Home>>இலக்கியம்>>உலகப் பெருந்தமிழர், தமிழ்க்கடல் திரு.இளங்குமரனார் மறைவு!
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

உலகப் பெருந்தமிழர், தமிழ்க்கடல் திரு.இளங்குமரனார் மறைவு!

மாபெரும் தமிழறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களின் மறைவையொட்டி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நிறுவனர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

மாபெரும் தமிழறிஞருக்குப் புகழ் வணக்கம்!

இளங்குமரனார்
(30.01.1930 – 25.07.2021)

நெல்லை வாழவந்தான்புரத்தில் பிறந்து, உலகளாவியப் புகழ் பெற்றவர். 1946 இல் ஆசிரியர் பணிக்கு வந்த கிருஷ்ணன் என்ற இளங்குமரனார், அரசு பணியில் இருப்போர் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது என்றபோது, தம் பதவியைத் துறந்தார். மனைவி செல்வம் அம்மையாரின் நகைகளை விற்று நூல்கள் ஆக்கினார். திருக்குறள் அறிவுறுத்தும் வாழ்வியலை மேற்கொண்டார். தாம் எழுதிய ஒரு நூல் தவிர (மு.வரதராசனார் அணிந்துரை) எந்த நூலுக்கும் அவர் அணிந்துரை பெற்றதில்லை. 387 நூல்களை எழுதியவர்.

வாழ்நாள் முழுவதும் திருக்குறள் வாழ்வியலைக் கடைபிடித்தார். காக்கைப்பாடினியம், குண்டலகேசி போன்ற வரலாற்றில் அறியப்பட்டிருந்த நூல்களைக் கண்டுபிடித்து தமிழ் சமூகத்திற்கு அளித்தார். “ஒரு புல் – தன் வரலாறு” என்று தன் வரலாற்றை எழுதியவர். பண்பாட்டுக்கு காந்தி, பொருளியலுக்கு மார்க்ஸ், சமூக முன்னேற்றத்திற்கு பெரியார் – என்று அறிவுறுத்தினார்.

திருச்சிராப்பள்ளியில் காவிரியின் தென் கரையில், அல்லூர் கிராமத்தில் திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவி, தவ வாழ்க்கையை மேற்கொண்டார், திருவள்ளுவர் ஒரு சித்தர், சிந்தனையாளர் என்றார், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார்.

செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியத்தின் சிறப்பு தொகுப்பாளர், இலக்கண வரலாறு, பாவாணர் வரலாறு, பாவாணர் மடல்கள் (இரு தொகுதி), பாவாணர் வேர்ச்சொல் ஆய்வு தொகுப்பு – தேவநேயம், செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் (10 தொகுதிகள்) என்று ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார்.

வாழும் வள்ளுவர் என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞர் ஐயா இரா. இளங்குமரனார் 25-07.2021 இரவு 7.30 மணிக்கு மறைந்தார் என்ற செய்தி தமிழ் உலகத்துக்கு பேரிடியாக வந்துள்ளது. மாபெரும் தமிழறிஞர் இர. இளங்குமரனார் அவர்கள் போற்றிய தமிழிய உணர்வைத் தொடர்ந்து காப்பதும், அதை நிறுவும் இலக்கு நோக்கி தமிழ் சமூகத்தைக் கொண்டு செல்வதும் நம் கடமை!

ஐயா இளங்குமரனார் அவர்களுக்குப் புகழ் வணக்கம்!

(திருச்சிராப்பள்ளி பாவாணர் தமிழியக்கம் நடத்திய தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் ஒன்று கூடிய நிகழ்ச்சியில், தமிழ் வளர் தகவர் என்ற விருதினை தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் வழங்க, அவர் கையால் பெற்றுக்கொள்ளும் பேறு பெற்றேன்.


தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,
25.07.2021.

Leave a Reply