட்டும் குணம் இதனை கிட்டு அழகாக காட்சிப்படுத்தி உள்ளார், குட்டிமணிமும் மேதகுவாகவே வாழ்ந்துள்ளார்‌. இதெல்லாம் கதைக்களத்தை முழுமையாக உள்வாங்கினால் மட்டுமே சாத்தியம். மொத்த படக்குழுவும் இதனை முழுமையாக உள்வாங்கி தமிழர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளது.

மேதகு வே.பிரபாகரனின் பலமே அனைத்திற்கும் தகுதியானவராக தன்னை வளர்த்துக் கொண்டது, நிதானமாக செயல்படுத்தியது, அறவழியில் அரசாண்டது அனைத்தையும் ஆவணப்படுத்தியது என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதையெல்லாம் விடவும் வள்ளுவனின் வாக்குப்படி “இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவரவரிடத்தில் கொடுத்ததால் தான்” இத்தனை பெரிய வெற்றியை பெற முடிந்தது.

அறியாத அயோக்கிய கூட்டம் கூறும் இவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று. ஆனால் எங்கள் இலக்கை எவர் தீர்மானிப்பது நாங்கள் தான் தீர்மானிப்போம். அன்று உலகில் தமிழர்கள் வாழ்ந்தோம் இன்று உலக தமிழர்களாக இணைந்து நிற்கிறோம். கண்டிப்பாக இலக்கை அடைவோம் என்ற விதையை மேதகு ஒவ்வொரு தமிழ் மனதில் விதைத்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் மரபணுவை மீட்டுள்ளார். அதன் வெளிப்பாடு மேதகு படைப்பு அவரவர் பணியை அவரவர் அர்ப்பணிப்போடு செய்துள்ளனர்.

தமிழர் மனதில் விதைத்துள்ளனர்.


கட்டுரை:
இராசசேகரன், மன்னார்குடி.

Leave a Reply