ஏற்பு மருந்துகளே நம் மரபிற்குரியன! தடுப்பூசிகளைத் திணிக்காதீர்! என செம்மை அறக்கட்டளை நிறுவனர் ம.செந்தமிழன் அவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெருந்தொற்றுக்கான ஒரே தீர்வு என தடுப்பூசிகள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒருசார்பான, பிழையான கருத்து. ஆங்கில மருத்துவத்தினைப் பின்பற்றுவோருக்கு இது பொருந்தலாம். அதனைப் புறக்கணித்து வாழவிரும்புவோருக்கு இதில் எள்ளளவும் ஏற்பில்லை. ஆங்கில மருத்துவத்தினை மட்டுமே குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்பது வன்கொள்கை.
தமிழர்களின் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாக உடல்நலக் கொள்கைகள் செழிப்படைந்து வந்துள்ளன. அவற்றின் பயன்களாகத்தான், நிலவேம்பு, கபசுரக் குடிநீர், வேம்பு ஆகிய மருந்துகள் இன்றும் மக்களைக் காக்கின்றன. இவ்வாறான மரபினை ஒதுக்கிவிட்டு அயல்நாட்டு கொள்கையினைக் குடிமக்கள் மீது திணிப்பது எவ்வகையிலும் முறையல்ல.
தொற்றுகளுக்கு மரபு முன்வைக்கும் தீர்வு, ஏற்பு மருத்துவம். ஆங்கில மருத்துவம் கூறுவது தடுப்பு மருத்துவம். இவ்விரண்டும் நேர் எதிரானவை.
ஏற்பு மருத்துவம் என்பது, ஒரு நோய்த் தொற்றினை இயற்கையாக ஏற்றுக்கொண்டு அத்தொற்றினை உடல் தன்வயப்படுத்துவதற்கான நெறிகளைப் பின்பற்றுவதாகும். அதாவது, தொற்றும் நுண்ணுடலிகளைத் தடுக்கும் வாய்ப்பே இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டு, அவை உடலில் பெருகிவிடாவகையில், உடலைத் தகவமைப்பது நம் மரபுக்கொள்கை. இவ்வாறு செய்கையில், தொற்று நேரிட்டாலும், உடல் தன்னை அத்தொற்றினைச் செரித்து அதன் பெருக்கத்தினை வரையறுக்கும் அளவுக்கு தகவமைவு அடைகிறது.
குப்பைமேனி, மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு, பூண்டு, மிளகு ஆகியன மிகவும் இன்றியமையா ஏற்பு மருந்துகள். இவற்றை முறையாக உட்கொள்ளும் வழிமுறைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுத்தால், தொற்றுகளை உடலில் ஏற்றும் நலத்துடன் வாழ்வியலும்.
நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகியன இவ்வாறு ஏற்பு மருந்துகளாகவே மக்களைக் காத்து வருகின்றன. இவை தடுப்பு மருந்துகள் அல்ல.
தடுப்பு எனும் கருத்தே இயற்கையைப் புரிந்துகொள்ளாதவர்களின் வெளிப்பாடுதான். நுண்ணுடலிகளைத் தடுக்கவே இயலாது என்பதுதான் மெய்மை. நுண்ணுடலிகளைப் பற்றி பயின்றோர் அனைவரும் இதனை அறிவர்.
தடுப்பு மருந்துகளால் எப்பயனும் இல்லை என்பது நம் கருத்தல்ல. தடுப்பு ஊசிகள், மருந்துகள் பல நோய்களைத் தடுத்தும் தணித்தும் இருக்கின்றன,. ஆனாலும், அவற்றினால் விளையும் எதிர் விளைவுகள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதே நம் கருத்து. ஆகவே, தடுப்பு மருந்து எனும் ஒரு வழிமுறையினைப் பின்பற்றுவோருக்கு, அவற்றின் எதிர் விளைவுகளைப் பற்றிய அறிவிப்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இப்போதுள்ள பெருந்தொற்றிற்காக தடுப்பூசிகள் அரசினாலும் பிற அமைப்புகளாலும் வற்புறுத்தப்படுகின்றன. இவ்வூசிகளின் எதிர்விளைவுகளுக்கு அரசும், பிற அமைப்புகளும் எவ்வகையிலும் பொறுப்பேற்பதில்லை என்பதுதானே உண்மையான நிலை! இவ்வாறு விளைவுகளுக்குப் பொறுப்பேற்காதபோது, தடுப்பூசிகளை வற்புறுத்துவதில் என்ன நியாயம், நேர்மை உள்ளது?
