ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்!
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு இதுதொடர்பாக நாடு முழுவதிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தாங்களும் இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் யாரும் சுட்டிக்காட்டாத வகையில் துப்புரவு
தொழில் செய்து கொண்டு இருந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்கி உள்ளது போல் கூறி உள்ளது அவரையும் அச்சமூகத்தை இழிவுபடுத்துவது போலவும் உள்ளது. இது என்னை போன்ற பலருக்கு மன உலைச்சல் தருகிறது. தங்கள் மீதான மதிப்பு குறைதல் ஏற்படுமோ என வருந்துகிறோம்.
தற்போது முதல்வராக பொறுபேற்க உள்ள சரண்ஜித் சிங் சன்னியை துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு தொழில் செய்தார் என்று சொல்ல முடியுமா? சரண்ஜித் சிங்கின் தந்தை ஹர்சா சிங் ஊராட்சித் மன்ற தலைவராகவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது தெரியுமா உங்களுக்கு?
குப்பை கூட்டி கொண்டு இருந்தவரை முதலமைச்சர் ஆக்கவில்லை அவரது அப்பா உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் என மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கு பட்டு பொதுவாழ்வில் இருந்தவர், அவர் வழியில் அவரது மகனான தற்போதய முதல்வர் சரண்ஜித் சிங் பள்ளியிலே மாணவ தலைவராகவும் இருந்தவர், சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் அவர் இளங்கலையும் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜலந்தரில் எம்பிஏ படிப்பு முடித்தவர்.
இதுமட்டுமல்லாமல் சரண்ஜித் சிங் கவுன்சிலர் பதவியில் மூன்று முறை இருந்திருக்கிறார். அவர் காரர் முனிசிபல் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2007 ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிஸ் கட்சி வாய்ப்பு வழங்காத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் 2012 ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 2015_2016 சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக சட்டபேரவை உறுப்பினர் ஆனதோடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார், அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
இத்தகைய பின்னனி கொண்ட ஒருவரை துப்புரவு பணி செய்து கொண்டு இருந்தவர் என்று சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் என்ன? பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்ல விருப்பம் இல்லை என்றால் வழக்கம்போல ஒடுக்கபட்ட, பிதுக்கபட்ட நசுக்கபட்ட, கசக்கபட்ட, நொருக்கபட்ட சமூகத்தை சேர்தவர் என்றோ, தலித் என்றோ குறிப்பிட வேண்டியது தானே? இந்த அறிக்கையில் உயர் சாதி, தாழ்ந்த சாதி பதங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் இதைபற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் துப்புரவு தொழிலை செய்து கொண்டு இருந்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு பணி செய்தார் என்று சொல்லுங்கள் இல்லையே உங்கள் கருத்திற்கு வருத்தம் தெரிவித்து திரும்ப பெறுங்கள். ராமதாசிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அப்படி சொல்கிறீர்களா அப்படிச் சொன்னால் அது ஏற்புடையதாக என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
பல்வேறு அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஆக்கி இருந்தாலும் கூட இந்த நிகழ்வு வரவேற்க தக்கது. அதே நேரத்தில் மூன்றுமுறை சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவை துப்புரவு தொழிலாளர் என்கிற ரீதியல் உங்களின் இது போன்ற கருணைமிக்க வர்த்தைகள், பச்சாதாபங்கள் அச்சமூகத்தினரை சொல்லாமல் கொள்கிறது . மேலும் தமிழகத்தில் துப்புறவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்க அரசாணையே வெளிட்டுள்ள நிலையில் தாங்கள் இன்னும் மேட்டிமையோடு வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.
நன்றி.
தோழமையுடன்
கா.லெனின்பாபு
20/09/2021