Home>>கல்வி>>மெய்ஞானி – வேதியியல் பேராசிரியர் முனைவர் வே. சேதுராமன் அவர்கள்
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மெய்ஞானி – வேதியியல் பேராசிரியர் முனைவர் வே. சேதுராமன் அவர்கள்

என் வாழ்வின் உன்னத நிமிடங்களாக நான் நினைப்பது தகைசால் சான்றோர் பெருமக்களை சந்தித்து உரையாடுவதும் அவர்கள் அனுபவங்களைப் பெறுவதும் தான். அது வகுப்பறை வளையத்தைத் தாண்டிய நல்வாய்ப்பு. எனது ஆசிரியரை சந்திக்கும் அத்துணை தருணங்களிலும் புதியன ஒன்றை கற்றவனாக விடைபெறுவது விந்தை.

எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பேராசிரியரை நன்கறிவர். நேர்மை வாய்மை, உண்மை, அர்ப்பணிப்பு என அத்தனைச் சொல்லுக்கும் செயல்வடிவமாக வாழ்கிறார் வேதியியல் பேராசிரியர் முனைவர் வே. சேதுராமன் அவர்கள். கற்றல் – கற்பித்தல் – மாணவர்களுக்காக தன் வாழ்நாளை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்ஞானி. பேராசிரியருக்கும் எனக்குமான ஆசிரிய மாணவர் உறவு இருபத்திரண்டு ஆண்டுகளைக் கடந்து நீள்கிறது.

1999களில் பின்லே பள்ளிப்படிப்பை நிறைவு செய்து நான் மன்னார்குடி அரசுக்கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் விண்ணப்பித்திருந்த நான் உரிய நாளில் செல்லாததால் வேறொருவருக்கு கிடைத்துவிட இதை அறியா நான் பேராசிரியர் அப்போது வேதியியல் துறைத்தலைவர் அவருக்கு முன் கையறு நிலையில் வினவ என் நலம் விசாரித்தார். அவர் விசாரிப்பில் வாழ்வின் பற்றுக்கோடாக அவரை பற்றிக்கொண்டேன். மற்றொரு நாள் இளங்கலைத் தமிழ்படிக்க விருப்பம் தெரிவிக்க பல்கலைகழகத்தில் பெற்றுவந்த 14 இடங்களில் தனக்கே உரித்தான நேர்மையைக் கைக்கொண்டு எனை சேர்த்துவிட்டார்.

இப்படியாக எனது கல்லூரிக் கல்விக்கு வித்திட்டவர். கல்லூரி பத்து மணிக்கு தொடங்குகிறதெனில். இவர் வகுப்பு எட்டு மணிக்கே தொடங்கி விடும். காலை மாலையென தேநீர் பிஸ்கட்டோடு நடக்கும் இவரின் இலவச தனிப்பயிற்சி வகுப்பினால் பயனடைந்த உழவர் வீட்டுப்பிள்ளைகள் ஏராளம் ஏராளம். அவர்கள் இன்று உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளராக, விஞ்ஞானியாக, பேராசிரியராக, ஆசிரியராக மற்றும் பல்துறையில் பரவி வாழ்கின்றனர்.

மெய்வருத்தம் பாரார்
பசி நோக்கார்
கண் துஞ்சார்/
எவ்வெவ்வர் தீமையும் மேற்கொள்ளார்/ செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்/
கருமமே கண்ணாயினார்… என்ற நீதிநெறிப் பாவிற்கு சான்றானவர். தன் வாழ்வு முழுவதையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.

பல மாணவர்கள் இவரிடம் வேதியியல் பயின்றிருந்தாலும் நான் வாழ்க்கையைப் பயின்றவன். அறிவியல், அரசியல், இலக்கியம் என பன்முக ஆளுமைத்திறன் பெற்றவர்.

மார்க்ஸ், அஸிமா, ஐராவதிகார்வே, காண்டேகேர் போன்ற ஆளுமைகளை எனக்குள் அடையாளப்படுத்திவர். தொடர் வாசிப்பாளர், வாசிப்பு அனுபவங்களையும் தன் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்வார். அவர் கரம் பற்றியே பயணிக்கிறேன் எந்நாளும். இன்றளவும் என் வளர்ச்சியை விரும்பும் என் குருநாதர் பேராசிரியர் வே.சேதுராமன் அவர்களுக்கு ஆசிரியர் நாளில் மட்டுமின்றி எந்நாளும் வாழ்த்துகள் கூறி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.


பேரன்பும் நன்றியும்,
முனைவர் வ.சிவகுமார்,
மன்னார்குடி.

Leave a Reply