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எனும் பெருங்கூட்டம் தடுப்பூசிகளைக் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பது இன்றைய நிலையாக உள்ளது. இதற்காக பல்வேறு நெருக்கடிகளை அரசும் அதன் அங்கத்தவரும் ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.
இப்போதுள்ள தடுப்பூசிகளின் கட்டாயமானவை அல்ல என்பது சட்டம். ஆனால், அரசே அச்சட்டத்தினை மீறுவது எவ்வகையில் ஏற்புடையது!
இப்பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகளைப் புறக்கணிக்க வேண்டும் என ஆங்கில மருத்துவ வல்லுனர்கள் நூற்றுக் கணக்கானோர் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். தமிழக அரசு இவற்றைப் படித்துள்ளதா, இல்லையா?
தடுப்பூசிகளுக்கு எதிராக ஆய்வு செய்வோரும், அவற்றை எதிர்ப்போரில் மிகப் பெரும்பான்மையானோரும் ஆங்கில மருத்துவர்களே அன்றி, மரபுவாதிகள் அல்லர். இதனைத் தமிழக அரசு நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் எனும் அரசின் முனைப்பு போற்றத்தக்கது. ஆயினும், ஆங்கில மருத்துவத்தின் ஒரு பிரிவினரும் சில மருந்து நிறுவனங்களும், மருத்துவ வணிகர்களும் தீட்டும் திட்டங்களை மட்டுமே மக்கள் மீது திணிக்கும் அரசின் செயல்கள் மிகுந்த வருத்தத்திற்குரியன.
தடுப்பூசிகளால் ஏற்பட்டு வரும் எதிர்விளைவுகளைப் பற்றிய நேர்மையான, வெளிப்படையான ஆய்வுகளும் அறிக்கைகளும் தமிழகத்தில் இல்லை. இதனைச் செய்வதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லை. இந்நிலையில், அத்தடுப்பூசிகளை மக்கள் மீது திணிப்பது மட்டும் நிகழ்ந்தால், கண்மூடித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அரசு நடந்துகொள்கிறது என்றுதான் பொருள்படும்.
ஏற்பு மருந்துகள் எனும் நம் மரபுக்கொள்கையினை மேம்படுத்தி அவற்றையும் மக்களுக்குக் கற்றுத் தர வேண்டும். தடுப்பூசிகளை நம்புவோருக்கான வாய்ப்புகளும் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்விரு வழிமுறைகளையும் அரசு திறந்து வைத்து, இரண்டினைப் பற்றிய நேர், எதிர் கருத்துகளையும் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
தனது உடலில் எந்த மருந்து செலுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. அதனைப் பறிப்பது பெரும் பாவம். இது இயற்கைக்கு எதிரான செயல். நம் இறையியல் வகுத்த கொள்கைப்படி, ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனும் விடுதலைக் கருத்தியலுக்கும் எதிரானது.
நம் மரபு இறையியல் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வளர்ந்துள்ளது. நம் இறையியல் முன்னோடிகளாகிய சித்தர் பெருமக்கள், நோய்களை ஆய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை உணர்ந்து மக்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். ஆகவே நம் மரபு கண்மூடித்தனமான நம்பிக்கைகளை எதிர்த்து வளர்ச்சியடைந்துள்ளது.
தடுப்பூசிகளின் மீது இன்றைக்கு மூடநம்பிக்கைதான் வளர்த்தெடுக்கப்படுகிறது. அதனைக் கேள்வி கேட்பதே அறிவீயல் அல்ல என்ற வாதம் வளர்ந்துள்ளது. எதையும் கேள்வி கேட்டுத் தெளிவதுதான் அறிவு.
கேள்விகளின் வழியாக விளக்கங்களை அடைவதுதான் அறிவியல்.
