பெரம்பலூர் பேரளி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடா விட்டால் மாபெரும் முற்றுகை போராட்டம் செய்வோம் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.
கொடூரமான கொரோனா தொற்று சாமானிய மக்களின் நடைமுறை வாழ்க்கையை நிலைகுலைய செய்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையையும் ஏற்றிவிட்டு தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் சுங்கச்சாவடிகளை திறப்பதென்பது கடும் கண்டனத்திற்குரிய செயல். மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கு இடையில் உள்ள பேரளி சுங்கச்சாவடியை இழுத்து மூடியதோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் மிகக்கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்பதனை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். இதைத்தான் இன்றைய ஒன்றிய அரசு தனது நாட்டு மக்களிடம் அத்துமீறி செய்து கொண்டிருக்கின்றது.
கேரளாவில் 1782 கி.மீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெறும் மூன்றே மூன்று சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. 15,437 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால், 5,381 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.
கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிட்டால் 15 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பது மக்களை கொள்ளையடிக்கும் வழிப்பறியேயன்றி வேறில்லை.
சாலை அமைத்து அதற்கான தொகையை முழுமையாக வசூலித்த பின்னரும், சுங்கச்சாவடி உரிமம் முடிந்த பிறகும் அடாவடி வசூல் பல சுங்க சாவடிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அம்பானி, அதானி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்பதை இதுபோன்ற செயல்பாடுகளால் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் பெரம்பலூர் மாவட்டம் பேரளி அருகில் அரியலூர்-பெரம்பலூர் இடையே புதிதாக சுங்கச்சாவடி ஒன்றை அமைத்து தண்டம் வசூலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களின் கொந்தளிப்பால் தற்காலிகமாக சுங்க வசூல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அரியலூர், பெரம்பலூரை சுற்றியுள்ள சிமெண்டு ஆலைகளின் லாபத்திற்காக சாலைகளை விரிவாக்கம் செய்து விட்டு அப்பாவி மக்களிடமும், பொது போக்குவரத்து நிறுவனங்களிடமும் அதற்கான வரியை வசூலிக்க நினைப்பது கொடூரத்தின் உச்சம்.
இந்த சாலைகளை 80 சதவீதம் முழுமையாக பயன்படுத்தும் சிமெண்டு ஆலைகளிடம் சாலை அமைத்ததற்கான செலவை வசூலிப்பதை விட்டு மக்களை வஞ்சிக்கும் செயலைத்தான் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதை மீண்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்திய ஒன்றியத்தில் உள்ள, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். எதற்கெடுத்தாலும் வரி, நின்றால் அமர்ந்தால் வரி வரி என வரி மேல் வரி வைத்து பொது மக்களை வாட்டி வதைக்கும் செயல் அறவே எடுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்றக் கோரி தமிழ் பேரரசு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரம்பலூர் அரியலூர் மக்களை பாதிக்கும் சுங்கச்சாவடியையும் உடனடியாக அகற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும் இதனைத்தொடர்ந்து வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒருவேளை பேரளி சுங்கச்சாவடி மீண்டும் அங்கு திறக்கப்பட்டால் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மக்களை திரட்டி பேரதிர்வான, சமரசமற்ற மாபெரும் முற்றுகை, போராட்டத்தை தமிழ்ப் பேரரசு கட்சி நடத்தும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.
பட உதவி: Scott Webb on Unsplash