Home>>இந்தியா>>நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்!
நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும்!
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்!

பேராசிரியர் த.செயராமன்நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது!


நாகப்பட்டினம் பனங்குடியில் சி.பி.சி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம்) சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் தொடங்க இருக்கிறது. பனங்குடி, கோபுராசபுரம், முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம் ஆகிய பகுதிகளில் 1338 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கிறது, இப்போது ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலையை 9 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக மாற்றியமைக்க வேலைகள் தொடங்கப்படுகின்றன.

இரண்டாம் கட்டமாக இந்த ஆலை 15 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் என்பது திட்ட அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில், இன்று இருப்பதை விட 15 மடங்கு மிகப்பெரியதாகவும், தென்னிந்தியா முழுவதற்கும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்து தேவையை நிறைவு செய்வதாகவும் இருக்கும்.

இப்போது சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக 606 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தேவையான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ். எம். வைத்தியர மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்) நிர்வாக இயக்குனர் அரவிந்தகுமார் ஆகியோரிடம் வழங்கியிருக்கிறார். நாகப்பட்டினத்தில் இத்தகைய பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை தமிழக அரசு அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

இப்போது இருப்பதை விட ஒன்பது மடங்கு அதிக திறன் வாய்ந்ததாகவும், இரண்டாம் கட்ட கட்டுமானத்தில் 15 மடங்கு அதிக திறன் வாய்ந்ததாகவும் இந்த சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும். இப்போது ஆண்டுதோறும் 10 இலட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இதைப்போல 9 மடங்கு அதிகமாக ஆண்டுதோறும் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் என்றால், இந்த கச்சா எண்ணெய்யை எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள்? இருக்கும் எண்ணெய் கிணறுகளும், சுத்திகரிப்பு ஆலையும் மூடப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதிப்பது அதிர்ச்சியை தருகிறது.

காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, பாதுகாக்கப்பட்ட அதே பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மிகப்பெரும் அளவில் அமைப்பது எப்படி நியாயமாகும்? இங்கு ஏன் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட வேண்டும்?

தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு முன்னமே அறிவித்துள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளையும் கண்ணை இமை காப்பது போல காப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், விரிவாக்கப்படும் நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எங்கிருந்து கச்சா எண்ணெய் எடுப்பதாக இருக்கிறார்கள்? காவிரிப்படுகை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளை நாசமாக்கும் எண்ணெய் – எரிவாயுத் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இருந்தும் எண்ணெய் – எரிவாயு எடுக்கக் கூடாது. கடற்பகுதியும் காவிரிப்படுகையை சேர்ந்ததுதான். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முதற்கட்ட ஏலத்தில் ஓஎன்ஜிசி யும், வேதாந்தா நிறுவனமும் 5034 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க உரிமம் பெற்றன. இதில் காவிரிப் படுகையை ஒட்டியுள்ள கடல் பகுதியும் அடங்கும். அதுபோன்றே, நான்காம் சுற்று ஏலத்தில் காவிரிப்படுகை முதல் இராமநாதபுரம் வரை கடற்பகுதியில் 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியிலும் எண்ணெய் எடுப்பைத் தடை செய்ய வேண்டும். கடற்பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைத்தால் 9 இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடற்பகுதியில் இருந்து மீனவர்கள் விரட்டியடிக்கப் படுவார்கள். ஆகவே தமிழ் நாட்டின் நிலப்பரப்பிலும் கடற்பகுதியிலும் எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

வளமார்ந்த விவசாயப் பகுதிகளை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் அபாயம் எழுந்துள்ளது. ஆகவே இத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.

நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து வழங்கியுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறுவது புதிதல்ல. கடந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை கடந்த கால அ.தி.மு.க அரசு கைவிட்டது. அதுபோன்றே காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்படி அனுமதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த அழிவை காவிரிப்படுகையின் மீது சுமத்தும் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.


பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
23.09.2021

Leave a Reply