வேம்பு, நிலவேம்பு, துளசி ஆகியன குறித்த கேள்விகளுகெல்லாம் தமிழர் மரபு விளக்கம் அளிக்கிறது. கபசுரக் குடிநீர் குறித்த கேள்விகளுக்கு விளக்கங்கள் உள்ளன. ஆகவேதான் அரசு இவற்றை ஏற்றுள்ளது. ஆனால், தடுப்பூசிகளினால் விளையும் எதிர்விளைவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு முறையான விளக்கம் இதுவரை இல்லை. ஆகவே, அறிவியலின் மீது பற்றுகொண்டோர் தடுப்பூசிகளின் நம்பகத்தினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
மீண்டும் கூறுகிறோம். தடுப்பூசிகளினால் பயனே இல்லை என்பது நம் கருத்தல்ல. அவற்றினால் விளையும் எதிர்விளைவுகளைப் பற்றிய மதிப்பீட்டில் வணிக நோக்கங்களும், அரைகுறையான பரப்புரைகளும் உள்ளன என்பதுதான் நம் கருத்து.
தடுப்பூசிகளே வேண்டும் என்போர் அவற்றை ஏற்றுக்கொள்வதில் நமக்கு எச்சிக்கலும் இல்லை. அவை வேண்டாம் என்போரை அரசு ஏன் வற்புறுத்துகிறது?
தடுப்பூசி வேண்டாம் என்போர் அரசின் வற்புறுத்தலால் அவற்றைச் செலுத்திக் கொண்ட பின்னர், அவர்களுக்கு நேரும் சிக்கல்களுக்கு யார் பொறுப்பு?
இந்தக் கேள்வி அரசுக்குச் சங்கடத்தை அளிக்கலாம். ஆனாலும், இதனை இன்று புறக்கணித்துவிட்டால் எதிர்காலத்தில் எழப்போகும் சங்கடங்களும் இன்னல்களும் பேரழிவிற்கு ஒப்பானவையாக இருக்கும். ஆகவே, தமிழக முதல்வர் இச்சிக்கலை ஆழ்ந்து நோக்கி, தமிழ்ச் சமூகத்தினைக் காக்கும் அரணாக இருக்க வேண்டும்!
நம் கோரிக்கைகள்,
**பெருந்தொற்றினை மரபுவழிப்பட்ட ஏற்பு மருந்துகளின் வழியாகத் தணித்து மக்களைக் காக்கும் வழிமுறைகளை மேம்படுத்துக. மரபு உடல்நலவியல் என்பது தொற்றினைத் தடுப்பதல்ல, ஏற்றுச் செரித்து, அத்தொற்றினை உடலின் தகவமைப்பாக்குவது என்பதனைப் புரிந்துகொள்க. தமிழகத்தில் உள்ள சிறந்த சித்த மருத்துவ முன்னோடிகள் இதனை நன்கு அறிவர்.
தடுப்பூசிகளின் எதிர்விளைவுகளைப் பற்றிய ஆங்கில மருத்துவ வல்லுனர்களின் ஆய்வறிக்கைகளை நன்கு உள்வாங்கி, அவற்றின் மீதான கொள்கை முடிவு மேற்கொள்க.
**தடுப்பூசிகளின் நன்மை, தீமைகளை வெளிப்படையாக அறிவித்து அவற்றை விரும்புவோருக்கு மட்டும் செலுத்துக.
**அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், மாணவர்கள் போன்றோரை வற்புறுத்தி தடுப்பூசி செலுத்துவதைக் கைவிடுக!
இவையே நம் கோரிக்கைகள். இவற்றைத் தமிழக முதல்வர் நிறைவேற்றக் கோருகிறோம்.
இதற்கு முன்பு பல தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கும் இப்போதுள்ள பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. இப்போதுள்ளவை, போதிய கால அளவில் சோதிக்கப்பட்டவையே அல்ல. மனிதர்கள் மீது இவ்வூசிகள் சோதிக்கப்படுகின்றன. இவற்றின் விளைவுகளைத் தமிழக அரசு சுமக்க வேண்டிய தேவையே இல்லை. இவற்றின் எதிர் விளைவுகளை எந்த மருந்து நிறுவனமும் சுமக்கப் போவதில்லை. வற்புறுத்தல் வழியாக இவ்வூசிகளைச் செலுத்தினால், இறுதிக்கும் இறுதியாக தமிழக அரசும் அதன் தலைவர்களும்தாம் இவ்வூசிகளின் விளைவுகளைச் சுமக்க நேரிடும்.
அம்மையப்பர் அருள் நிறைவதாக!
—
அன்புடன்,
ம.செந்தமிழன்,
செம்மை அறக்கட்டளை,
31.08.2021