Home>>இந்தியா>>“ஓவல் 50” ஒரு வரலாற்று வெற்றி!!
BCCI England Tour 2021
இந்தியாவிளையாட்டு

“ஓவல் 50” ஒரு வரலாற்று வெற்றி!!

கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய ஒன்றிய கிரிக்கெட் அணி 4/1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. எனவே 2021 ம் ஆண்டு சுற்றுப்பயணத்திலும் அதே போல நிகழுமா என்ற கேள்வி அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் இருந்தது.

ஆனால் காட்சிகள் வேறு, அணி வீரர்களும் வேறு, கிடைத்த முடிவுகளும் வேறு.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு அற்புதமான வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய ஒன்றிய அணி, நேற்று ஓவல் மைதானத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் 2/1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி இருக்கும் நிலையில் அதை வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை வென்ற பெருமையை இந்திய ஒன்றிய அணி பெறும்.

நேற்று நடந்த முடிந்த டெஸ்ட் போட்டியில் சில சிறப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம்.

1. 1971க்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு இந்த ஓவல் மைதானத்தில் தற்போது இந்திய ஒன்றிய அணி வெற்றி பெற்றுள்ளது.

2. 1986க்கு பிறகு இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. கபில் தேவ் தலைமைக்கு பிறகு கோலி தலைமையில் இது நடந்துள்ளது.

3. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் வெற்றிகளை (3 டெஸ்ட்) பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலி பெறுகிறார். ஏற்கெனவே 2018ல் ஒரு டெஸ்ட் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் கபில் தேவ் தலைமையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஒன்றிய அணி வென்றது.

4. இந்த வெற்றி மூலம் SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக டெஸ்ட் போட்டிகளில் (6 டெஸ்ட்) வென்ற தலைவர் என்ற பெருமையையும் கோலி பெறுகிறார்.

5. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் மிகக்குறைவான டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த சாதனையை ஜஸ்பிரித் பும்ரா செய்துள்ளார். கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை வெறும் 24 டெஸ்ட் போட்டிகளில் செய்து அதை முறியடித்துள்ளார்.

இப்போது இந்த ஓவல் போட்டியை பற்றிய ஒரு விரிவான அலசலை பார்ப்போம்.

கடந்த 3 போட்டிகளில் ஆடாத அஸ்வின் இந்த போட்டியில் நிச்சயம் ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம்பெறாமல் போனது பலருக்கு வருத்தமளித்தது.

ஆனால் கேப்டன் கோலி அதற்கு சொன்ன காரணம் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் தான் இருக்க முடியும் என்பது அணியும் நிலைப்பாடு. அந்த சுழல் பந்து வீச்சாளர் இடது கை பந்துவீச்சாளராக இருந்தால் எங்களுக்கு நல்லது என்று கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம் இங்கிலாந்து அணியில் நான்கு இடக்கை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் எனவே மைதானத்தின் வலதுபுறமும் அதிக பந்துகள் வீசப்பட்டு அந்த இடத்தில் சில பாதிப்புகள் இருக்கும்.

எனவே அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு ஒரு இடக்கை சுழல் பந்துவீச்சாளர் தேவை என்ற நோக்கில் கிடையாது அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக கூறினார். அவர் சொன்னது மிகச்சரியென 5ம் நாள் ஆட்டத்தில் பந்து reverse swing ஆனபோதே தெரிந்தது. ஒரு பக்கம் ஜடேஜா மைதானத்தின் வலது பக்கம் உள்ள patchல் தொடர்ந்து பந்தை வீச வீச பந்து நன்றாக ஒருபுறம் தேய ஆரம்பித்தது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங்க்கு அழைக்கும் போதே தெரிந்தது, கடும் சவால் இந்தியாவுக்கு இருக்கப் போகிறது என்று. நல்ல பேட்டிங் மைதானமாக இருந்தாலும் கூட முதல் நாள் காலநிலை மோசமாக இருந்ததால் இந்தியா மோசமாக தடுமாறியது இருந்தாலும் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட ஷர்துல் தாகூர் ஆடிய ஒரு அற்புதமான ஆட்டம் ஓரளவுக்கு கௌரவமான எண்ணிக்கையை முதல் இன்னிங்ஸ்ல பெற்றுக்கொடுத்தது (191).

பின்னர் இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் ஆடை துவங்கும்போது காலநிலை சிறப்பாக இருந்த போதும், ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தபோதிலும் 62 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த 5 விக்கெட்ல நமக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஜோ ரூட் விக்கெட்டும் ஒன்று.

இந்த நேரத்தில் இந்தியா மிக வலுவான நிலையில் இருந்தது மிகக் குறைவான எண்ணிக்கை எடுத்திருந்தாலும், எப்படியும் முன்னிலை பெறலாம் முதல் இன்னிங்சில் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனாலும் ஆலி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டத்தினால் ஒரு நல்ல எண்ணிக்கையை தொட்டார்கள் (290). 99 ரன்கள் முன்னிலை பெற்று மிக வலுவான நிலையிலும் இருந்தார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது சமிக்கு பதிலாக வந்த உமேஷ் யாதவை பாராட்டியேயாக வேண்டும்.

