ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
277வது நாள், 30 ஆகஸ்ட் 2021.
••• அரியானாவில் கொலையாளியான அதிகாரியை, முதலமைச்சர் பாதுகாப்பதற்கு எதிராக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஆட்சேபணையையும் தெரிவிக்கிறது – துணை மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா மீது கொலை வழக்கு பதிவு செய்ய அரியானா அரசுக்கு, அரியானாவின் விவசாய சங்கங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து, இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன !
••• அரியானா அரசு 100 போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்தது வெட்கக்கேடானது – வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் : எஸ்.கே.எம் !
••• செப்டம்பர் 5ஆம் தேதி முசாபர்நகரில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துக்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன !
ஆகஸ்ட் 28 ஆம் தேதி கர்னல் மாவட்டத்தில், முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நடந்தப்பட்ட காவல்துறையின் கொடூரமான தடியடியின்போது, பலத்த காயங்களுக்கு ஆளான ஸ்ரீ சுஷில் காஜல், நேற்று உயிரிழந்தார். விவசாயிகள் இயக்கத்தில் இடம் பெற்ற இந்தத் தியாகிக்கு எஸ்.கே.எம் தனது மரியாதையைச் செலுத்துகிறது. கடந்த சனிக்கிழமையன்று அமைதியான பேராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குக் காரணமான துணை மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹாவையும், மற்ற அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்வதோடு, கொலை குற்றம் சாட்டி, ஆயுஷ் சின்ஹா மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.கே.எம் மீண்டும் வலியுறுத்துகிறது.
சத்ய பால் மாலிக் போன்ற மற்ற பாஜக தலைவர்கள், இந்த அதிகாரி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதும்கூட, இந்தக் கொலையாளி அதிகாரியை அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் பாதுகாப்பதற்கு எதிராக எஸ்.கே.எம். தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஆட்சேபணையையும் தெரிவிக்கிறது. மேகலாயா ஆளுநர் சத்ய பால் மாலிக், “இந்த அதிகாரியை அரியானா கட்டார் அரசு உடனடியாகப் பதவி நீக்கம் செய்யாவிட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த அதிகாரி வேறு யாரோ ஒருவருடைய வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்று கருத வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாநில முதல்வர், அந்த அதிகாரியின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டவிரோத உத்தரவுகளை, தவறான வார்த்தை பிரயோகம் மட்டுமே என ஒதுக்கித் தள்ளுவது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. கட்டார்-சவுதாலா அரசு தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்துள்ளது என்று, நாங்கள் சொல்லுவதை, அரியானா அரசின் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மேலும், அரியானா முதலமைச்சர், “அரியானா அரசாங்கத்துடன் விவசாயிகளுடன் எங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை, ஏனெனில் 3 மத்திய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோருவதுதான் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையுமாகும்” என கூறியுள்ளார்.
அரியானா பாஜக அரசு மத்தியில் உள்ள மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, தொடக்கத்தில் இருந்தே விவசாயிகளுக்கு எதிராகக் கொடூரமாக செயல்பட்டு வருகிறது. பாஜக அரசுகள் மக்கள் விரோதமாக நடந்துகொண்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் புறக்கணித்து, கறுப்பு கொடி போராட்டங்களைத் தொடருமாறு அனைத்து விவசாயிகளையும் எஸ்.கே.எம். கேட்டுள்ளது.
பாஜக-ஜேஜேபி அரசாங்கம், துணை பிரிவு மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை உடனடியாக பணிநீக்கம் செய்வதன் மூலம் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானாவின் விவசாய சங்கங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. இது, கரோண்டா தானிய சந்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விவசாயிகள் பஞ்சாயத்தின்போது வலியுறுத்தப்பட்டு இறுதி எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.
போராடிய 100 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்த நிர்வாகத்தின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று எஸ்.கே.எம் கூறியுள்ளது. அரியானா அரசாங்கம் இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் உடனடியாக நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்.கே.எம். கோருகிறது.
இதற்கிடையில் உத்தரகண்டில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை நேற்று உருவாக்கியது. மாநிலத்தின் பல விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாநில அமைப்பு அமைக்கப்பட்டது. எஸ்.கே.எம்.இன் சமீபத்தில் முடிவடைந்த தேசிய மாநாட்டில், எஸ்.கே.எம்.இன் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்க திட்டமிடப்பட்டது.
நேற்று யமுனா நகரில், விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து, பாஜக இரண்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளது. அரியானாவின் கல்வி அமைச்சர் கன்வர் பால் குர்ஜார், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் யமுனாநகர் மேயர், பாஜக தலைவர் சோனாலி போகட், நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரின் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன.
உத்தரபிரதேச முசாபர்நகரில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் விவசாயிகள் மகாபஞ்சாயத்துக்காக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் அணிதிரட்டல் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எஸ்.கே.எம் எதிர்பார்க்கிறது. இது பாஜக மோடி அரசின் விவசாயி விரோத, கார்ப்பரேட் சார்பு கொள்கைகள் மற்றும் சட்டங்களைப் பரப்புரை செய்யும் மிஷன் உ.பி. திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இன்று, தெற்கு அரியானாவின் மேவாட் பகுதியில் உள்ள நூஹ் என்ற இடத்தில், பல எஸ்.கே.எம் தலைவர்கள் கலந்து கொண்ட விவசாயிகள் மகாபஞ்சாயத்து நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்தவும், செப்டம்பர் 25 முழு அடைப்பை (பாரத் பந்த்) வெற்றிபெறச் செய்யவும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேற்று, டெல்லியில் உள்ள அரசியலமைப்பு சங்கத்தில் (Constitution Club) நடைபெற்ற “சாம்விதன் பச்சாவ், தேஷ் பச்சாவ் அபியான்” என்ற அமைப்பின் கூட்டத்தில், விவசாயிகள் போராட்டத்திற்கும், செப்டம்பர் 25 முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்திற்கும் அதன் ஆதரவை உறுதி செய்தது.
—
அறிக்கையை வழங்கியவர்கள்:
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.