Home>>அரசியல்>>ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!
ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!
அரசியல்தமிழ்நாடுவரலாறு

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதிவெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி இன்று (21.09.2021), அவரது நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

ஈகி வெங்கடாசலம் அவர்கள், தஞ்சை வட்டப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தனிச்சிறப்பானவை! அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.
தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு – உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் – அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது – காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என நான்கு தளங்களில்போ பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஈகி வெங்கடாசலம் ஆவார்.

1970 – 71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. அவரது நினைவுகளைப் போற்றி, நன்றி செலுத்துவது மக்கள் கடமையாகும்!

ஈகி வெங்கடாசலம் அவர்களின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்த, செங்கிப்பட்டியிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் பி. தென்னவன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் இருசக்கர ஊர்திகளில் காமாட்சிபுரத்தில் பேரியக்கக் கொடியை ஏற்றிவிட்டு, பேரணியாகச் சென்றனர். இராயமுண்டான்பட்டியில் அமைந்துள்ள ஈகி ந. வெங்கடாசலம் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை நினைவேந்தல் உரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர், தோழர் தியாகு மற்றும் மாவட்டச் செயற்குழு தோழர் இரெ. கருணாநிதி, க. காமராசு, ஒன்றியக்குழு தோழர் ச. அருள்தாசு, ச. செபஸ்தியார் மற்றும் பேரியக்கத் தோழர்கள், தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply