திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது விவசாயிகள் கலந்துகொள்ள ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் அழைப்புவிடுத்துள்ளார்.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் மேலும் கூறியுள்ளதாவது:
ஆதிரெங்கத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தேசிய நெல் திருவிழா கடந்த 2006-ல் துவங்கப்பட்டு மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடந்து வந்தது அவரது மறைவுக்கு பின் கடந்த ஆண்டு ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் நெல் திருவிழா நடத்தப்பட்டது இந்த ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியுடன் தேசிய நெல் திருவிழா, கண்காட்சி, கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுகிறது.
இதில் தமிழக அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர்கள், முனைவர் எம்எல்ஏ.டி.ஆர்.பி. ராஜா, மருத்துவர் சிவராமன், மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில், சூழலியல் வல்லுநர் பாமையன், வேளாண்மை செம்மல் தஞ்சை சித்தர், மற்றும் வேளாண்மை துறை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.
விழாவில் 174 வகையான பாரம்பரிய நெல் ரக விதைகள் இலவசமாக உழவர்களுக்கு தலா இரண்டு கிலோ வழங்கப்பட உள்ளது.
மேலும் பாரம்பரியநெல் ரகங்களின் மருத்துவ குணங்கள், பி.ஜி.எஸ். இயற்கை தர சான்றிதழ் பெறுவதன் அவசியம், இயற்கை வேளாண்பொருட்களை மதிப்புகூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், மண் வளமும் மேம்பாடும், பாரம்பரிய நெல்லும் பருவநிலை மாற்றமும், பாரம்பரிய அரிசிகள் காலத்தின் கட்டாயம், பாரம்பரிய கால்நடைகளின் முக்கியத்துவம், என்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 94433 20954, 98437 49663, 9976141780, 98426 07609 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.