தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
“கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று சிறப்புப் பட்டங்களைப் பெற்ற வ.உ. சிதம்பரனார் பிறந்து 149 ஆண்டுகள் முடிந்து 05.09.2021 அன்று 150ஆம் ஆண்டு பிறக்கிறது!
பன்முக ஆளுமை கொண்டவர் வ.உ.சி.! வழக்கறிஞர்; தமிழறிஞர்; இந்திய விடுதலைப் போராட்டத்தை வீரஞ்செறிந்த வெகு மக்களின் வீதிப் போராட்டமாக நடத்தியவர்; தமிழ்நாட்டின் முதல் தொழிற்சங்கத் தலைவர். தொழிலாளர் உரிமைகளுக்காக தூத்துக்குடி கோரல் மில் நூற்பாலையில் 1908 சூலை 22இல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய முன்னோடி! ஆங்கில ஏகாதிபத்திய வணிகக் கொள்ளையர்க்கு மாற்றாக மலிவுக் கட்டணத்தில் பயணிகள் கப்பல் ஓட்டியவர்;
விடுதலைப் போராட்ட உரைகளுக்காக 20 ஆண்டும், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு தங்கும் இடமும் உணவும் வழங்கிப் பராமரித்ததற்காக 20 ஆண்டும் விதிக்கப்பட்டு இரண்டையும் தனித்தனியே அனுபவிக்க 40 ஆண்டுகள் சிறையில் இருக்கத் தண்டனை பெற்றவர்; கோவைச் சிறையிலே செக்கிழுத்தவர்; இலண்டன் பிரிவி கவுன்சில் மேல் முறையீட்டில் 40 ஆண்டுத் தண்டனை ஆறு ஆண்டாகக் குறைக்கப்பட்டவர்;
திருக்குறளுக்கு உரை எழுதியவர்; மெய்யறிவு இலக்கிய நூல்கள் படைத்தவர்; சமூகநீதிக் கொள்கையைக் கடைபிடித்தவர்; பிராமணரல்லாதார்க்கு இடஒதுக்கீடு கேட்டவர்; சாதிவெறி, மதவெறிக்கு எதிரானவர்; பிற்காலத்தில் வறுமையில் மிகவும் வாடியவர் என்று பன்முகம் கொண்டு – தமிழினத்தின் அறிவு – வீரம் – அறம் மூன்றின் முத்தாய்ப்புச் சின்னமாக விளங்கியவர் வ.உ.சி!
வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர் வ.உ.சி; களப் போராளி என்பதை நாமக்கல் பாவலர் வெ. இராமலிங்கனார் பாடினார்:
“பேசி விட்டே சுயராஜ்யம் பெறலாமென்று
பெரியபலத் தீர்மானக் கோவை செய்து
காசு, பணப் பெருமையினால் தலைவராகிக்
காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து
தேசநலம் தியாகமின்றி வருமோ என்று
திலகர் பெருமான் செய்த பெருங்கிளர்ச்சி சேர்ந்து
ஓசைப்படா துழைத்த பல பெரியோர் தம்முன்
உண்மைமிக்க சிதம்பரமும் ஒருவனாவான்!”.
ஆயுதம் ஏந்தாத வெகுமக்கள் போராட்டத்தை வீச்சுமிக்கதாக நடத்திக் காட்டியவர் வ.உ.சி. பெருந்திரள் ஊர்வலம் – ஆர்ப்பாட்டம் முதலியவற்றை நடத்தினார். அரசுக்கு எதிரான ஒத்துழையாமைச் செயல்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வைத்தார். இந்திய விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களுக்கு, வெள்ளைக்கார விசுவாசிகளுக்குக் கடைகளில் பொருட்கள் விற்க மறுத்தனர்; துணி வெளுக்க மறுத்தனர்; முடிதிருத்த மறுத்தனர். இவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நடத்தினார்.
மக்களிடையே வ.உ.சி. பேசிய சொற்பொழிவுகளைக் காவல்துறையினர் பதிவு செய்தனர். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட வழக்குக் குற்ற அறிக்கையில் 1908இல் வ.உ.சி. பேச்சு பதிவாகியுள்ளது.
“மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டி விடலாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று தெரிந்தாலே போதும்; வெள்ளையர்கள் தாமாகவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.
“இந்தியாவில் மிஞ்சிப் போனால் 50 ஆயிரம் வெள்ளையர்கள் தான் இருப்பார்கள். அவர்களைப் பலாத்காரமாக நாம் வெளியேற்ற முடிவு செய்தால் அதுமிகவும் எளிமையான காரியம்தான்! ஆனாலும், நாம் பலாத்காரத்தில் ஈடுபடக்கூடாது. அதே சமயத்தில் வெள்ளையரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதும் இல்லை.
“இந்தியர்களாகிய நாம் ஏற்கெனவே தீர்மானித்தபடி பிரிட்டிஷ் துணி, சர்க்கரை, எனாமல் பாத்திரம் முதலிய பொருள்களை வாங்காமல் பகிஷ்கரித்தால் ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள்.
