கிந்தியுடன் தாய்மொழியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்ற மத்திய அமைச்சர் அமித்சாவின் பதிவு கேலிக்கூத்தானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.
நாடு முழுவதும் கிந்தி, மற்றும் சமஸ்கிருத திணிப்பு வேலைகளில் மோடி அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்கு மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஆனால், நாடு முழுவதும் மீண்டும் கிந்தித் திணிப்பிற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்குச் சான்றாக அமித்சா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் கிந்தி மொழியால்தான் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று கிந்தி தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், கிந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த கிந்தி நாளில் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
அமித்சாவின் இப்பதிவு, கிந்தியை மீண்டும் திணிப்பதற்கான மறைமுகமான முயற்சியே ஆகும்.
அமித்சாவின் பதிவு என்பது கேலிக்கூத்தானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே மொழி என மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோர் கூறி இருந்தாலும்கூட, அது எம் தமிழ் நிலத்திற்கு எதிரானது. கண்டனத்துக்குரியது.
கிந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழ்நாடே பற்றி எரிந்தது. மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியபோதும், போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் துப்பாக்கி குண்டுகளுக்கு நெஞ்சை நிமிர்த்து காட்டியவர்கள் என் முன்னோர்கள்.
தமிழ்நாடு தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந்துரையை திரும்பப் பெறுங்கள்’ என்று சாசுதிரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இப்படியாக கிந்தித் திணிப்பை விரட்டி அடித்த வரலாறு தமிழர்களுக்கு உண்டு. எனவே, கிந்தியை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கும் முயற்சியில் மோடி தலைமையிலான அரசு ஈடுபடக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். ஆனால், அதையும் மீறி கிந்தியோ அல்லது சமசுகிருதத்தையோ திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மொழிப் போர் நடக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.