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறும் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசியது உண்மையிலேயே பெரிய விடயம். இதுதான் தற்போதைய இந்திய ஒன்றிய அணிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஒரு முன்னணி வீரருக்கு மாற்றாக களமிறங்கும் வேறு ஒருவர் அந்த குறையை தெரியாமல் மிக அற்புதமாக ஆடுகிறார். இது தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடமாக நடக்கிறது.

கடும் நெருக்கடியில் மோசமான வானிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா மிகப் பிரமாதமாகவே ஆடியது. இந்தியாவை தாண்டி வெளி நாட்டில் முதன் முதலாக ரோகித் சர்மா அற்புதமான ஒரு டெஸ்ட் சத்தை விளாசினார். அதைத்தொடர்ந்து புஜாரா தாகூர் கணிசமான ரன்களை குவிக்க மிகப்பெரிய ஒரு எண்ணிக்கை இந்தியா தொட்டது (466).

பின் 369 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்ற இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக தொடங்கியது முதல் 100 எங்களுக்கு விக்கெட் இழப்பின்றி மிக அருமையாகவே ஆடியது. ஆனால் அதன்பின் 5ம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் அபார பந்துவீச்சால் மடமடவென விக்கெட்டுகள் சரிந்து படுதோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் குறிப்பாக மூன்று பேரைப் பற்றி பேசிய ஆக வேண்டும். இந்த போட்டியின் வெற்றிக்கு காரணமான அந்த மூவர்.

1. சர்துல் தாகூர்.
முதல் டெஸ்ட் இடம்பெற்று பின் காயம் காரணமாக ஆடாமல் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடிய இவரின் ஆட்டமே இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியை தீர்மானித்தது. ஒரு பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டவர் பேட்டிங்கில் அனாயாசமாக இரண்டு இன்னிங்ஸ்லயும் ஆடினார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபா மைதானத்தில் இந்தியா பெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பேட்டிங்கில் இவரது பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. அதன் பின் இந்த டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது. அவரது ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த மொத்த தொடரிலும் இவர் அடித்த ஷாட்கள் போல வேறு எந்த ஒரு ஆட்டக்காரரும் ஆடவில்லை. சமயத்தில் ஆடுவது சச்சின் டெண்டுல்கரா இல்லை சர்துல் தாகூரா என்று சந்தேகம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அவரது சில ஷாட்கள் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களையும், சச்சின் டெண்டுல்கரையும் ஞாபகப்படுத்தியது. அந்தளவுக்கு அபாரமான தன்னம்பிக்கையும் மன உறுதியும் திறமையும் உள்ள ஆட்டக்காரர். இவர் அளவுக்கு தைரியமாக ஆடும் ஒரு ஆட்டக்காரர் இந்த தொடரில் இந்திய அணியில் யாருமே இல்லை என்று சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பந்துவீச்சை மேம்படுத்தினால் நிச்சயமாக ஒரு தலைசிறந்த ஆல்-ரவுண்டராக வர வாய்ப்புண்டு.

2. ரோஹித் சர்மா
ஒரு நாள், t20 போட்டிகளில் தலைசிறந்த ஆட்டக்காரராக விளங்கும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிக் கொண்டே இருந்தார் குறிப்பாக இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் ஆடும்போது.

ஆனால் இந்தத் தொடரில் இவரது ஆட்டம் மிக அற்புதமாக உள்ளது டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கங்களை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக அபாரமாக ஆடுகிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு ஏற்பட்ட துவக்க ஆட்டக்காரர் பிரச்சனை ஒருவழியாக ஒழிந்தது எனலாம். அந்த அளவுக்கு அவ்வளவு அற்புதமான ஒரு ஆட்டத்தை ஆடினார் இவர் சதமடிக்கும் போட்டிகள் எல்லாம் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். அந்த அளவுக்கு ராசியான ஆள். இந்தப் போட்டியின் வெற்றிக்கும் இவரது ஆட்டம் மிக முக்கியமானது எனலாம்.

3. ஜஸ்பிரித் பும்ரா.
இவரைப் பற்றி என்னவென்று சொல்வது இவர் இந்திய ஒன்றிய அணிக்கு கிடைத்த ஒரு வரம் எனலாம். எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரர் ஆடினாலும் இவருக்கு கவலை இல்லை இவர் தனது அதிசயத்தை நிரூபித்துக் கொண்டே இருப்பார். அந்த வகையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆடவே முடியாத அளவுக்கு இரண்டு அசாத்தியமான பந்துகளை வீசி ஆலி போப், பேர்ஸ்டோ இருவரையும் ஆட்டத்தின் மிக முக்கிய கட்டத்தில் bowled செய்தது கண்கொள்ளா காட்சி.1992 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் வாசிம் அக்ரம் இரண்டு இங்கிலாந்து ஆட்டக்காரர்களை அசாத்தியமான in swing பந்துகள் மூலம் தொடர்ந்து இரண்டு bowled செய்வார். அதைப்பார்த்தது போலவே இருந்தது. ஆம், இதை செய்ய வேண்டும் என்றால் அவர் ஒரு அசாத்திய திறமைசாலியாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு அசாத்திய திறமையால்தான் மிக விரைவாக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் என்பது எவ்வளவு அழகானது என்பதை இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.

தொடரை வெல்ல இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு.
வாழ்த்துகள்!!


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி

படம் உதவி:
இணையம்

Leave a Reply