Home>>ஆன்மீகம்>>புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்!

புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! – தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்!

புதுச்சேரி – காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் விடுத்து தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் புதுச்சேரியில் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் முன்பு இன்று (21.08.2021) மாலை நடைபெற்ற பரப்புரை தொடக்க நிகழ்வுக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் திரு. விசயகணபதி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

சிவனடியார் திரு. சிவசங்கரன் அவர்கள் திருமுறை பதிகங்களைப் பாடி நிகழ்வை தொடங்கி வைத்தார். வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் ஒலிப்பதற்கு தொடர்ந்து செயலாற்றி வரும் சிவனடியார் திரு. இராசாராம், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி தலைவர் ஐயா கோ. தமிழுலகன், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் பரப்புரை இயக்கத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர்.

காந்தி வீதி – காமாட்சி அம்மன் கோயில் வீதி – ஈசுவரன் கோயில் வீதி சந்திப்பு மற்றும் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வாயில் ஆகிய இடங்களில் பக்தர்களிடமும், வணிகர்களிடமும் தமிழ் அர்ச்சனை வலியுறுத்தும் துண்டறிக்கைகள் வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நிறைவில், தெய்வத் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார். பரப்புரை முடிந்த பிறகு அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் தமிழ் அர்ச்சனை கோரியும், தமிழில் பெயர் சூட்டக்கோரியும் தமிழ் மக்களிடையே துண்டறிக்கைகள் வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.


செய்தி சேகரிப்பு:
கோபிநாதன்,
மன்னார்குடி.

Leave a Reply