Home>>இந்தியா>>திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசமாவதை கண்டித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதை தங்களுக்கு இங்கு பகிர்கிறோம்.


ஓ.என்.ஜி.சியின் அலட்சியப் போக்கிற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்!

பழைய எண்ணெய்க் கிணறுகளையும் மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இன்று ஜூன் 30 (30/06/2021) திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் சிவகுமார் என்ற விவசாயியின் வயலில் ஓ.என்.ஜி.சி யின் எண்ணெய்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் நிலம் பாழாகி உள்ளது. இதனால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் உடைப்பை ஓஎன்ஜிசி உடனடியாக சரி செய்யவும் இல்லை. வெள்ளக்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் இந்த ஓஎன்ஜிசியின் என்ணெய்க் குழாய் 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இத்தகையஎண்ணெய்க் குழாய்கள் அரித்துப்போய், விபத்துகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசியால் அமைக்கப்பட்டுள்ளன. பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக் கிணறுகளிலிருந்து, எண்ணெய் சுத்திகரிப்புக்காக வெள்ளக்குடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் குழாய்கள் மூலம் வயல்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கசிவுகள் திருவாரூர் மாவட்டத்தையே நாசம் செய்து வருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் இருந்து வெள்ளக்குடி செல்லும் கச்சா எண்ணெய்க் குழாயில் எருக்காட்டூரில் தனசேகரன் என்பவரின் வயலில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் நிலம் பாழானது.

2018 பிப்ரவரி 15ஆம் தேதி திருவாரூர் பாண்டவை ஆற்றின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் ஓஎன்ஜிசி யின் எண்ணெய்க் குழாயில் பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஆற்றுநீர் பெருமளவில் பாழானது.
2019ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு இருந்த செல்வராஜ் என்பவரின் நிலம் முழுவதும் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பால் கச்சா எண்ணெய் நிரம்பிப் பாழானது. எருக்காட்டூரில் 8க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன.

ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்கள் பாழாவது வாடிக்கையாகிவிட்டது. குழாய்கள் செல்லக்கூடிய வயல்களுக்கு வாடகை என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தையே ஓ.என்.ஜி.சி நிரந்தரமாகப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட வயல்களில் ஒ.என்.ஜி.சி புதிய மண் நிரப்பியும் தருவதில்லை. மக்கள் போராடினால் காவல்துறை கைது செய்து விடுகிறது.

2017 ஜூன் 30 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை அம்மன் கோயில் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவில் எண்ணெய் வெளியேறி, வயல்கள் நாசமான போது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கதிராமங்கலம் மக்களைத் திரட்டிப் போராடியது. ஆனால் போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழைய எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட வேண்டும். கச்சா எண்ணெய்க் குழாய்கள் நீக்கப்பட வேண்டும் என்று மக்கள் போராடிய போது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகள் போராட்டம் நீடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு, கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில், விக்கிரமன் ஆற்றுப்படுகையில் குழாய் உடைப்பு மீண்டும் ஏற்பட்டு ஆற்றுப்படுகை பழானது. அதைப்பற்றி ஓ.என்.ஜி.சி கவலைப்படவில்லை.

இப்போது திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி கோட்டூரில் சிவகுமார் என்பவரது வயலில் குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் ஒரு ஏக்கர் நிலத்தை பழகி உள்ளது.

ஓஎன்ஜிசி இன் எண்ணெய்க் குழாய்களால் வயல்கள் மற்றும் நீர் நிலைகள் பாழாவது நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண்டும். ஓஎன்ஜிசியின் செயல்பாடுகளால் காவிரிப் படுகை பாழாவது என்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. காவிரிப்படுகையின் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் நிரந்தரமாகக் கலந்து, நிலத்தடி நீர் தொகுப்பே பயன்படுத்த முடியாதபடி மாறி வருகிறது. இதுவரை மக்கள் போராட்டங்கள் காவல்துறை உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளன.

தற்போது, தமிழ்நாடு அரசு, இனி தமிழ்நாட்டில் எந்த எண்ணெய் – எரிவாயு கிணறும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுமானால், தமிழ்நாடு பாதுகாக்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.

அதேநேரம் தொடர்ந்து படுகையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பழைய எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட வேண்டும். எண்ணெய்க் குழாய்களெல்லாம் தோண்டி எடுக்கப்பட்டு நீக்கப்படவேண்டும்.

காவிரிப்படுகை முழுமையாகப் பாதுகாக்கப்படவேண்டும். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் – 2020 பழைய எண்ணெய் எடுப்புத் திட்டங்களைத் தடுக்கவில்லை. ஆகவே, படுகையின் அழிவும் இன்றுவரை தடுக்கப்படாத நிலை உள்ளது. நிலப்பரப்பின் மேற்பகுதியில், உடைப்பு ஏற்பட்ட இடங்களில் எண்ணெய்க் குழாய்க் கசிவு நிறுத்தப்பட்டாலும், பூமிக்குள் நிலத்தடி எண்ணெய்க் கசிவு நிரந்தரமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது நிலத்தடி நீரைப் பாதித்துக் கொண்டே இருக்கிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஓஎன்ஜிசி உள்ளிட்ட அனைத்து எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களையும் காவிரிப்படுகையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் பழைய எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காவிரிப் படுகையின் அனைத்து மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.


கட்டுரை:
பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
30.06.2021.

Leave a Reply