Home>>செய்திகள்>>வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
செய்திகள்தமிழ்நாடுவரலாறு

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் அவர்கள் “தமிழ்ச் சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த மாபெரும் சதி என்றும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தன்னுடைய சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


1987 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கீட்டு உரிமைப் போராட்டத்தில் இருபத்தோரு உயிர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பும், கடந்த 30 ஆண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களில் பங்கெடுத்ததன் விளைவாக, அ.தி.மு.க., அரசினால் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை ஆளுநரிடத்திலும் ஒப்புதல் வாங்கி, அரசிதழிலும் வெளியிட்டு சட்டமாக்கிய அந்த உரிமையைத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுவதும், தமிழ்ச் சமூகங்களுக்குள் சாதிய வன்மத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவதும் நேர்மையற்ற செயல் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்டல் குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இந்திய அரசியல் சாசனத்தின் 340 ஆம் பிரிவின்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக, நிரந்தரமான “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை 1993 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது”. நீதியரசர் அம்பாசங்கர் அறிக்கை மற்றும் நீதியரசர் ஜனார்த்தன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சட்டபூர்வமான பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு சட்டம் 144 /2021 ஆக சட்டமாக்கி, தமிழ்நாடு அரசு 10.5% உள் ஒதுக்கீட்டினை வன்னியர்களுக்கு வழங்கிருக்கிறது என்கிற உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் கொடுத்திருக்கலாமே ஏன் இந்த அவசரம் என்பவர்கள், சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு எவரிடமும் கேட்காமல் 10% இட ஒதுக்கீட்டினை உயர் சாதிகளுக்கு அள்ளிக் கொடுத்தபோது நாம் மௌனித்து தானே கிடந்தோம். தமிழ்ச் சமூகத்துக்குள் ஒரு பிரிவினருக்கு, ஒரு சலுகை கிடைக்கும்போது ஒரு சில சமூகங்களுக்கு பொறுக்க முடியவில்லை என்பது பெரும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இப்பொழுது தமிழ்ச் சமூகங்கள் ஒன்றையொன்றை அடித்துக்கொண்டு, இருப்பதனைத்தையும் பறிகொடுத்து நிற்கிற நிலைதான் உருவாகப் போகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?

இந்திய ஒன்றியத்தின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல, 1931இல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதே முறையைப் பின்பற்றிதான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இசுலாமியர்களுக்கான 3.5 சதவீத ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கான 3 சதவீத தனி இட ஒதுக்கீடும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதையும் கேள்வி கேட்டு சிதைத்துக் கொள்ளப் போகிறோமா? தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. நாம் உடனடியாக போராட வேண்டியது எதுவாக இருக்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் 10.5 சதவீதத்தைக் குறைக்கலாம், அதிகமாக இருந்தால் அதிகரித்துக் கொள்ளலாம். இல்லை என்றால் காலங்காலமாக 97 சதவீதமுள்ள இம்மண்ணின் மைந்தர்களுக்கான உரிமையை, வெறும் 3 சதவீதம் பேர் தின்று கொழுத்த நிலைதான் தொடரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1987ஆம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவர் ராமதாசு ஐயா அவர்கள் தலைமையில், ஒரு வார கால சாலை மறியல் போராட்டம் நடந்தது. 21 வன்னிய இளைஞர்களைத் தமிழ்நாடு காவல்துறை, ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளியது. அப்போது நெய்வேலி அருகிலுள்ள கொள்ளுக்காரன் குட்டையைச் சேர்ந்த தேசிங்கு என்கிற இளைஞன் “இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல காலங்காலமாக எங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை” என்று கூறி தனது சட்டையைப் பிய்த்து நெஞ்சைக் காட்டி, துப்பாக்கி ஏந்திய காவல்துறை கூட்டத்திடம் நிமிர்ந்து நிற்க, அவன் இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளப்பட்டான் என்பதெல்லாம் கொடூரமான வரலாறு.

அந்தப் போராட்டத்தின் விளைவாக 1989ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டினை பிரகடனப்படுத்தி, 108 சாதிகளை அதில் உள்ளடக்கினார். செத்தவர்கள் அனைவரும் வன்னியர்கள்தானே எங்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று மீதமுள்ள 107 சாதியினரும் கேட்கவில்லை. செத்தவர்கள் நாங்கள்தானே மற்றவர்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு என்று வன்னியர்களும் கேட்கவில்லை. மாறாக நாங்கள் கேட்பது எங்களுக்கான 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்றுதான், கடந்த 30 ஆண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இப்பொழுது சட்டமாக வென்றிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் அனைவரும் மாறிமாறி அமைத்த ஆணையத்தின் விளைவாகவே இன்று அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. 2011 தேர்தல் காலத்தில் கலைஞர் அவர்கள் “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டினை உறுதி செய்வேன்” என்று பேசியது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு போதும் தமிழ்ச் சமூகம் உருப்படாது. எனக்கும் உரிமை வேண்டும் என்று கேட்பது நாகரிகம். பிறருக்கு கிடைத்த உரிமையைப் பறிக்க வேண்டும் என்று போராடுவது அநாகரிகம்.

அது தமிழர் அறமும் அல்ல. குழுமூரிலுள்ள அனிதா வீடாக இருந்தாலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பிற்காக தூத்துக்குடியாக இருந்தாலும், பசும்பொன் தேவர் கல்லூரி மீட்புகாக சங்கரன்கோவிலாக இருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கான உரிமையை மீட்க மதுரை அவனியாபுரமாக இருந்தாலும், விவசாயிகளின் உரிமையை மீட்க சென்னை கத்திப்பாரா பாலமாக இருந்தாலும், தமிழீழ உரிமை மீட்க ஐ.நா., மன்றமாக இருந்தாலும், சாதியினைப் பார்த்து நாங்கள் போராட்ட களத்தில் நின்றதில்லை.

நமது கலாச்சார விளையாட்டு மட்டுமல்ல, காளைகளை ஒழிப்பதன் மூலமாக இயற்கை விவசாயத்தை அழித்து, தமிழர் நிலங்களை மலடாக்கப்போகும் நிலையறிந்துதான் ஏறுதழுவுதலுக்காக ரத்தம் சிந்தி போராட்டம் நடத்தினோம். அதே போன்று இப்பொழுது வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினை திரும்பப் பெற வேண்டுமென சதி செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த சமூகநீதிக்கும் வேட்டு வைக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த குழப்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைந்து முற்றுப்புள்ளி வைத்து, வரும் ஆண்டிலேயே கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் தாமதிக்காமல் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் வன்னியர் சமூக இளைஞர்களை மட்டுமல்லாமல், அனைத்து சமூக இளைஞர்களுக்கும் வரப்போகும் பேராபத்தைத் தெளிவுபடுத்தி மண் அதிரும் ஒரு மாபெரும் போராட்டத்தை நானே நேரில் நின்று நடத்த வேண்டிவரும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply