ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு
273வது நாள், 26 ஆகஸ்ட் 2021.
1. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய ஒமாநாடு, சிங்கு எல்லையில் தொடங்கியது – விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லையில் 9 மாதங்களை நிறைவு செய்கிறது !
2. நாட்டின் ஜனநாயக இயக்கங்களுக்கு விவசாயிகள் உந்துசக்தியாக இருந்து கொண்டிருக்கிற போதும், மோடி அரசாங்கத்தின் ஆணவத்திற்கும், அறியாமைக்கும் உலகம் முழுவதும் சாட்சியாக உள்ளார்கள் – எஸ்.கே.எம் !
3. ஒன்றிய அரசு அறிவித்த கரும்புக்கான விலை உயர்வு, விவசாயிகளை அவமதிப்பதாக உள்ளது !
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்.கே.எம்.) முதல் அகில இந்திய மாநாடு, சிங்கு எல்லையில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு விவசாயிகளின் போராட்டத்தை விரிவுபடுத்தவும், தீவிரப்படுத்தவும் கவனம் செலுத்தும். 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள், 18 அகில இந்திய தொழிற்சங்கங்கள், 9 பெண்கள் அமைப்புகள் மற்றும் 17 மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 22 மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் பங்கேற்றுள்ளன.
இந்த மாநாட்டை விவசாயி தலைவர் ராகேஷ் டிக்கைட் துவக்கி வைத்து, அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார். அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும் வரை, அமைதியான போராட்டம் தொடர வேண்டும் என்ற விவசாயிகளின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் மிட்டல், வரைவுத் தீர்மானங்களை பிரதிநிதிகளின் முன்வைத்தார். இது நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. இதன்மூலம், மோடி அரசு 3 விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்யவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கவும். நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
இன்றைய மாநாட்டில் 3 அமர்வுகள் இருந்தன – (1) மூன்று கருப்பு சட்டங்கள் பற்றியும், (2) தொழில்துறை தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது (3) விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகள் குறித்து. இன்று, மாநாட்டின் இரண்டாவது அமர்வில், நாட்டின் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள், தொழிலாளர்கள் மீதும், மக்கள் மீதும் ஜனநாயகமற்ற முறையில் திணிக்கப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்கள் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து மாநாட்டில் உரையாற்றினார்கள். அனைத்து அமர்வுகளிலும் உரையாற்றிய பேச்சாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து, நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை விரிவுபடுத்தியும், தீவிரப்படுத்தியும், அதை இந்தியா முழுமைக்குமான போராட்டமாக மாற்ற தங்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். மாநாட்டின் ஒவ்வொரு அமர்விலும் தலா 15 பேச்சாளர்கள், ஆழ்ந்து ஆராய்ந்து, பங்களித்து, மாநாட்டில் வைக்கப்பட்ட தீர்மானத்தை வளப்படுத்தினர்.
விவசாயிகள் போராட்டம், விவசாய சமூகங்களிடையே ஏற்படுத்தியுள்ள ஆழமான மாற்றங்கள் குறித்தும், நீண்டகால போராட்டத்தின் காரணமாக ஏற்கனவே பல நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் பேச்சாளர்கள் தங்கள் உரைகளில் வலியுறுத்தினர். இந்த மாநாடு தனது நடவடிக்கைகளை நாளையும் தொடரும்.
கரும்புக்கான “மிக உயர்ந்த” நியாயமான மற்றும் கட்டுப்படியாகும் விலை (FRP) என ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. 2021-22 சர்க்கரை சீசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட, 10% பிழி திறனுடன் குவிண்டாலுக்கு 290 என்ற விலையைச் சர்க்கரை ஆலைகள் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். உண்மையான விலை உயர்வு ஒரு குவிண்டாலுக்கு ஐந்து ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்த உயர்வு நாட்டின் கரும்பு விவசாயிகளை அவமதிப்பதாகும்” என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.
ஒருபுறம், வேளாண் செலவுகள் மற்றும் விலைக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) மற்றும் ஒன்றிய அரசு, கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை (SAP) மாநிலங்களுக்கிடையில் வேறுபட்ட முறையில் உயர்த்தக்கூடாது என்று அறிவுறுத்துகிறது; மறுபுறம், நியாயமான கட்டுப்படியாகும் (FRP) முறையில் மோடி அரசால் விலை நிர்ணயிக்கப்படவில்லை. பஞ்சாப் விவசாயிகளின் சமீபத்திய வரலாற்றுப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு குவிண்டால் கரும்புக்கு ஐம்பது ரூபாய் உயர்வு பெற்ற பிறகு, உற்பத்திச் செலவுகள் குறைக்கப்பட்டு, விவசாயிகளின் கடின உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகிறது.
கரும்பு கொள்முதல் (நெல் கொள்முதலுக்கு அடுத்தது) பற்றி இந்திய அரசு தனது செய்திக்குறிப்பில் வெளியிட்ட மிகைப்படுத்தல் கூட முரண்பாடாக உள்ளது. அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் C2+50% என்ற ஊதிய நிர்ணயத்திற்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று போராடும் விவசாயிகள் கேட்டு வருகின்றனர். இது தற்போதைய விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
உத்திரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் போது விவசாயிகளின் இயக்கம் வேகமாக வலுப்பெற்று வருவதால், மாநில பாஜக அரசின் பதட்டம் வெளிப்படையாக தெரிகிறது. கரும்புக்கான மாநில பரிந்துரை விலை மிகக் குறைவாக உயர்த்தப்பட்டிருப்பது மற்றும் 2010 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள தொகை பற்றி அரவை பருவத்திற்கு முன்பே தீர்வு காணப்படும் என்ற முதலமைச்சரின் வாக்குறுதியும் இந்த பதட்டத்திற்குக் காரணமாகும். உ.பி. முதல்வரால் நேற்று, அதன் மக்களுக்காக கவனமுடன் திட்டமிடப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் மாற்றி உருவாக்கப்படட நாடகம், நடந்து வரும் விவசாயிகள் இயக்கத்தை கேவலப்படுத்துவதாக இருந்தது. இருப்பினும், SKM இன் மிஷன் UP திட்டங்கள் விரைவில் BJP அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை சிதறடிக்கும் என்று! SKM கூறியுள்ளது.
பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்கின்றன. ஜலந்தரில், நேற்று பாஜக மாநில தலைவர் அஷ்வினி சர்மாவுக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரியானாவில், ஜிண்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு பயந்து ஜேஜேபி தனது கூட்ட அரங்கை மாற்றியுள்ளது.
அறிக்கையை வழங்கியவர்கள்:
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் தல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவ்குமார் சர்மா ‘கக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
9417269294, samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு:
AIKSCC, தமிழ்நாடு.