Home>>அரசியல்>>சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது – தி.வேல்முருகன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது – தி.வேல்முருகன்

தி. வேல்முருகன்“சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


 

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து வருகிறது.

நகர்ப்புறங்களில் விதிமுறையை மீறி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதோடு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், மக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதேபோன்று, விதிகளை மீறி அமைக்கப்பட்ட சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் வசூல் காலம் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்த நிலையில், தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், தரமான சாலைகள் தேவை என்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும் என்று நிதின் கட்காரி பேச்சு, ஒன்றிய பாஜக அரசின் மோசமான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

எனவே, கொரோனா தொற்று, தொழில் வணிகத் துறையினர் நிதி நெருக்கடி மற்றும் மோசமான வணிகத்தில் இருந்து மீண்டு வர உதவும் வகையில், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.


பட உதவி:
இணையம்.

Leave a Reply