Home>>அரசியல்>>அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: அரை நூற்றாண்டுகாலக் கனவு நனவாகியது
அரசியல்ஆன்மீகம்செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: அரை நூற்றாண்டுகாலக் கனவு நனவாகியது

ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட இன்று 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அவரையும் , இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவர்களையும் பாராட்டுகிறேன். சமத்துவப்பெரியார் கலைஞர் 1971இல் எடுத்ததை இன்றைய முதல்வர் 2021 இல் முடித்துள்ளார். இந்த சமத்துவப் பணியை நிறைவேற்ற அரை நூற்றாண்டுகாலம் போராட வேண்டியிருந்திருக்கிறது. திமுகவின் சாதனைகளில் தலையாய சாதனை இதுவெனக் கூறலாம்.

1971 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 ல்’ திருத்தம் செய்து சட்டமொன்றை இயற்றினார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சிக்ரி, ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே,டி.ஜி.பலேகர், எம்.எச்.பேக் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பல்கிவாலா ” சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மடாதிபதியாக விளங்கும் சங்கராச்சாரியாரின் வாரிசை ஒரு அரசு நியமிக்க முற்பட்டால் அது எப்படி சமய உரிமைக்குள் தலையிடுவதாக இருக்குமோ அப்படித்தான் அர்ச்சகர் நியமனமும்” என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்சநீதிமன்றம் ” அர்ச்சகர் என்பவர் ஒரு சமயத் தலைவர் அல்ல. கோயிலில் பூஜை செய்வதற்கான ஆகமங்களை மந்திரங்களை அவர் அறிந்திருந்தாலும் அவரை ஒரு சமயத் தலைவராகக் கருத முடியாது” எனக் குறிப்பிட்டது( The Archaka has never been regarded as a spiritual head of any institution. He may be, an accomplished person, well versed in the Agamas and rituals necessary to be performed in a temple but he does not have the status of a spiritual head). அறங்காவலர்களால் வகுக்கப்படும் ஒழுங்குவிதிகளுக்கு அர்ச்சகர் கட்டுப்பட்டவர்தான் என கே.சேஷாத்ரி அய்யங்கார் எதிர் ரங்க பட்டர் ( K. Seshadri Aiyangar And Two Ors. vs Ranga Bhattar on 7 April, 1911) என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பையும் Kali Krishna Ray Vs Makhan Lal Mookerjee; Nanabhai Narotamdas Vs Trimbak Balwant Bhandare;Maharanee Indurjeet Keoer Vs Chundemun Misser முதலான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி ‘ அர்ச்சகர் நியமனம் என்பது சமயச் சார்பற்ற (Secular ) ஒரு செயல்தான் (appointment of an Archaka is a secular act ) என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அர்ச்சகர் பதவியென்பது பரம்பரை உரிமை அல்ல என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் ஆகமவிதிகளின்படிதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது ( Seshammal & Ors, Etc. Etc vs State Of Tamil Nadu on 14 March, 1972). அதனால் 1971 இல் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்துக்கு 50% வெற்றியே கிட்டியது.

கோயில்களை ஜனநாயகப்படுத்தும் தனது முயற்சியில் மனம் தளராத தலைவர் கலைஞர் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக சட்டம் ஒன்றை இயற்றினார். 1971 ஆம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் போனதுபோலவே 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.வி.ரமணா ஆகியோரடங்கிய அமர்வு :

” குறிப்பிட்ட சில பிரிவினரை அர்ச்சகராக நியமிப்பது சில பிரிவினரை விலக்குவது என்பது சாதி, பிறப்பு அல்லது அரசியலமைப்புச்சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொள்ளமுடியாத தகுதிகளின் அடிப்படையில் இல்லாதவரை அது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 ஐ மீறவில்லை எனக் கருதலாம்” (’ that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate Article 14 so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter) என்று குறிப்பிட்டதோடு ” அர்ச்சகர் நியமனம் எதுவொன்றையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் அந்த வழக்கின் தீர்ப்பைப் பொருத்தே அந்த நியமனம் செல்லுமா செல்லாதா என்பது முடிவுசெய்யப்படும் “ என்றும் தெரிவித்தது. (Adi Saiva Sivachariyargal … Vs Govt. Of Tamil Nadu & Anr on 16 December, 2015)

இந்தத் தீர்ப்பு ‘சேஷம்மாள் எதிர் தமிழ்நாடு அரசு’ வழக்கின் (1972)தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும் , ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அர்ச்சகரைத் தகுதி அடிப்படையில் நியமிக்கத் தடை எதையும் விதிக்கவில்லை. இந்தத் தீர்ப்பு வெளியானபோது அதிமுக ஆட்சி இருந்ததால் அவர்கள் அதை செயல்படுத்த முன்வரவில்லை.

2006 ஆம் ஆண்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வகை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் ( ரவிக்குமார்)வலியுறுத்தினேன்

” அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு சட்டம், இப்பொழுது இயற்றப்பட்டிருக்கின்றது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு களையப்படுகிறது. ஆனால், பாலினப் பாகுபாடு களையப்படவில்லை. அந்தச் சட்டத்திலே பெண்களும் அர்ச்சகராகலாம் என்கின்ற விதியினைச் சேர்த்து, தொடர்ந்து மகளிருக்குப் புறக்கணிக்கப்பட்டுவரும் ஆலயக் கருவறைகளை நீங்கள் திறந்துவிட வேண்டும்” ( 25.07.2006)

என வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தையும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையையும் எதிர்த்து சிலர் வழக்கு தொடுத்திருந்ததால் நான் முன்வைத்த கோரிக்கை அப்போது அச்சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் விதத்திலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த 13.06.2021 அன்று மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்குப் பின்வரும் கோரிக்கைகளைக் கடிதம் மூலம் முன்வைத்தேன்:

1. 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை உடனடியாக நியமிக்கவேண்டும்.

2. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தமிழ்நாடு அரசு துவக்கவேண்டும். அதில் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

3. 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் மூலமாகத் திருக்கோயில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் பெண் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என ஆக்கப்பட்டது. அதே சமத்துவ உணர்வின் அடிப்படையில் மாநில , மாவட்ட ஆலோசனைக் குழுக்களில் பெண் ஒருவரை நியமிக்க ஏதுவாக ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.

4. ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 49 கோயில் அறங்காவலர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்கவேண்டும் எனக் கூறுகிறது. அதே சமத்துவ உணர்வின் அடிப்படையில் அவர்களை மாநில அளவிலான ஆலோசனைக் குழுவிலும், மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினர்களாக நியமிக்க ஏதுவாக ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவுகள் 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.

5. கோயில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும் ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் ஆண் / பெண் என்ற பாலின பாகுபாடு ஏதுமில்லை. எனவே பெண் ஒருவரை அர்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை. எனினும் பணியாளர் என்பதற்கு அந்தப் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் The expression “office-holders or servants” shall include archakas and pujaries of all gender என்று திருத்தம் செய்து மகளிர் மட்டுமின்றி திருநங்கையரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழிசெய்ய வேண்டும்

என அந்தக் கடிதத்தில் கோரியிருந்தேன். இப்போது ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ என்ற மகத்தான பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மகளிரை அர்ச்சகர் ஆக்குதல் உள்ளிட்ட சமத்துவத்துக்கான பிற நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என நம்புகிறேன்.

 

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply