Home>>அரசியல்>>சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து சென்று அணையை உடைப்போம்.
அரசியல்இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து சென்று அணையை உடைப்போம்.

கர்நாடகாவில் சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து புறப்பட்டு சென்று அணையை உடைப்போம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் சிதம்பரத்தில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் நேற்று (23.07.2021) சிதம்பரம் வந்தார். சிதம்பரத்தில் உள்ள சொக்கலிங்கம் நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது.

காவிரி பிரச்சினையில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ஒன்றியம் மற்றும் கர்நாடக அரசின் சூழ்ச்சிகளால் தமிழ்நாட்டிற்கு நீண்ட நெடும் காலமாகவே நியாயம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டை ஆண்ட அரசுகளும் தொடர்ந்து ஏமாளியாகவே இருந்திருக்கிறது. ஆணையத்தின் அனுமதி மற்றும் பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்றுதான் ஒரு மாநிலத்தில் அணை கட்ட வேண்டும் என்ற விதி இன்றும் இருக்கிறது. ஆனால் 1970லிருந்து 1980 ஆம் ஆண்டுகளுக்குள் கர்நாடக அரசு விதிகளை மீறி கபினி, கேமாவதி உள்ளிட்ட நான்கு அணைகளை கட்டியது. 1934 முதல் 1984 வரை ஏறத்தாழ 360 டிஎம்சி தண்ணீர் அக்காலக் கட்டங்களில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்க வந்து கொண்டிருந்தது அல்லது தந்து கொண்டிருந்தார்கள்.

எழுபதுகளில் கட்டிய அணைகளுக்குப் பின்பு அது 200 டிஎம்சி மற்றும் 150 டிஎம்சி என குறைந்து தேய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக சமீபத்தில் அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றில் ஒரு அணை கட்டியதோடு மட்டுமல்லாமல் இப்போது மீண்டும் மேகதாது அணையையும் கட்டி ஒட்டுமொத்த தமிழர் நிலத்தின் விவசாயத்தையும் அழிக்க துடிக்கிறது கர்நாடக அரசு. அதற்கு நிரந்தர துணை போகிறது இந்திய ஒன்றிய அரசு. இது வெட்கம் கெட்ட நேர்மையற்ற செயல் மட்டுமல்ல இந்திய இறையாண்மைக்கு ஈவு இரக்கமற்ற முறையில் வைக்கின்ற வேட்டு.

எச்சரிக்கை விடுத்து சொல்கிறோம். சட்டத்தை மீறி கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய படையாக புறப்பட்டுச் சென்று அணையை உடைப்போம்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் ஜெயலலிதா அவர்களை போன்று உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டும். தேவைப்பட்டால் மக்களை திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். விழுப்புரத்தில் ஜெ பல்கலைக்கழகம் கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டது. அது தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். விழுப்புரத்திலேயே பல்கலைகழகத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும், கட்டுமானங்களையும் முடித்து அங்கேயே பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். அ.தி.மு.க அரசு ஜெ.பல்கலை கழகம் என்று சொல்லி ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்போதே விட்டு விட்டு இப்போது கூப்பாடு போடுவது அப்பட்ட மாது நாலாந்தர நாடகம்.

மக்கள் பணத்தை யார் கொள்ளை அடித்தாலும் அதை அரசு பறித்தெடுக்க வேண்டும். அது சொத்தாக இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி. அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் பதவியேற்கிறார்களே தவிர தனது தலைமுறைகளுக்கு கொள்ளை அடிக்க அல்ல. எந்த ஆட்சியில் எவர் கொள்ளை அடித்தாலும் அதனை மொத்தமாக பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே தமிழ்ப் பேரரசு கட்சியினுடைய தலையாய கோரிக்கை.

தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சியின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே “நீட்” சட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது. தமிழ்நாட்டின் வேலை தமிழருக்கே என்கிற சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்கள். கேஸ் மானியம் 100 ரூபாய், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என எந்தத் திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. தமிழர்களின் கல்வி உரிமை, வேலை உரிமை ஆகியவற்றை உடனடியாக பாதுகாக்க உறுதிமிக்க சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

தமிழக பாசகவில் அண்ணாமலை சேர்ந்த அன்றே நான் பாரதிராசா கட்சியில் சேர்ந்து இருக்கிறேன் என உளறினார். அதுபோல தற்போது மாநிலத் தலைவரானதும் ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் எனக் கூறுகிறார். பின்பு சமூக ஊடகங்களைதான் அப்படி சொன்னேன் என்கிறார். சமூக ஊடகங்களை மட்டும் இவர்கள் கையிலெடுத்து விடுவார்களா என்ன? தமிழர்களை கிண்டலுக்கு ஆளாக்கும் வகையில் அண்ணாமலை பாசகவின் தமிழ்நாட்டு தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் திமுகக்கு மாற்று பாசகதான் எனக் கூறுகிறார். இதை அதிமுக கேட்டும் எப்படி சகித்துக் கொண்டு கூட்டணியில் நீடிக்கிறது என்று தெரியவில்லை. மேலும் தமிழர் வாழ்வை கறைபடுத்துபவர் யாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் இது அண்ணாமலைக்கும் பொறுத்தும் எனக் கூறினார்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply