Home>>இந்தியா>>எல்.ஐ.சி-யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

எல்.ஐ.சி-யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் “கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது” என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம்.


காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

பொதுத்துறையில் இயங்கி வரும் நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக்காப்பீட்டு வர்த்தகம் திருத்தச் சட்ட முன்முடிவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறியும், விவாதமின்றியும் நிறைவேற்ற உள்ளது ஒன்றிய அரசு.

அதாவது, இந்த மசோதா என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்கிறது. இதன் மூலம் 100 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கிறது.

இந்த நிதியாண்டில் எல்.ஐ.சியின் பங்குகளை விற்று நிதிதிரட்டப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததன் படி, இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சேவைக்காக 1956-ம் ஆண்டு, 19.5 கோடி ரூபாய் முதலீட்டில் ஒன்றிய அரசு தொடங்கிய பொது காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ளன.

இந்த நிறுவனம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வருவாயில் 5 விழுக்காடு அரசுக்கு தரப்படுகிறது. மீதம் 95 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கே வழங்கப்படுகிறது.
இப்படி நாட்டின் இரண்டாவது முக்கிய நிதி நிறுவனமாக விளங்குகிறது எல்.ஐ.சி.

நாட்டின் ஒட்டுமொத்த அரசின் நிதி தேவையை ஒப்பீட்டளவில் பூர்த்தி செய்துவரும் செல்வ வளம் நிறைந்த எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.
ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான பொருளாதார நடவடிக்கையால், ஆண்டுதோறும் எல்.ஐ.சி வழங்கி வரும் பல்லாயிரம் கோடி வருவாயை இழக்கக்கூடிய நிலை ஏற்படும். ஊழியர்களின் வேலை மற்றும் இடஒதுக்கீடு பறிபோகும். பொதுமக்கள் எல்.ஐ.சி-யில் கட்டியிருக்கும் காப்புத் தொகைக்கு எந்த ஒரு அரசு உத்தரவாதமும் கிடையாது.

எனவே, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

காப்பீட்டு நிறுவனங்களை தனிமயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து போராடி வரும் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடு, நாட்டு மக்கள் மற்றும் எல்.ஐ.சி பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்.ஐ.சி-யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Leave a Reply