செப்டம்பர் 1 – தமிழ்த் தேச விடுதலைப் போரில் கருவிப் போர்க் காலக்கட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்த் தேச விடுதலைப் போராளிகள் -தோழர் தமிழரசன், தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேலு, ஜெகநாதன் ஆகியோர் வீரமரணம் அடைந்த நாள்!
1987 செப்டம்பர் 1 ஆகிய அவர்களுடைய நினைவு நாளில் தமிழ்த் தேச விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செய்கின்றோம்!
நிலவுடமை எதிர் வர்க்கப் போரிலும், தமிழ்த் தேச விடுதலைப் போரிலும், சாதி ஒழிப்பு செயல்பாட்டிலும், தெளிவான பார்வையைக் கொண்டவர்கள் இப்போராளிகள்.
“தமிழ்த் தேசிய அரசியல்” என்பது தமிழ்நாட்டு விடுதலை அரசியல்தான் என்பதிலும், இந்தியத்திலிருந்தும், இந்திய மேலாண்மைக்கு உட்பட்ட இணக்க அரசியலிலிருந்தும் விடுதலை பெறுவதுதான் என்பதிலும், தமிழ்த் தேசிய அரசியல் என்பது தமிழின இறையாண்மை அரசியல்தான் என்பதிலும், அது இந்தியத்துக்கு இணக்கமான தேர்தல் அரசியலை ஒருபோதும் நாடாது என்பதிலும் தெளிவாக இருந்தனர்.
இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைச்சாலை என்பதை தோழர் தமிழரசன் பிரகடனப்படுத்தினார்.
விடுதலைபெற்ற தமிழகத்தை உருவாக்குவதற்கான கருத்தாக்கத்தின் அடுத்த கட்டமான கருவிப்போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்நாட்டின் விடுதலை வீரர்களை இழந்த நாள் இன்று.
நாக்கு பூச்சியை நல்லபாம்பு என்று கருதி வாய்பிளக்கும் பலரும், இந்த தமிழ் மண்ணில் ஆயுதம் தாங்கிய அனகோண்டாவே வலம் வந்தது என்பதை அறிய வேண்டும். தோழர் தமிழரசனின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
ஈழ விடுதலைப் போரின் இழப்புகள் வாக்குப் பெட்டியின் பக்கம் தோழர் தமிழரசனை விரட்டவில்லை. மாறாக, இந்தியாவிலிருந்து தமிழகம் விடுதலை அடைய வேண்டியதன் அவசியத்தையே உணர்த்தியது. கட்சிகள் எல்லாம் பிழைப்புவாதத் தேர்தல் அரசியலை முன்னெடுத்த நிலையில், அதற்கு நேர் எதிர்த்திசையில், தமிழ்மண் விடுதலை அரசியலை முன்னெடுத்தவர்கள் தோழர் தமிழரசன் போன்றோர்.
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் ஆயுதப் பிரிவான தமிழ்நாடு விடுதலைப் படையின் தன்னிகரில்லா தளபதியும், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும் தமிழரசன் ஆவார்.
தமிழ்நாட்டின் விடுதலைக்கான படை அமைப்பு பற்றிய கருத்தாக்கம் பெருஞ்சித்திரனாரின் சிந்தனையில் வெளிப்பட்டது. புலவர் கலியபெருமாள் இத்திசையில் கருத்தியல் ரீதியாகவும் செயல் முன்னெடுப்பு அளவிலும் முக்கிய பங்களித்தார். புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், தோழர் சுந்தரம் ஆகியோர் தனித்தமிழ்நாடு கொள்கையை முன்னிறுத்தி, அதுவரை தங்கள் கருத்தியலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய மார்க்சிய- லெனினிய பொதுவுடைமைக் கட்சியின் ஏக இந்தியக் கருத்தியலில் இருந்து விடுபட்டு, தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, வழிநடத்தினர். அதன் ஆயுதப்படையாக தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக்கம் பெற்றது.
“தனித் தமிழ்நாடு என்பதே கொள்கை; ஆயுதப் போராட்டமே வழிமுறை”
-என்ற கொள்கைத் தெளிவைக் கொண்டவர்கள் இவர்கள்.
வேறு பல போராளி அமைப்புகளைப் போலவே, தங்களுக்கான செயல்பாட்டு நிதியைத் திரட்ட எடுத்த நடவடிக்கையான பொன்பரப்பி வங்கிக் கொள்ளையின் போது, தமிழரசன் உள்ளிட்ட ஐவரும் பொதுமக்களின் உடையில் இருந்த காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டனர். கையில் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருந்தும், மக்களை நோக்கி ஆயுதங்களை நீட்ட மனமின்றி, இறப்பைத் தழுவினர் தோழர்கள்.
தோழர் தமிழரசனின் இறுதி ஊர்வலத்தில் 50,000 மக்கள் பங்கேற்றதிலிருந்து மக்களுக்கும் தமிழ்த் தேச விடுதலைப் போராளிகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை உலகம் அறிந்து கொண்டது.
சாதி ஒழிப்பும், தமிழ்த் தேசிய விடுதலையும் ஒன்றோடொன்று பிணைந்துள்ள தன்மையை தோழர் தமிழரசனின் “சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்,” என்ற மீன்சுருட்டி அறிக்கை தெளிவுபடுத்தும், ஈழ விடுதலைப் போராளிகளுக்கும், தோழர் தமிழரசனுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. ஆயுதங்களையும் பயிற்சியையும் பெறுவதற்கு அதுவே ஒரு வழியாகவும் இருந்தது.
தோழர் தமிழரசனின் மறைவுக்குப் பிறகும் அவருடைய அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1985 -2000 ஆகிய காலகட்டத்தில் 80 இடங்களில் மைய அரசின் அதிகாரத் தளங்களில் குண்டுகள் வெடித்ததிலிருந்து அதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்தியத்துக்குள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, தமிழ்நாட்டுக்கு சில கொசுறு சலுகைகளை இந்திய ஆண்டையிடமிருந்து பிச்சையாக வேண்டிப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ்த் தேச விடுதலையை தேர்தல் அரசியல் மூலம் பெறவே முடியாது.
தமிழ்த் தேசிய இனம் தனது இனவிடுதலைப் போராட்டங்களின் மூலமாக, இந்தியா முழுமையிலும் உள்ள தேசிய இனங்களுக்கு விடுதலைப் போராட்ட உணர்வை ஊட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
இந்திய அரசியலில், நாடாளுமன்றத்தில் தமிழர்கள் என்றென்றும் சிறுபான்மையினரே. மாநிலத்தில் அதிக சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம், மாநில அரசை அமைப்பதன் மூலம், இந்தியத்துக்கு இணக்கமான சிறந்த கங்காணியாக விளங்க முடியுமே தவிர, இந்தியாவிடமிருந்து தமிழர் இறையாண்மையை மீட்டுவிட முடியாது. இந்தத் தெளிவு தோழர் தமிழரசனிடம் இருந்தது.
இந்தியத் துணைக்கண்டத்தில் எதிலும் தமிழர்களே முன்னோடிகளாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கிறார்கள். இறையாண்மை அரசியலிலும் அவ்வாறு விளங்க வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனங்களும் தங்கள் இறையாண்மை அதிகாரத்தைப் பெற வேண்டும்.
தமிழ் தேச விடுதலைப் போராட்டத்தின் குறியீடாக விளங்கும் தோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம்!
—
பேராசிரியர் த.செயராமன்,
நெறியாளர்,
தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்,
31.08.2021.