“சவரத் தொழிலாளிகள் அன்னியத் துணி அணிந்தவர்களுக்கும் அன்னிய ஆதரவாளர்களுக்கும் தாங்கள் இனிமேல் சவரம் செய்வதில்லை என்று உறுதி எடுத்து சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த உணர்வு மற்ற தொழிலாளர்களுக்கும் வந்தால் பிரிட்டிஷ்காரர்களால் இந்த நாட்டில் நான்கு நாள் தாக்குப் பிடிக்க முடியுமா? வருவதெல்லாம் வரட்டும் நாம் எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வோம்! வெற்றி நிச்சயம்!”
– (சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், சிவலை இளமதி).
திருநெல்வேலி, தச்சநல்லூர், தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் போராட்டம் வீச்சுப் பெற்றது. காவல்துறை அடக்குமுறை தீவிரப்பட்டது. தன்னைச் சந்திக்க வருமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் வ.உ.சி.யை அழைத்தார். 12.03.1908 அன்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர்.
விஞ்சுக்கும் வ.உ.சி.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவ்வுரையாடலை ஒரு கவிதையாக்கினார் பாரதியார்.
விஞ்ச்துரை :
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்; கனல் மூட்டினாய்..
ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்; பொருள் ஈட்டினாய்
வ.உ.சி.:
பொழுதெல்லாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ
நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ?
ஆண்பிள்ளைகள் அல்லமோ?
உயிர் வெல்லமோ?
விஞ்ச் :
வாட்டியுன்னைச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; வலி கூட்டுவேன்
வ.உ.சி. :
சதையைத் துண்டு துண்டாக்கினும்
உன் எண்ணம்
சாயுமோ? ஜீவன் ஓயுமோ?
… …
வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். மாபெரும் மக்கள் போராட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி எங்கும் வெடித்தது. நகராட்சி அலுவலக எண்ணெய்க் கிடங்கு, துணைப் பதிவாளர் அலுவலகம் எனப் பல இடங்கள் தீக்கிரையாயின. நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறையை உடைத்து வ.உ.சி.யை மீட்போம் என்று புறப்பட்டனர்.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து 4 நாட்கள் கலவரம் – போராட்டம் நீடித்தது. வ.உ.சி. மாபெரும் மக்கள் தலைவர் என்பது மெய்ப்பட்டது.
பிராமணிய எதிர்ப்பு
======================
ஆறாண்டு சிறைத் தண்டனை உறுதியானது. 1912ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 4லு ஆண்டு சிறையிலிருந்தவர் தண்டனைக் கழிவு பெற்று விடுதலை ஆனார். காங்கிரசுக் கட்சியில் வ.உ.சி.க்கு உரிய இடம் இல்லை. ஆனால் அவர் காங்கிரசுக்காரராகவே தொடர்ந்தார். சமூகச் சிக்கல்கள், மதம், பிராமணியம், இலக்கியம் முதலிய ஆய்வுகளில் இறங்கினார். பிராமணியத்தை, மூட பக்தியை எதிர்த்தார். பெரியாருடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டார். சைவ சித்தாந்தத்தில் உறுதியுடன் இருந்தார். கடவுள் மறுப்பாளரையும் மதிப்புடன் ஏற்றார்.
“மக்கள் பல்வேறு பெயர்களோடும் வடிவுகளோடும் காணப்படினும் அவர்களெல்லாம் மக்கள் சாதியினரேயாவது போல, மதங்கள் பலவேறு பெயர்களோடும் கொள்கைகளோடும் காணப்படினும் அவைகளெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன” என்றார் வ.உ.சி. (இந்திய விடுதலைப் போரில் வ.உ.சி. – என். திரவியம், விஜயா பதிப்பகம்).
வ.உ.சி.யின் விடுதலைப் போராட்டங்களும் சமூகவியல் சிந்தனைகளும் வரலாற்றில் நிலைக்கும்; வளரும். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிப் போராடிய வ.உ.சி.யை அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைமை அப்போதும் கண்டுகொள்ளவில்லை; இப்போதும் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாற்று நூலில் வ.உ.சி.யின் பெயரே இல்லை. வடநாட்டவர்க்கு வ.உ.சி.யைத் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில் வடநாட்டுத் தலைவர்கள் மட்டுமல்ல, வடநாட்டுச் சிறுசிறு நிகழ்வுகளும், நினைவுச் சின்னங்களாக – திடல் பெயர்களாக – தெருப் பெயர்களாக எங்கும் நிறைந்திருக்கின்றன.
நம் வீரத்தமிழர், தமிழ்ச் சான்றோர் வ.உ.சி.யின் நினைவுகளைப் போற்றுவோம்! வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டு விழாவை சென்னைப் பட்டணத்திலிருந்து சிற்றூர் வரை எடுப்போம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2021 செப்டம்பர் இதழில் எழுதி வெளிவந்துள்ள ஆசிரியவுரை).
—
கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.